tamilnadu

img

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சிபிஎம் தலைவர்கள் சந்திப்பு....

சென்னை;
நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு திமுக தலைமையிலான அணி ஆதரவு அளிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில்  நவம்பர்6 வெள்ளியன்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்  பி.சம்பத் ஆகியோர் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி உடன்பாடு செய்து கொள்வது என்று மத்தியக்குழுமுடிவெடுத்துள்ளது. அதனை, திமுக தலைவரை சந்தித்து தெரிவித்தோம்.மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாயிகளுக்கு விரோதமான 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்; 29 தொழிலாளர் நலச்சட்டங்களை சுருக்கி 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றியிருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நவம்பர் 26 ஆம் தேதிபொது வேலை நிறுத்தத்திற்கு  அறைகூவல்விடுத்துள்ளன.

அந்தப் போராட்டத்தை திமுக தலைமையிலான அணி ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஜி.ராமகிருஷ்ணன் பதிலளிக்கையில்,  தடையைமீறி பாஜக யாத்திரை நடத்துவது சரியல்ல. வழியெங்கும் வன்முறையைத் தூண்டி தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உச்சநீதிமன்ற பரிந்துரைஅடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட்கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆளுநர் காலதாமதம் செய்வது சரியல்ல என்று உச்சநீதிமன்றம் கண்டித்துள்ள நிலையில், 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.