சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது என்றும் இது படிப்படியாக குறையத் தொடங்கும் என்றும் முதலமைச்சருடனான ஆலோசனைக்குப் பின் மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திங்களன்று (ஜூன் 16) ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்துக்குப் பின்னர் மருத்துவ நிபுணர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``நோய் பரவலைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து நாங்கள் ஆலோசித்தோம். எந்தவொரு வைரஸ் தொற்று பாதிப்பும் அதன் உச்சநிலையை அடைந்த பிறகுதான் படிப்படியாகக் குறையும். தற்போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சநிலையை அடைந்துள்ளது. இனிமேல் இந்த பாதிப்புகள் குறையத் தொடங்கும். உச்சநிலையை அடையும்போது அதிகமான பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். சென்னையில் அதிகமான பாதிப்புகள் ஏற்படுவதால், இங்கு பரிசோதனைகளை அதிகரித்து வருகிறோம். சென்னையில் மட்டும் 17,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகம் முழுவதும் 75,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 5,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் 12,500 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சுமார் 253 நடமாடும் மருத்துவமனைகளும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. ஆக்ஸிஜன் சிலிண்டர் தொடர்பான கூடுதல் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன”தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. உச்சம் தொட்ட கொரோனா குறைய ஆரம்பித்தாலும் 3 மாதத்துக்குப் பின் மீண்டும் அதிகரிக்கும். சீனாவில் 2வது அலை ஆரம்பித்தது போல் தமிழகத்திலும் 3 மாதத்துக்குப் பின் ஆரம்பிக்கலாம்.அரசு நடவடிக்கைகள் எடுத்தாலும், முகக் கவசம், தனிமனித இடைவெளி போன்றவை மூலம்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். தலைவலி, காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் அலட்சியப்படுத்த வேண்டாம். உடனே மருத்துவமனைக்கு வரவேண்டும்.
ஒரு நாள் காய்ச்சல்வந்த பின்னர் குறைந்து விட்டது என்பதற்காக அலட்சியமாக இருக்கக்கூடாது. பின்னர் அது முற்றி மூச்சுத்திணறலுக்கு வழி வகுத்துவிடும் எனவே காய்ச்சல், இருமல் வந்தவுடன் மருத்துவமனைக்கு வந்தால் நோய் தீவிரமாவதை தடுத்து காப்பாற்ற முடியும்.பரிசோதனைகள் அதிகமாக செய்ய செய்ய பாதிப்பை கண்டறிந்து உயிரிழப்பை தடுக்க முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை செய்ய கூறியுள்ளோம். சென்னையில் ஒவ்வொரு வார்டுகளிலும் தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட ஆக்சிஜன் சிலிண்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மேற் கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். அவர் அமைச்சரவையில் கலந்து பேசி முடிவுகளை அறிவிப்பார்.இவ்வாறு நிபுணர்கள் கூறினர்.