tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வணிக சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு

சென்னை, டிச.1-  எண்ணெய் நிறுவனங்கள்  ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 16 ரூபாய் அதிகரித்து ரூ. 1,980.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ.61.50 காசுகள் விலை அதிகரித்து இருந்த நிலையில், இந்த மாதமும் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது. வணிக பயன்பாடு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்வதால் ஓட்டல்களில் உணவுப் பொருட்களின்  விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக வணிக சிலிண்டரின் விலை கடந்த ஜூலை  மாதம் முதலே மாதந்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தண்டவாளங்களில் தேங்கிய மழைநீர்: சென்ட்ரலுக்கு பதில் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில்கள்

சென்னை, டிச.1- சென்னை சென்ட்ரலுக்கு பதில் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து சனிக்கிழமை இரவு, எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்பட்டது.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழையும் மிக கன மழையும் வெள்ளிக்கிழமை முதல் பெய்து வருகிறது. இதனால், ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியது. இதன் காரணமாக சனியன்று காலை, புறநகர் ரயில்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டது. மேலும், பலத்த காற்று காரணமாக சென்னை பூங்கா நகர் பகுதியில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்தது. 

வியாசர்பாடி பாலம் அருகே கூவம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக ரயில்கள் செல்லும் பாதை மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, வியாசர்பாடி பாலம் செல்லாமல் கடற்கரை ரயில் நிலையம் வழியாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்றது. மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் சென்னை-கொல்லம், ஈரோடு, திருவனந்தபுரம், பெங்களுரு மெயில், கோவை எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. 

எழும்பூர் - திருநெல்வேலி  சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை,டிச.1- சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் டிசம்பர்  6-ஆம் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலியில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் சென்னை எழும்பூா் செல்லும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06070), மறு மார்க்கமாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் ரயில் (எண் 06069) பிப்ரவரி 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில்கள்  நாகர்கோவிலில் இருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரம் செல்லும் ரயில் (எண் 06012), தாம்பரத்திலிருந்து வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் நாகர்கோவில் செல்லும் ரயில் (எண் 06069) டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாம்பரம் - இராமநாதபுரம் இடையே வாரம் இருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண் 06103/06104) இரு மார்க்கத்திலும் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.