tamilnadu

img

மெட்ரோ ரயில்வே ஊழியர்கள் 7 பேரின் பணி நீக்கத்தை கண்டித்து சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாக அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

மெட்ரோ ரயில்வேயில் ஒப்பந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்தக்கூடாது என்பதை வலியுறுத்தி சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் 7 ஊழியர்கள் மெட்ரோ நிர்வாகத்திற்கு கடந்த ஆண்டு நவம்பரில் கடிதம் எழுதியிருந்தனர். இதனைத் தொடர்ந்து நிர்வாக விவகாரத்தில் தலையிடுவதாக 7 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனிடையே மெட்ரோ ரயில்வே ஊழியர்களுக்கு விடுமுறை,ஊதிய உயர்வு சலுகை உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் நலத்துறையில் வேலைநிறுத்தப் போராட்ட நோட்டீஸ் அளிக்கப்பட்டதையடுத்து மெட்ரோ ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றும் மெட்ரோ நிர்வாகம் தொழிலாளர்கள் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் தொழிலாளர் நலத்துறை கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 7 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில்வே நிர்வாக அலுவலகத்தில் மெட்ரோ ரயில்வே ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மெட்ரோ ரயில்வே நிர்வாக இயக்குநர் போராட்டம் நடத்தும் ஊழியர்களோடு எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த முன்வராத நிலையில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் குடும்பத்தினர் மெட்ரோ ரயில் அலுவலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

;