சென்னை திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் காலவரையன்றி நிறுத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் வரும் ஜனவரி முதல் சொத்து வரியுடன், திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திறந்தவெளி பொது இடங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு ஒரு தனிக்கட்டணம், மற்றும் 500 பேருக்கு குறைவான கூட்டம் என்றால் ரூ. 5000, 501- 1000 பேர் கலந்து கொண்டும் கூட்டத்திற்கு 10 ஆயிரம் ரூபாய், 1000 க்கும் அதிகமானோர் கலந்து கொள்ளும் கூட்டத்தில் ரூ.20 ஆயிரம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்தது. மாநகராட்சியின் இந்த அறிவிப்பிற்கு வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு நலச்சங்கங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியால் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019 இயற்றப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் தமிழக அரசின் அனுமதி பெறப்பட்டு சென்னை மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்ட இந்த திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கழிவு உருவாக்குபவர்கள் வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப திடக்கழிவு மேலாண்மைக்கான பயனாளர் கட்டணத்தை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். அதனடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை பயனாளர்களின் பயனாளர் கட்டணம் சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திடக்கழிவு மேலாண்மைக்கான பயனாளர் கட்டணத்தை நிறுத்தி வைக்க வேண்டுமென பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு குடியிருப்பு நலச் சங்க பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். எனவே, பெருநகர சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் தமிழ்நாடு முதல்வரின் அறிவுறுத்தலின்படி காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுகிறது என ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்".
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.