tamilnadu

img

ஐஐடி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்க மத்திய அரசு முயற்சி! - சிபிஎம் கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நேற்று
(17.12.2020) மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் தலைமையில்
சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு
உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்,
மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி.
சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து
கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு பிற்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும்
வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென்ற மண்டல்
குழுவின் பரிந்துரையை ஏற்று அமலாக்க முடிவு செய்தது. பின்னர் மண்டல்
கமிசன் பரிந்துரைபடி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க
வழிவகை செய்யும் வகையில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் 93வது திருத்தம்
செய்யப்பட்டது. இந்த திருத்தமும், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட
ஒதுக்கீடு வழங்கும் தனிச் சட்டமும் செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்ற
அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பு கூறியது. அதனைத் தொடர்ந்து இதர
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு
வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாவே அரசியல் சட்ட அடிப்படையில் தலித்
மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசினால் அமைக்கப்பட்ட ராம் கோபால் ராவ்
தலைமையிலான குழு, தொழில் நுட்ப நிறுவனங்களான ஐ.ஐ.டி.க்களில் இதர
பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு இட
ஒதுக்கீடு முறை அவசியமில்லை எனவும், ஆசிரியர் பணியிடங்களிலும் இட
ஒதுக்கீடு கூடாது எனவும் பரிந்துரைத்துள்ளது. இது சமூக நீதியைக் குழி

தோண்டிப் புதைத்து, உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட
சமூகங்களுக்கு கிடைத்து வரும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை பறிக்கும்
முயற்சியாகும். இந்திய நாட்டில் சமூக நீதி அடிப்படையில் விளிம்பு நிலை
மக்களுக்கு கிடைத்து வரும் குறைந்த பட்ச வாய்ப்பைக் கூட பறிக்கும் பாஜக
அரசின் நடவடிக்கைகளை சிபிஐ (எம்) மாநிலக்குழு வன்மையாக கண்டிப்பதோடு,
அப்பரிந்துரையை நிராகரித்து, ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களிலும்
கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை தொடர்ந்து அமல்படுத்த
வேண்டுமென்று மத்திய அரசை சிபிஐ (எம்) மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

;