tamilnadu

img

சிஏஏ-வுக்கு எதிராக பிப். 2-ல் கையெழுத்து இயக்கம்

திமுக கூட்டணி கட்சிகள் முடிவு

சென்னை, ஜன. 24- குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பொது மக்களிடம் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடைபெற உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ளி யன்று (ஜன. 24) நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் துரை முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மு.வீரபாண்டியன், கலிபூங்குன்றன் (திராவிடர் கழகம்), மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மல்லை சத்யா, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜாவ`ஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர் கே.எம்.காதர் மொய்தின், அபுபக்கர் எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவள வன், துரை.ரவிக்குமார் எம்.பி., இந்திய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தி யாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், “அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு அதை அமல்படுத்தும் முயற்சியில் ஈடுபடக் கூடாது. தேசிய மக்கள் தொகை பதிவேடு பணியை தமிழகத்தில் அனு மதிக்கக் கூடாது என்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில்  தீர்மானத்தை நிறை வேற்றியுள்ளோம்” என்றார். கூட்டணி கட்சிகளின் அடுத்தக் கட்ட இயக்கமாக பிப்ரவரி 2 ஆம்  தேதியிலிருந்து 8ஆம் தேதி வரை பொது மக்களை சந்தித்து கையெழுத்து பெறப்படும். அந்த படிவங்களை ஒட்டுமொத்தமாக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வழங்க உள்ளோம். இதில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்பார்கள். இதற்கு கட்சிக்கு அப்பாற்பட்டு இருப்பவர்களும், பொது மக்கள், மாணவர்கள், வணிகர்கள், இளைஞர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டது குறித்து எழுப்பிய கேள்விக்கு, “இதுபோன்ற விரும்பத் தகாத சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை வண்மையாக கண்டிக்கிறோம். 95 ஆண்டு காலம் தமிழனத்திற்காக குரல் கொடுத்த தந்தை பெரியாரின் சிலையை சேதப்படுத்துவது என்பது வெட்க்கப்பட வேண்டிய வேதனைப்பட வேண்டிய ஒன்று. அதற்குரிய நடவடிக்கையை ஆளும் அரசு எடுக்க வேண்டும்” என்றார். சிஏஏவுக்கு எதிராக தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் வருகின்ற 30ஆம் தேதி நடைபெறும் மனித சங்கிலி இயக்கம் குறித்த மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில், “திமுக கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற அனைத்து கட்சிகளும் அந்த இயக்கத்திற்கு நிச்சயமாக ஆதரவு அளிக்கும்” என்றும் கூறினார். 7 பேர் விடுதலை குறித்த கேள்விக்கு, அமைச்சரவையே தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அது என்ன நிலையில் இருக்கிறது என கேள்வி எழுப்பியிருப்பது மகிழ்சியளிக் கிறது. தமிழக அரசு ஆளுநரை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்றார். நீட் தேர்வில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறதே என்ற கேள்விக்கு, ஆளும் அதிமுக அரசு இரட்டை வேடம் போடு கிறது. நீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று அக்கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார் கள். தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வை அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியிருந்தார்கள். சட்டப்பேரவையிலும் 2 முறை தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்தையும் அனுமதித்து விட்டு இப்போது நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதாக நாடகம் ஆடுகிறார்கள். இங்கே ஒரு அடிமை ஆட்சி நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. அதனால் மத்திய அரசு அதை துணிந்து அமல்படுத்துகிறது என்றார்.

பெரியார் சிலை உடைப்பு:  கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

பெரியார் சிலை உடைக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வி பதில் அளிக்கையில், “பெரியார் சமூக நீதி, சாதி விடுதலை, பெண் விடுதலை, பகுத்தறிவுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர். அவரை அவமானப்படுத்துவது அவரது சிலையை சேதப்படுத்துவது, அவரை ஒரு விவாதப் பொருளாக மாற்ற மதவெறி சக்திகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது” என்றார். பெரியாரின் தத்துவங்கள், நினைவுகள் நீடிப்பது தங்களுடைய அடிப்படை மதவாத கோட்பாட்டிற்கு விரோதமாக அமையும் என்பதால் இதுபோன்ற சிலை உடைப்புகளில் ஈடுபடுகிறார்கள். அதை வண்மையாக கண்டிக்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் தொடருமேயானால், மதச்சார்பற்ற சக்திகள் சார்பில் அவர்களை நேரடியாக சந்திக்கிற நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்தார்.