tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆபாச  பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் 

சென்னை,அக்.3-  சென்னை சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் ஆபாசமாக பேசிய பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை காவல்துறை வழக்கு பதிவு செய்து கடந்த மாதம் 7 ஆம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில், ஜாமீன் கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு முதலாவது கூடுதல் நீதிபதி ஜெ.சந்திரன் முன்பு கடந்த 27 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.  இதையடுத்து மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 3 ஆம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார். இதையடுத்து, வியாழ னன்று (அக்.3) ஜாமீன் மீதான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசார ணைக்கு வந்தது. அப்போது, மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம்உத்தரவிட்டது.

சீமானுக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் கொந்தளிப்பு

விழுப்புரம்,அக்.3- நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.

 விழுப்புரம் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் சுகுமார் கட்சியில் இருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தொகுதியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது. நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கக்கூடாது. என் இஷ்டப்படி தான் நான் செய்வேன். நீங்கள் இருந்தால் இருங்கள், இல்லாவிட்டால் கிளம்புங்கள். உங்களை யாரும் போஸ்டர் ஒட்டவும் சொல்லவில்லை செலவு செய்யவும் கூறவில்லை என்று சீமான் என்னிடம் கூறினார். எனவே மரியாதை இல்லாத இடத்தில் நான் இருக்க விரும்பவில்லை. நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுகின்றேன் என்று தெரிவித்திருக்கிறார்.

கடந்த சில தினங்கள் முன்பு கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்த போது, ’நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாவட்ட நிர்வாகிகளுடன் எவ்வித ஆலோசனைகளையும் மேற்கொள்ளாமல் தனிச்சையாக முடிவெடுக்கிறார். இத்தனை வருடங்கள் ஆகியும் ஒரு எம்எல்ஏ கூட பெறமுடியவில்லை’ என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். தொடர்ச்சியாக சீமானுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கொந்தளிப்புடன் விலகி வருகின்றனர்.

முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலின் கோரிக்கை நிராகரிப்பு

மதுரை,அக்.3- சிலை கடத்தல்காரர்களுக்கு உதவியதாக சி.பி.ஐ பதிவு செய்த வழக்கில் முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியிருந்தது.சிபிஐ அலுவலகத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தக் கோரி பொன் மாணிக்கவேல்  மனு தாக்கல் செய்தார். 4 வாரம் இன்னும் முழுமை அடையாததால் தற்போது நிபந்தனை யை தளர்த்த முடியாது என்று கூறி அவரது கோரிக்கையை நீதிபதி பரத சக்கரவர்த்தி  நிராகரித்தார். இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 14 ஆம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டது. 

அறநிலையத்துறையின்   ரூ.6 கோடி கோவில் கட்டிடம் மீட்பு

சென்னை,அக்.3- இந்து சமய அறநிலையத்துறையின் சென்னை திருவல்லிக்கேணி, டாக்டர் நடேசன் சாலையில் பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான வணிக கட்டடம் மற்றும் குடியிருப்புகள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுக் கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. 

கோவிலுக்குச் சொந்தமாக டாக்டர் நடேசன் சாலையில் உள்ள சதுரடி பரப்பிலான கடைகள் மற்றும் குடியிருப்புகள் நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கோயில் அதிகாரிகள், காவல் துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஆகியோரின் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு கோயில்வசம் சுவாதீனம் பெறப்பட்டது. 

மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.6 கோடியாகும்” என்று இந்துசமய நிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேதமடைந்த  நூலகத்தை  உடனே மூட நீதிமன்றம் உத்தரவு

மதுரை,அக்.3- இராமநாதபுரம் மாவட் டம் ஆனந்தூரில் உள்ள நூல கத்தை உடனடியாக மூட வேண்டும் என்று உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

ஆனந்தூரில் இடிந்த  கட்டிடத்தில் உள்ள நூல கத்தை இடித்து அப்புறப் படுத்த உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கில் நீதிபதிகள், “மனித உயிரோடு விளையாட வேண்டாம்; கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் நூலகத்தை உடனே மூட உத்தரவிடுகிறோம். பராமரிப்பு பணி செய்யப் போகிறீர்களா? அல்லது புதிய கட்டிடம் கட்டப் போகிறீர்களா? என்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நூலகர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, அக்.3- தென்மேற்கு பருவ மழை படிப்படியாக விலகி வருகிறது. தமிழகத்தில் இன்னும் மழை பெய்து  வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகமாக உள்ளது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதிப்படு கிறார்கள். இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை 3-வது வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதற்கான சாத்தி யக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்துள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வெள்ளிக்கிழமை (அக்.4) ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேல டுக்கு சுழற்சி நிலவி வரும் நிலையில் அது குறைந்த காற்றழுத்தமாக உருவாகும் என்று கணிக்கப்படுகிறது. 6 ஆம் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.