இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துள்ள நிலையில், எல்லை தாண்டியதாக மேலும் 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டத்தின் கீழ் ஒருமுறை கைதாகி விடுதலை செய்யப்பட்ட வெளிநாட்டு மீனவர் மீண்டும் கைதானால் அவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது. அதன்படி கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி 3வது முறையாக எல்லைதாண்டியதாக கூறி கைதான புதுக்கோட்டையைச் சேர்ந்த ராவுத்தர் என்ற மீனவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.இந்த நிலையில், திங்கட்கிழமை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற் படை கைது செய்துள்ளது. அவர்களது 2 படகுகளையும் பறிமுதல் செய்து காங்கேசன் துறைமுக கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.