1978 - கேம்ப் டேவிட் ஒப்பந்தங்கள் என்று அழைக்கப்படும் இரண்டு ஒப்பந்தங்கள், இஸ்ரேலுக்கும், எகிப்துக்குமிடையே 13 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப்பின், வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன. கேம்ப் டேவிட் என்பது, அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில், காக்டன் மலைப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள, அமெரிக்க ஜனாதிபதியின் விடுமுறைக்கால ஓய்விடமாகும். பேச்சுவார்த்தை ரகசியமாக அங்கு நடத்தப்பட்டதால் ஒப்பந்தங்களுக்கு அப்பெயர் ஏற்பட்டது. 1967இல் நடைபெற்ற ஆறு நாள் போரில், எகிப்திடமிருந்து சினாய் தீபகற்பத்தையும், (அப்போது எகிப்தின் கட்டுப்பாட்டிலிருந்த) காஸா பகுதியையும், ஜோர்டானிடமிருந்து கிழக்கு ஜெருசலேம் உட்பட மேற்குக்கரைப் பகுதியையும், சிரியாவிடமிருந்து கோலன் குன்றுகளையும் இஸ்ரேல் கைப்பற்றிக்கொண்டது. இதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கும், எகிப்து, ஜோர்டான், பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஆகியவற்றுக்குமிடையே 1970 ஆகஸ்ட்வரை நடந்த மோதல்கள் தேய்வுப் போர் என்றழைக்கப்படுகின்றன.
1970 செப்டம்பரில் எகிப்து குடியரசுத் தலைவர் கமால் அப்துல் நாசர் மறைந்து, அன்வர் சதாத் புதிய குடியரசுத் தலைவரானார். சினாய் தீபகற்பத்தை மீட்பதற்காக 1973இல் அவர் தொடுத்த யோம் கிப்பூர் போரில், சூயஸ் கால்வாயின் கரையில் சிறிது பகுதியை எகிப்து கைப்பற்றினாலும், எகிப்திடமிருந்து மேலும் சில பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றிக்கொண்டது. இப்போரின் விளைவாக இருதரப்புக்கும் மற்றவரின் படைபலம் பற்றிய மதிப்பீடு மாறியிருந்ததால், அமைதிவழித் தீர்வைநோக்கி நகரத் தொடங்கியிருந்தனர். 1977இல் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜிம்மி கார்ட்டர் இருதரப்புக்கும் அழைப்பு விடுத்ததையடுத்து, கேம்ப் டேவிட்டில் 1978 செப்டம்பர் 5 தொடங்கி நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் இறுதியில், சினாய் தீபகற்பத்தை எகிப்துக்குத் திருப்பியளிப்பதென்றும், சூயஸ் கால்வாயை இஸ்ரேலியக் கப்பல்களுக்குத் திறந்துவிடுவதென்றும் இருவரும் ஒப்புக்கொண்டனர். இஸ்ரேலுடன் ஓர் அரபு நாடு மேற்கொண்ட முதல் ஒப்பந்தம் இதுதான். இதற்காக, அமைதிக்கான அவ்வாண்டின் நோபல் பரிசு, அன்வர் சதாத்துக்கும், இஸ்ரேலியப் பிரதமர் மெனாச்செம் பெகினுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தங்கள், பாலஸ்தீனத்தின் பங்கேற்பின்றி, பாலஸ்தீனப் பகுதிகளைப் பற்றியும் முடிவு செய்ததால், ஐநாவின் கண்டனத்துக்கும் ஆளாகின. அரபு நாடுகள் அரபு லீகிலிருந்து எகிப்தை வெளியேற்றவும் காரணமான இந்த ஒப்பந்தங்கள் மத்திய கிழக்கின் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.
- அறிவுக்கடல்