tamilnadu

img

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி

கோவை, ஏப். 29–தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என சூலூர் சட்டமன்ற தொகுதிசெயல் வீரர்கள் கூட்டத்தில் திமுகபொருளாளர் துரைமுருகன் உரையாற்றினார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக பொங்கலூர் நா.பழனிசாமி போட்டியிடுகிறார். இந்நிலையில் திமுக சார்பில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம்சூலூரில் ஞாயிறன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திமுக தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், 1957 ல் கழகம் முதல் முறையாக போட்டியிட்டபோது, மாணவராக இருந்து திமுகவிற்கு வாக்கு கேட்டேன். இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு,தொடர்ந்து எம்எல்ஏவாகி, பின்னர் அமைச்சராகவும் இருந்துள்ளேன். ஆனால், முதல்முறையாக இவ்வளவு பெரிய செயல்வீரர்கள் கூட்டத்தை பார்க்கின்றேன். யாராலும் இந்த இயக்கத்தை ஆட்டி பார்க்க முடியவில்லை. பண பலம், போலீஸ் பலம் என அனைத்தும் வைத்துள்ள அதிமுகவினர் இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்ட முடிந்ததா?.  

அங்குலமாக பார்த்து வருகிறேன். கண்ணை மூடினால் தளபதி கலைஞராக தோன்றுகின்றார். கலைஞரிடத்தில் கற்ற வரம் தமிழகத்தில் தளபதிக்கு கிடைத்துள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 37 எம்பி தொகுதிகள் தளபதியின் கையில் வந்து விடும். ஒன்று அல்லது இரண்டில் தான் அதிமுக வெற்றி பெறும். சட்டமன்ற தேர்தலில் குறைந்தது 5 இடங்களுக்கு மேல்வெற்றி பெற்றால் தான் ஆட்சி கிடைக்கும் என்பதால் தான் மீண்டும் 3 எம்எல்ஏக்களை நீக்கும் காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சூலூரில் எப்படியும் ஜெயிக்க வேண்டும் என கோடிகளை இறக்கி உள்ளனர். கோவை மக்கள் பணத்திற்கு மோசம் போக மாட்டார்கள். தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சியில் 100 சதவீதம் வெற்றி பெறுகிறோம். சூலூரையும் ஜெயித்து காட்டுங்கள். உலகத்தில் மோடியைப் போல் வெறுப்பை பெற்ற பிரதமர் யாருமே கிடையாது. மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பே இல்லை.

தளபதி அவர்கள் இன்னும் 3 வாரங்களுக்குள் முதல்வராக அமருவார். முன்னதாக திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா பேசுகையில்;- மோடியை வீட்டிற்கு அனுப்புவது தான் இரண்டாவது சுதந்திரப்போர்.

திமுகவின் குரல் தான் மோடியை வீட்டுக்கு அனுப்பும் குரல். மோடி ஆட்சியை வீட்டு அனுப்புகின்ற மிருக சக்தி திமுகவிற்கு உள்ளது. இதேபோல் எடப்பாடி ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம், அதற்கு செயலாற்றுவோம் என்றார்.இக்கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து, திமுககழக துணைப்பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன், சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன், மாநகர்மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.இராமசந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் ஆர்.வேலுசாமி, யு.கே.சிவஞானம், எம்.ஆறுமுகம், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் விஎம்சி மனோகரன், மதிமுக செந்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயலாளர் சுந்தரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிலா மணிமாறன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் தலைவர் அதியமான், திராவிடர் கழகம் சிற்றரசு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அப்துல்கபூர், மனிதநேய மக்கள் கட்சி ஜெம் பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;