சேலம் மாவட்டம் மேற்கு பகுதியில் உள்ள ஓமலூர் வட்டத்திலுள்ள ஓமலூர் ஒன்றியத்தில் 4 ஏரிகளில் 333.41 ஏக்கர் நிலங்களும், தாரமங்கலம் ஒன்றியத்தில் 15 ஏரிகளில் 729.16 ஏக்கர் நிலங்களும், சங்ககிரி வட்டத்திலுள்ள மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் 7 ஏரிகளில் 170.23 ஏக்கர்நிலங்களும், சங்ககிரி ஒன்றியத்தில் 11 ஏரிகளில் 89.33 ஏக்கர் நிலங்களும், மேட்டூர் வட்டத்திலுள்ள நங்கவள்ளி ஒன்றியத்தில் 11 ஏரிகளில் 193.49 ஏக்கர் நிலங்களும், மேச்சேரி ஒன்றியத்தில் 3 ஏரிகளில் 49.06 ஏக்கர்நிலங்களும், எடப்பாடி வட்டம் கொங்கனாபுரம் ஒன்றியத்தில் 28 ஏரிகளில் 1129.60 ஏக்கர் நிலங்களும், எடப்பாடிஒன்றியத்தில் 21 ஏரிகளில் 1533.72 ஏக்கர் நிலங்களிலும்காவிரி சரபங்கா நீரேற்றம் திட்டம் மூலம் பாசனவசதிபெறுகின்றது என கூறப்படுகிறது. அதற்காக ரூ.565கோடியில் திட்டம் துவங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தை நீர்வழி பாதைவழியே கொண்டு செல்லவும், விவசாயிகளை பாதிக்காமல் நிறைவேற்றிடவும் வலியுறுத்தி பாதிக்கப்படும் விவசாயிகளை தமிழ்நாடுவிவசாயிகள் சங்கம் சார்பில் 3.8.20 அன்று சந்தித்து, உரையாடலும், துண்டுப் பிரசுரம் வினியோகமும், சுவரொட்டி ஒட்டுதலும் நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் சென்று விவசாயிகளை சந்தித்து உரையாடினர்.திட்டம் நிறைவேற்றப்படும் மேட்டூர் திப்பம்பட்டி துவங்கி, நங்கவள்ளி, மேச்சேரி, ஓமலூர் ஒன்றியங்களில் கோனூர், விருதாசம்பட்டி, நங்கவள்ளி, பொட்டனேரி, மானத்தாள், பெரியேரிபட்டி, தாரமங்கலம், கொங்கனாபுரம் ஆகிய பகுதிகளில் விவசாயிகளை சந்தித்தனர். செல்லுமிடங்களில் எல்லாம் பாதிக்கப்படும் விவசாயிகள் பலவிதமான குறைபாடுகளை கூறினர்.
உபரி நீர் திட்டமல்ல
“எங்கள் நிலம்வழியே கொண்டு செல்கிறார்கள்; ஆனால் எங்கள் ஏரியில் நீர் சேமிப்பு இல்லை. எடப்பாடி, கொங்கனாபுரம் ஒன்றியங்களில் மட்டும் திட்டத்தின் பெரும்பகுதி உள்ளது. மொத்தம் பயனடையும் 4238 ஏக்கர்களில், 2700 ஏக்கர்வரை முதல்மந்திரி தாலுகாவான எடப்பாடியில் மட்டும் வருகிறது. காவிரிநீரைக் கொண்டு நிரப்பப்படுவதாக கூறப்படும் 100 ஏரிகளில் பெரும்பகுதி எடப்பாடி தாலுகாக்களில் மட்டுமே வருகிறது. மற்றதாலூக்காகளில் குறைவாகவே வருகிறது. 33 கிராம ஊராட்சி, 8 ஒன்றியங்களில், அது சென்றாலும் கொங்கனாபுரம், எடப்பாடி ஒன்றியங்களில்தான் பெரும் பயன்பாடு இருக்கிறது” என விவசாயிகள் கடும் அதிருப்தியில் கூறினார்கள்.மேலும், “மூன்று ஏக்கர் பரப்பில், 100 அடி ஆழத்தில் ராட்சச கிணறு உருவாக்கி, அதில் காவிரி நீரை தேக்கி, ராட்சச பம்பிங்மூலம் ராட்சச குழாய்கள் வழியே எடுத்து செல்லப்படுகிறது” என்றும், “80 அடி அளவில் மேட்டூர் அணையில் நீர்மட்டம் நிரம்பும்போதே இந்த ராட்சச கிணறுகளில் நீர் நிரம்ப ஆரம்பித்துவிடும்” என்றும், “இது காவிரி உபரிநீர் திட்டமே அல்ல; காவிரி ஆற்றுநீரில் முக்கியப் புள்ளியின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு அரசு செலவில் செய்யப்படும் பாசன திட்டம்” என்றும், அதோடு “எந்த காரணத்தைக் கொண்டும் பாதிப்போடு இதை அனுமதிக்க முடியாது. எங்கள் ஊராட்சியில் இத்திட்டம் சம்பந்தமான குழாய்அல்லது வாய்க்கால் சென்றால், எங்கள் ஊராட்சியில் இருக்கும் ஏரி, குளம், குட்டைகளில் நீர் நிரப்பினால் மட்டுமே, அதை அனுமதிப்போம்; இல்லையேல் அனுமதிக்க மாட்டோம்” என விவசாயிகள் கடும் கோபத்துடன் ஏகோபித்த முடிவாக கூறினார்கள். குமுறினார்கள்.
அரசாணை வெளியீடும் 60 நிமிட அவகாசமும்
இந்த நிலையில்தான் 15.10.20 அன்று தமிழ்நாடு அரசு தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களில் அரசாணையை வெளியிட்டு உள்ளது. அதனை தொடர்ந்து 33 ஊராட்சியிலும் வருவாய் அலுவலர்கள் தனித்தனியாக விவசாயிகளுக்கு நோட்டீஸ் காலை 8 மணிக்கு வழங்கிவிட்டு, காலை 10 மணிக்கு நில அளவீடு பணியை போலீஸ் துணை கொண்டு மிரட்டி, முட்டு நடும்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தரும் நோட்டீசில் பதில் அளிக்க 60 நாள் அவகாசம் என்றிருக்கிறது. ஆனால் 60 நிமிடம்கூட அவகாசம் தராமல் நில அளவை மற்றும் முட்டு நடுதலில் அராஜகமாக இறங்கிவிட்டார்கள் வருவாய்த்துறையினர்.விவசாயிகள் விரோதமான இந்த போக்கை கைவிடவும், நீர்வழி பாதைவழியே இத்திட்டத்தை அமலாக்கக் கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், பாதிக்கப்படும் விவசாயிகளுடன் 19.10.2020 அன்று சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து விண்ணப்பம் கொடுத்தோம். “அரசாணை வெளியிட்டபின் நான் ஒன்னும் செய்யமுடியாது” என ஆட்சியர் தனது இரண்டு கைகளையும் கைவிரிக்கிறார்.
600 விவசாயக் குடும்பங்களுக்கு ஆபத்து
இதில் 600க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.மேச்சேரி ஒன்றியம் விருதாசம்பட்டி ஊராட்சியில் ஒரு விவசாயி “எங்கள் குடும்பத்தாருக்கு 4¾ சென்ட் நிலம்தான் உள்ளது. அதன் நடுவில் இக்குழாய் போகிறது. இருபுறத்திலும் துண்டுதுக்காணி நிலத்தை வைத்து என்ன செய்வது?” என்று குமுறுகிறார்.அதே ஊராட்சியில் சமீபத்தில் அரசு மருத்துவர்களை திரட்டி மருத்துவர்களுக்காகவும், மக்களுக்காகவும் போராடி தன் இன்னுயிரை ஈந்த டாக்டர் லட்சுமி நரசிம்மனின் துணைவியார் கண்ணீர் மல்க ஆட்சியரிடமும் நம்மிடமும் சொல்கிறார்... “என் கணவர் சமாதி மீதே இந்த குழாய் பதிக்கப்பட உள்ளது. என்ன கொடுமை இது?” என்று. 19.10.2020 அன்று தவிச உதவியுடன் டாக்டரின் துணைவியார் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, முறையிட்ட அதேவேளையில்தான், அவரது தோட்டத்தில் கம்பு, குச்சிகளை வேலி உள்ளேவிட்டு, சட்டவிரோதமாக போலீஸ் துணையுடன் அளவீடு என்ற பெயரில் அத்துமீறி வருவாய்த்துறையினர் அராஜகம் செய்தது கொடுமையிலும் கொடுமை.
இன்னும் ஒரு திட்டம் எதற்கு? அது யாருக்கு?
கொங்கனாபுரம் ஒன்றியம் வெள்ளாளபுரம் ஊராட்சி விவசாயி ஒருவர் கூறுகிறார்... “ஏற்கனவே எடப்பாடி சித்தூர்-1, சித்தூர்-2 பகுதியில் காவிரி பாசனம் இருக்கிறது; மீண்டும் அதே எடப்பாடி சித்தூருக்கு காவிரி பாசனம் எதற்கு?” என்று. எனவேதான் கேட்கிறோம்... யாருக்காக இந்த காவிரி-சரபங்கா நீரேற்றத்திட்டம்? ஏழை-எளிய விவசாயிகளுக்காகவா? அல்லது ஓரிரு பெரும் நில முதலைகளுக்காகவா? என்பதை முதல்வர் விளக்கமாக தெரிவிப்பாரா? காவிரிநீரை நீர்வழிப்பாதை வழியே கொண்டு சென்று ஏரி, குளம்-குட்டைகளில் நிரப்பாமல், குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே குழாய்வழியே சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் பட்டா நிலங்களில் கொண்டு செல்லும் மர்மம் என்ன? முதலில் தமது நிலம்வழியே காவிரிநீர் சென்றால் தமது நிலத்திற்கு பாசனம்வசதி கிடைக்கும் என விவசாயிகள் ஏமாற்றப்பட்டனர். தற்போது 2013 நில எடுப்பு சட்டப்படி நிலம் எடுப்பதால், மார்க்கெட் ரேட் நிலத்திற்கும், சாகுபடிக்கும் பணம் கொடுத்துவிட்டு, குழாய் பதிக்கப்படும் என ஏமாற்றப்படுகிறார்கள்.
அதோடு 130 அரசு பணிகள் இதனால் உருவாக்கப்படுகிறது; அதில் பாதிக்கப்படுவோருக்கு வேலை கிடைக்கும் என்றும் (சுமார் 600 விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்), 60 அடி அகல நிலம் எடுப்பதால், ரோடு கிடைக்கும்; ரோடு கிடைத்தால், நிலத்திற்கு நல்ல விலை கிடைக்கும் என்றும் ஆளும்கட்சியினரும், வருவாய்த்துறையினரும் விவசாயிகளை குழப்பி, நப்பாசை காட்டி வருகின்றனர்.
வலுக்கும் சந்தேகம்
உண்மையில் இது விவசாயிகளுக்கான திட்டமாக இருந்தால், 33 ஊராட்சிகளிலும் சமமான நீர் பங்கீடு இருக்க வேண்டும் அல்லவா? உதாரணத்திற்கு 100 ஏரிகளில் நீர் நிரப்பப்படுமெனில் ஒரு பஞ்சாயத்துக்கு 3 ஏரிகளில் நீர் நிரப்பப்பட வேண்டும் அல்லவா? 4238 ஏக்கர் பாசன வசதி பெறுகிறார்கள் என்றால், ஒருபஞ்சாயத்துக்கு 120 ஏக்கர்களில் பாசனம் என சமமாக இருக்க வேண்டும் அல்லவா? அவ்வாறெல்லாம் இல்லாமல், மொத்த 4238 ஏக்கர்களில் எடப்பாடி வட்டத்தில் எடப்பாடி, கொங்கனாபுரம் ஒன்றியங்களில் மட்டும் 2663 ஏக்கர்க்குமேல் பாசனம் பெறுகிறது. இது என்னவகை நியாயம்? இங்குதான் சந்தேகமே வலுக்கிறது. குறிப்பிட்ட ஒரு பெரும்புள்ளிக்காகவே இந்த காவிரி-சரபங்கா நீரேற்றத்திட்டம் நிறைவேற்றப்படுகிறதா? என்று!
ஆகவேதான் வரும் 28.10.20 அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், நங்கவள்ளி-குஞ்சாண்டியூர் மெயின் ரோட்டில், மல்லப்பனூர் பிரிவு டாக்டர் லட்சுமி நரசிம்மன் தோட்டத்தில் பாதிக்கப்படும் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்க உள்ளார்.
“நிலம் எங்கள் உரிமை; அதை ஒருபோதும் யாருக்காகவும் விட்டுத்தர மாட்டோம்” என நடைபெற உள்ள இந்த சிறப்பு ஆலோசனை கூட்டத்தில், பாதிக்கப்படும் அனைத்து விவசாயிகளும் பங்கேற்பீர்! தமிழக அரசின் இந்த பாரபட்சமான திட்டத்தையும், அணுகுமுறையை அனுமதியோம் திரண்டு வாரீர்!
கட்டுரையாளர்:பி.தங்கவேலு,தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட துணைத் தலைவர்