அரசு மருத்துவமனை அருகே கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம்
கோவை அரசு மருத்துவமனை அருகே பாதாள சாக்கடை அடைப்பு மற்றும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்லும் கோவை அரசு மருத்துவமனைக்கு அருகிலேயே கழிவுநீர் தேங்கி நிற்பது நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கிறது. துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரக் கேடும் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் மூன்று பள்ளிகள் இயங்கி வருவதால் மாணவ மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தற்போது பொதுத்தேர்வு எழுதும் மற்றும் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு கழிவுநீரை கடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்ள கோவையில் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் முக்கிய சாலைகள் மற்றும் வீதிகளில் கழிவுநீர் தேங்குவதும் குப்பைகள் குவிவதும் தொடர்கதையாகி வருகிறது. இது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, உடனடியாக பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்து குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.