tamilnadu

img

அதிமுக அரசை அகற்றுவோம்! பாஜகவை நிராகரிப்போம்! - கே.பாலகிருஷ்ணன்

அதிமுக அரசை அகற்றுவோம், பாஜகவை நிராகரிப்போம் தமிழகம் நிமிர ஆட்சிமாற்றம் நிகழட்டும் என்கிற முழக்கத்தோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் பத்தாயிரம் குழுக்கள் வீடுவீடாக மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்த உள்ளதாக கோவையில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக சிபிஎம் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்  கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், மத்திய பாஜகவின் ஆட்சியில் மதவெறி எனும் நச்சரவம் படமெடுத்து ஆடுகிறது. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கைகட்டி சேவகம் செய்கிற மோடி அரசு வாக்களித்த மக்களை வஞ்சிக்கிறது. உதாரணமாக, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி, பெட்ரோல் - டீசல், சமையல் எரிவாயுவிலை உயர்வு, கோவிட் -19 பாதிப்பினால் ஏற்பட்ட வேலையிழப்பு, தொழில் முடக்கம் என தொடர் தாக்குதலால் மக்கள் வாழ வழியின்றி தத்தளிக்கிறார்கள். வேளாண்துறையை கார்ப்பரேட்டுகளுக்கு கைமாற்றி விடுவதற்காக மோடி அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்த சட்டத்தையும் (2020)  எதிர்த்து தலைநகர் தில்லியில் விவசாயிகள் 25 நாட்களுக்கும் மேலாக கடும் குளிரில் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவுவிலை இல்லாமல் போகும், அரசு கொள்முதல் கைவிடப்படும், நியாய விலைக்கடைகள் மூடப்படும். ஒப்பந்த முறை விவசாயம் என்ற பெயரில் விவசாயிகளிடமிருந்து அவர்களது விளைநிலங்கள் பறிக்கப்படும். கார்ப்பரேட் முதலாளிகள் அடிமாட்டு விலைக்கு விளைபொருளை வாங்கி பதுக்கி வைத்து கொள்ளையடிப்பார்கள். செயற்கையாக பஞ்சங்கள் உருவாக்கப்படும், பட்டினிச்சாவுகள் தொடர்கதையாகும். இலவச மின்சாரத்தையும் இல்லாமல் செய்ய சட்டத்திருத்தம் வர உள்ளது. அதேபோல, தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளையும் சலுகைகளையும் பறிக்கும் வகையில் முதலாளிகளின் முன்மொழிவுகளை ஏற்று தொழிலாளர் நலச்சட்டங்களையும் முதலாளிகள் நலச்சட்டங்களாக மாற்றி வருகிறது மோடிஅரசு. எட்டுமணி நேரவேலை,  நிரந்தரப்பணி, சட்டப்பூர்வ சலுகைகள் அனைத்தும் முதலாளிகளின் விருப்பத்துக்கேற்ப முடக்கப்படுகின்றன. புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் கல்வித்துறையை மதவெறிமயமாகவும், வணிகமயமாகவும் மாற்றுவது, கல்வியில் மாநிலங்களின் உரிமையை மறுப்பது, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு பறிப்பு, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பெயரில் ஜனநாயகத்தின் சக்கரத்தை உடைக்கமுயற்சி, குடியுரிமைச்சட்டதிருத்தம் என்கிற பெயரில் சிறுபான்மை மக்களின் குறிப்பாக பெரும்பகுதி இஸ்லாமியமக்களின் குடியுரிமையை பறிக்கமுயற்சி,  நர வேட்டையாடப்படும் சிறுபான்மை மக்கள், தொடர்தாக்குதலுக்கு உள்ளாகும் தலித் மக்கள் மற்றும் பழங்குடியினர். பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிர்ச்சி தரத்தக்க வகையில்அதிகரிக்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி என்ற பெயரில் இந்தி, சமஸ்கிருதத்திணிப்பு, தமிழ் உள்ளிட்ட தாய் மொழிகள் புறக்கணிப்பு என இந்திய திருநாட்டின் பன்முகத்தன்மை அழிக்கப்படுகிறது.  ரயில்வே, வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியாருக்கு தாரை வார்ப்பு, வேலைவாய்ப்புகள் முற்றாக பறிப்பு என நாசகரபாதையில் நாட்டை நடத்திச் செல்கிறது மத்திய பாஜக கூட்டணி அரசு. தமிழகத்தை படுபாதாளத்தில் தள்ளிய அதிமுக ஆட்சி பாஜகவின் தப்புத்தாளங்களுக்கு ஏற்ப ஆட்டம் போடும் அதிமுக ஆட்சியில் தமிழகம் இழந்தவை ஏராளம். அனைத்துத்துறைகளிலும் கீழிருந்து, மேல்வரை ஆலவட்டம் போடும் லஞ்சலாவண்யம், கொரோனா காலத்திலும் கொடிக்கட்டி பறக்கும் ஊழல். இந்நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காத நேர்மையான இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ள அவலம், இருந்த வேலையையும் பறித்தது மட்டுமின்றி, புதிய வேலைவாய்ப்புகளும்முடக்கம். கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய அரசுமருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை தரமறுப்பது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேர் படுகொலை, எட்டுவழிச்சாலை, ஆறுவழிச்சாலை என்ற பெயரில் விவசாயிகளின் நிலங்கள் பறிப்பு, நூறு நாள் வேலைத்திட்டத்தை முறையாக செயல்படுத்த மறுப்பு, சாத்தான்குளம் படுகொலை உட்பட காவல்துறை அத்துமீறல் ஜனநாயக உரிமைகள் பறிப்பு போன்ற எதேச்சதிகார நடவடிக்கையில் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. மேலும் மின்வாரியத்தை தனியார்மயமாக்க அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை எதிர்த்து மின் ஊழியர்கள் போராடி வெற்றி பெற்றுள்ளனர். மின்வாரியம் உள்பட அரசுத்துறைகளில் காலியாக உள்ள பல லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மறுபக்கம் தமிழக இளைஞர்கள் படித்து முடித்து வேலையின்றி தவித்து வருகின்றனர். அதேபோல, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள், நீட்தேர்வு, இந்தி, சமஸ்கிருததிணிப்பு, மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய ஜிஎஸ்டி வரிபங்கீடு உள்ளிட்ட பல்லாயிரம் கோடி நிதியை தரமறுப்பது,  பட்டியலின – பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உயர்கல்வி படிப்புக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தை ஒழித்துக்கட்டுவது போன்ற மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க திராணியற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளித்து தமிழக நலன்களையும், மக்களையும் அதிமுக அரசு படுபாதாளத்தில் தள்ளி விட்டுள்ளது. தமிழகத்தை வஞ்சித்துவரும் அதிமுக அரசை அகற்றுவோம், பாஜகவை நிராகரிப்போம்- ஆட்சி மாற்றம் நிகழட்டும்! தமிழகம் நிமிரட்டும்! என்ற முழக்கத்தை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் 2021 டிசம்பர் 25-31 ஆகிய தேதிகளில் ஒருவாரகாலம் மாபெரும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெறுகிறது. இவ்வியக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அணிகள் முழுவதும் களமிறங்கி, 10 ஆயிரம் குழுக்கள் கிராமப்புறம் முதல் நகர்ப்புறம் வரை வீடு, வீடாகச்சென்று மக்களைச்சந்தித்து 50 லட்சம் துண்டு பிரசுரம் விநியோகித்து அதிமுக – பாஜக அரசின் மக்கள் விரோதக்கொள்கைகளை அம்பலப்படுத்தி பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். நாட்டு நலனையும், மக்கள்நலனையும், தமிழகத்தின் எதிர்காலத்தையும் பாதுகாக்க மாற்றுப்பாதைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் இவ்வியக்கத்திற்கு தமிழக மக்களும், ஜனநாயக அமைப்புகளும் பேராதரவு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கையில், கொரோனா காலத்தில் மாதம் 5000 ரூபாய் கொடுக்க சொல்லி கேட்டோம். ஆனால் கருணையற்ற முதல்வர் கொடுக்கவில்லை. மக்கள் பட்டினி கிடக்கும் போது கொடுக்க மறுத்த முதல்வர் இப்போது 2500 ரூபாய் கொடுக்கின்றார். சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டுதான் பொங்கலுக்கு பணம் கொடுக்கும் திட்டத்தை, தனது பிரச்சாரம் துவங்கும் போது முதல்வர்  செயல்படுத்துகின்றார் என குற்றம் சாட்டினார்.  தெரிவித்தார். அதிமுக - பா.ஜ.க கூட்டணியில்  சமரசமற்ற போர் நடக்கின்றது என்பது அவர்களின் செயல்பாடுகள் மூலம் தெரிகின்றது.  அது கொள்கையற்ற கூட்டணி, கூட்டணியில் இருக்க வேண்டிய கட்டாயம் நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  ஆனால் அதிமுக பாஜக கூட்டணி மீது மக்கள் கோபம் அடைந்திருக்கின்றனர். இவர்கள் பணம் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றலாம் என்பது பகல் கனவாகவே முடியும். ஒட்டுமொத்த தமிழக மக்களும் அதிமுக பாஜகவிற்கு எதிரான மனநிலையில் உள்ள போது அதனை ஒருமுகப்படுத்துவதற்கு மாறாக தனியாக போட்டியிடுவது என்பது இவர்கள் எந்த பக்கம் என்பது தெரிய வருகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சி கமலஹாசனின்  கட்சி தேர்தலில் ஓட்டுகளை பிரிக்கதான் பயன்படும். அதனால்தான் அவர்களை அவரை பா.ஜ.கவின்  "பி" டீம் என்கின்றோம். ரஜினி அரசியல் கட்சி துவங்கினால் அது திமுக கூட்டணி கட்சிகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அது அதிமுக, பாஜகவைத்தான் பலவீனப்படுத்தும். மேலும் சினிமா என்பது வேறு, அரசியல் என்பது வேறு என்பதை மக்கள் புரிந்துள்ளார்கள் என்றார். 
இந்த செய்தியாளர் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.