தமிழகத்திற்கு ‘நெற்களஞ்சியம்’ சோழ மண்டலம் என்றால் கேரளாவுக்கு ‘தானியக் களஞ்சியம்’ பாலக்காடு. மேற்குத் தொடர்ச்சிமலைத் தொடர்களுக்கு ஊடாக அமைந்திருக்கிறது இம்மாவட்டம். கோவையை ஒட்டி தமிழக-கேரள எல்லையில் பரந்து விரிந்து கிடக்கும் பசுமையான நெல் வயல்களுக்கு மிகவும் புகழ்பெற்றது. இந்த நகரத்திற்கு அருகாமையில் இருக்கும் மலம்புழா அணை, அதனையொட்டிய தோட்டமும் பரந்து விரிந்து கிடக்கும் புல்வெளிகளும் பூத்துக் குலுங்கும் மலர்களும் சுற்றுலா பயணிகளை கொள்ளை கொள்கிறது. பாலக்காடு நகரத்திற்கும் முண்டூருக்கும் இடைப்பட்ட தூரம் பத்து கிலோ மீட்டர்தான். அந்த சிறிய கிராமத்திற்கு செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் பச்சைப் பசேல் என இயற்கை அழகு கொஞ்சும் பனை மரங்களும் தென்னை மரங்களும் மனதை வருடுகின்றன. அடர்ந்த வெப்பமண்டலக் காடுகள் மலைக்குன்றுகளும் சூழ்ந்திருக்கின்றன. மிக நீண்ட தூரம் பயணம் செய்தாலும் சிறிது நேரத்தில் அந்த களைப்பை மறந்து ரசிக்க வைக்கும் முண்டூர் கிராமத்தின் நுழைவு வாயிலில் வரவேற்கிறது ஒருங்கி ணைந்த கிராம தொழில்நுட்பம் மையம். உலகமே இன்றைக்கு திரும்பி பார்க்கும் அந்த சின்னஞ் சிறிய கிராமம்தான் பாலக்கீழி உன்னி கிருஷ்ணன் சித்ராவின் சொந்த ஊராகும். அவர் பிறந்தது, வளர்ந்தது அனைத்தும் இங்குதான்.
சுவாசம்...
சமவெளி பகுதியில் இருந்தும் அந்த கிராமத்தில் சித்ராவின் குடும்பம் வசதி படைத்தது அல்ல. தந்தை உன்னி கிருஷ்ணன், தாய் வசந்தகுமாரி இருவரும் விவசாய கூலித் தொழிலாளர். குடும்பத்தின் நான்கு குழந்தைகளில் மூன்று பெண்கள் குழந்தைகள். அதில் மூன்றாவதாகப் பிறந்தவர் சித்ரா. அந்தப் பெற்றோர் மகளை சிபிஎஸ்இ, மெட்ரிக் என தனியார் ஆங்கிலவழிக் கல்வியில் சேர்க்கவில்லை. தாய்மொழி வழியில் அரசுப்பள்ளியில் தான் படிக்க வைத்தனர். சிறுவயது முதல் ஓட்டப் பந்தயம் தான் பா.உ. சித்ராவின் மூச்சுக்காற்று என்றால் அது மிகையல்ல. அந்த அளவுக்கு சுட்டி. அவரை மேலும் பட்டைதீட்டியவர் பயிற்சியாளர் சிஜின். குடும்பத்தின் வறுமையால் பயிற்சி பெறுவதற்கு காலில் அணிந்து கொள்ள நல்ல காலணிகள் கூட கிடையாது. தடகள போட்டியில் பங்கேற்கும் பலரது சோகக்கதையை போன்றே இவரது வாழ்க்கையிலும் நடந்தது. சித்ராவின் திறமைக்கு பக்கபலமாக அம்மாநில மக்களுடன் கேரள இடதுமுன்னணி அரசும், நீதிமன்றமும் துணை நிற்க சாதனை மங்கையாக உருவெடுத்தார்.
தடம்பதித்த கால்கள்...
தினசரி காலையில் 5 மணிக்கு எழுந்து பயிற்சிக்கு செல்லும் சித்ரா 8 மணிக்கு வீட்டுக்கு வந்து 9 மணிக்குள் பள்ளிக்கு கிளம்பி விடுவார். திரும்பவும் மாலை 4 மணிக்கு பள்ளி வகுப்புகள் முடிந்ததும் பயிற்சிக்குச் செல்லும் அவர் மீண்டும் இரவு எட்டு மணிக்கு தான் வீடு திரும்புவார். வீட்டில் சாப்பாடு இல்லை என்றாலும் கவலைப்படுவதில்லை. விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற லட்சிய வெறி இருந்தது. அதுதான் இன்றைக்கு தங்கப் பதக்கமாக அறுவடையாகி வருகிறது. பயிற்சியாளர் சிஜின் பயிற்சியால் பள்ளியிலிருந்து மாவட்டம், அங்கிருந்து மாநிலம், பின்னர் தேசியம் என அவரது கால்கள் ஓடத் துவங்கின. அதில் கிடைத்த வெற்றிகள் ஆசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தடம் பதிக்க வைத்தன.
அந்த முதல் பதக்கம்...
அசாம் மாநிலம் கவுகாத்தியில் 2016 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டியில்தான் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். அடுத்த ஆண்டில், ஆசிய உள்ளரங்கு மற்றும் தற்காப்பு விளையாட்டிலும் தங்கத்தை தட்டி வந்தார். அதே ஆண்டு ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரத்தில் நடந்த 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பிரகாசித்தவர்களில் இவரும் ஒருவர். இளம் வீராங்கனை சித்ராவின் அன்றைய வெற்றி தனித்துவம் வாய்ந்தது. பெண்களுக்கான 1,500 மீட்டரில் பந்தய தூரத்தை 4 நிமிடங்கள் 17.92 நொடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். எல்லைக் கோட்டைத் தொடும்போது பெய்த மழைகூட, அவரது வெற்றியைத் தடுக்க முடியவில்லை. இந்த வெற்றியின் மூலம் நேரடியாக உலக சாம்பிய ன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். ஆனாலும், தேர்வுக்குழுவின் அரசியல் விளையாட்டில் அந்த வாய்ப்பு கை நழுவியது.
நீதிகேட்டு ஒரு பயணம்...
ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பிடித்த தங்கம் மங்கையான சித்ரா, உயர்ந்த மலைப்பகுதியில் பெற வேண்டிய, சிறப்பு பயிற்சிகளையும் பெற்றிருந்தாலும் உலக போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில், பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு நீதி கேட்டு பயிற்சியாளர் சிஜின், கேரள உயர்நீதி மன்றத்திற்கு சென்றார். ‘சித்ராவை, சர்வதேச தடகள போட்டிக்கு அழைத்து செல்ல வேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நீதி அவர் பக்கம் நின்றாலும் அந்த முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.
விடியலை நோக்கி...
அடுத்தடுத்த போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைக்க மீண்டும் களம் இறங்கிய சித்ரா, தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மைய மைதானத்திலும், கர்நாடக மாநிலம் பெங்களூரிலும் தீவிர பயிற்சி எடுத்தார். அவரது இந்த வைராக்கியம்தான் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கத்தார் நட்டின் தலைநகர் தோகாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது முறையாக தங்கம் வென்று கொடுத்தது. அவரது வெற்றி 130 கோடி இந்திய மக்களையும் பெருமை அடைய வைத்திருக்கிறது. இந்த ஒரே வெற்றியின் மூலம் அத்தனை வலிகளுக்கும் வேதனைகளுக்கும் விடியல் கிடைத்தது.
மக்களின் முதல்வர்...
23வது ஆசிய தடகள சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற கேரள மங்கை சித்ராவுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் பினராயி விஜயன், அவரது குடும்ப ஏழ்மையை அறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்போம்’ என அறிவித்ததோடு நின்று விடவில்லை. அரசு சார்பில் ‘நானோ’ கார் ஒன்றை பரிசாக வழங்கி செய்தும் காட்டினார். அந்தக் காரை சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்ல சாலை வசதி அவ்வளவாக இல்லை என்பதை அறிந்த பினராயி விஜயன், அந்த கிராமத்திற்குத் தரமான சாலை அமைத்தும் கொடுத்தார். மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதுடன், நீண்ட போராட்டத்திற்கு பிறகு ரயில்வேயில் வேலையும் வாங்கிக் கொடுத்து தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் அளித்து வரும் இடது முன்னணி அரசையும் முதல்வரையும் சித்ராவின் பெற்றோர் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.
பட்டை தீட்டிய வைரம்...
கிரிக்கெட்டை மட்டுமே பிரதானமாக பார்க்கும் இந்நாட்டில் மற்ற விளையாட்டுகளை பற்றியோ அதில் நடக்கும் அரசியல்களை பற்றியோ புரிந்து கொள்வது சற்று கடினமே. ஏழ்மையைக் கடந்து, விளையாட்டு அரசியலை முறியடித்து, காயத்திலிருந்து மீண்டு, வியர்வை சிந்தி, வெற்றிகரமாக ஓடி தங்கம் வென்று வைரமாய் ஜொலிக்கிறார் சித்ரா. வானம் பார்த்த பூமியான அந்த கிராமத்திலிருந்து உலக அளவில் ஒரு வீராங்கனையாக உருவாக முக்கிய பங்கு வகித்தது பயிற்சியாளர் சிஜின், தந்தை உன்னி கிருஷ்ணன்தான். நேற்று (ஜூன் 9) 24வது வயதில் அடியெடுத்து வைத்த இந்திய தடகள இளம் வீராங்கனை சித்ராவின் வெற்றிக்குப் பின்னால் அசுரத்தனமான உழைப்பு இருக்கிறது. அவருடைய குடும்பத்தின் துணை இருக்கிறது. உலக அளவில் மேலும் சாதனைகள் படைக்க அனைவரும் வாழ்த்துவோம்!