tamilnadu

மோடியிடம் சொல்லி ஜிஎஸ்டியை குறைப்பார்களாம்

பணமதிப்பிழப்பு அறிவிப்பு, ஜிஎஸ்டிவரி விதிப்பினால் நிலை குலைந்து போயிருக்கும் திருப்பூரில் பிரச்சாரம் செய்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, மோடி ஆட்சியில் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் பிரச்சனை என சொல்கிறார்கள், எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் மோடியிடம் சொல்லி ஜிஎஸ்டி வரியைக் குறைப்போம் என்றார். ஆனால் ஜிஎஸ்டி வரி அமலாக்கப்பட்டு 21 மாதங்கள் முடிந்துவிட்டது. இந்த வரி விதிப்பினால் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தபோது இவர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. சிறு, குறு தொழில்கள் குற்றுயிரும், குறை உயிருமாக தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. தேர்தல் வந்தவுடன் இப்போது இங்கு வந்து மோடியிடம் சொல்லி ஜிஎஸ்டியை குறைக்கப் போகிறார்களாம். ஏற்கெனவே தமிழ்நாட்டுக்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த 37 எம்.பி-க்கள் என அசுரபலத்தில் இருந்தும் மக்கள், தொழில் பிரச்சனைகள் பற்றி வாய் திறந்து பேசவில்லை. மாநில ஆட்சியாளர்கள் கேட்ட ஒன்றிரண்டு பிரச்சனைகளிலும் மோடி இறுமாப்புடன் அலட்சியப்படுத்தி விட்டார். அதற்கும் இவர்கள் எதிர்வினை ஆற்ற

வில்லை. ஆனால் இனி மறுபடியும் அவர் ஆட்சிக்கு வந்து அவரிடம் இவர்கள் ஜிஎஸ்டியை குறைக்கச் சொல்லப் போகிறார்களாம். கேட்பவர்கள் காதில் நன்றாகப் பூ சுற்றுகிறார் பிரேமலதா என்று அந்த இடத்திலேயே சிலர் பேசிக் கொண்டனர். நீங்க ஆணியே பிடுங்க வேணாம், இதுவரை பிடுங்குனது போதும், என்றும் வடிவேலுஸ்டைலில் நக்கலாகத் தங்கள் கோபத்தையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.