“மோடி இந்தியாவிலேயே இருப்பதில்லை, 85 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றிருக்கிறார் என எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். நட்பை வளர்ப்பதற்காக வெளிநாடு செல்கிறார். ஆனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஒரு பிரச்சனை என்றால் அவர் உடனே தக்க பதிலடி கொடுப்பார். நாட்டின் பாதுகாப்புக்காக புல்வாமா தாக்குதலை நடத்தினார் மோடி!” என்று திருப்பூர் வெள்ளியங்காடு, எம்.எஸ்.நகர் பகுதிகளில் நடைபெற்ற கூட்டங்களில் முழங்கினார் பிரேமலதா விஜயகாந்த். காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டனர். நாடே அதிர்ச்சி அடைந்த இச்சம்பவம் தொடர்பாக பல ஐயங்கள் எழுந்தன. மிகவும் சிக்கல் நிறைந்த அந்த பகுதிக்கு 2000க்கும் மேற்பட்ட வீரர்களை ஒரே அணியாக அனுப்பியது ஏன்? அடுத்தடுத்து சோதனைச் சாவடிகள், பலமான பாதுகாப்பு ஏற்பாடு இருக்கும் அப்பகுதியில் அவை எல்லாவற்றையும் மீறி, பல நூறு கிலோ வெடிபொருட்களுடன், காரில் வந்து ஒரு பயங்கரவாதியால் எப்படி தாக்குதல் நடத்த முடிந்தது? ஏற்கெனவே உளவுத்துறை எச்சரித்திருந்தும் அதை தடுக்க தவறியது
ஏன்? என பல கேள்விகளுக்கு மத்திய அரசு தெளிவான பதில் எதையும் தரவில்லை. ஆனால் சில நாட்களுக்கு முன்பாக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த பிரேமலதா, புல்வாமா தாக்குதலை மோடிதான் நடத்தினார் என ஒன்றுக்கு, இரண்டு இடத்தில் சொன்னது வாய் தவறி வந்த வார்த்தைகளா அல்லது நெஞ்சம் அறிந்த ரகசியத்தை அவரையும் அறியாமல் வெளிப்படுத்திவிட்டாரா? என்று அந்த கூட்டத்துக்கு வந்த இருவர் பேசிக் கொண்டனர். பிரேமலதா வீராவேசமாக இதைச் சொல்லிக் கொண்டிருந்தபோது விரல்விட்டு எண்ணத்தக்க பாஜகவினரும் அங்கு இருந்தனர். அவர்கள் உற்சாகமாக கைதட்டிக் கொண்டிருந்ததுதான் உச்சக்கட்ட சோதனை.