கோவை மாநகரமானது தங்க நகை தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். குறிப்பாக, மாநகரின் மேற்கு பகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளிகள் தங்க நகை தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலாளர்களின் தற்போதைய தொழில் நிலை குறித்து நாம் பேசுகையில்,
கோபி
தங்கம் கொடுப்பாங்க. என்னை போன்றவர்கள் அதனை நகையாக செய்து கொடுப்போம். நான் மோதிரம் செய்து தருகிறேன். முதல்ல உருக்கனும், டையிங் செய்ய வேண்டும். பின்னர் நகைகள் செய்யணும். மெருகேற்றனும். இவை எல்லாவற்றிலும் சேதாரம் இருக்கும். அப்பல்லாம் கூலியா 10 டச் கொடுத்தாங்க. இப்ப 3 டச் தான் கொடுக்கிறாங்க. அதாவது 100 கிராம் தங்கத்துக்கு நகை செய்து கொடுக்கும் போது 97 கிராம் கொடுத்தா போதும். இப்பணி முடிய 15 நாட்களாகும். எஞ்சிய 3 கிராம் தான் கூலி. சேதாரம் போக 3ல் 1பங்குதான் கிடைக்கும். இந்த மிச்சம் மீதியுள்ள தங்கத்தை சில்லரை தங்கம் வாங்குவோரிடம் கொடுத்து கிடைக்கும் தொகைய வைத்து சாப்பிடணும், வாடகை கட்டணும். இப்படி உறுதியான வருவாய் இல்லாததால, இந்தவேலை செய்ற ஆளுக்கு யாரும் பொண்ணு கொடுக்கறதில்லை. இதனால் அடுத்த தலைமுறையினர் இந்த தொழிலுக்கே வருவதில்லை. தொழில் ரொம்ப மோசமாயிருச்சு. 4, 5 வருசத்துக்கு முன்ன நல்லா இருந்துச்சு. செல்லாத நோட்டு, ஜிஎஸ்டிக்கு அப்புறம் சிறு குறு தொழில் முடிஞ்சு போச்சு. முதலாளிகள் தைரியமாக முதலீடு செய்வதில்லை. எங்களுக்கும் வேலையில்லாம போச்சு என்றார்.
பரமேசன்
கோவை மேற்கு பகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இப்ப வெளி மாநில தொழிலாளர்கள் வந்து விட்டனர். 2, 3 வருசத்தில இந்த வேலைய பழகிட்டாங்க. ஆலை தொழிலாளியைப் போல அடைத்து வைத்து வேலை வாங்குகின்றனர். உள்ளே செல்லும் போதும் செக் செய்து அனுப்புவார்கள். வெளியே வரும் போதும் சோதனையிட்ட பிறகே விடுகிறார்கள். நமக்கு 4 டச் கொடுக்கனும்னா, அவங்களுக்கு 2 டச் கொடுத்தா போதும். அவங்க 12 மணி நேரம் வேலை செய்கின்றனர். இரவு பகலாக வேலை செய்கின்றனர். செல்லாத நோட்டு, ஜிஎஸ்டியால எல்லா தொழிலும் நசிஞ்சு போச்சு. கையில இருந்த கொஞ்ச காசும் இல்லாம போயிருச்சு. வேலை செய்து ஒன்னரை மாதமாச்சு. எனக்கு 10ம் வகுப்பு படிக்கிற மகனும், 8ம் வகுப்பு படிக்கிற மகளும் இருக்கிறாங்க. கொத்தனார் வேலை செய்வோர்க்கு உள்ள நிம்மதி இந்த ஆசாரி வேலைக்கு இல்லை என்கிறார் வேதனையோடு.
பாலன்
100 பேருக்கு வேலை கொடுத்த முதலாளி இன்னிக்கு 10 பேருக்குத் தான் வேலை கொடுக்கிறாரு. பிஜேபி ஆட்சியிலதான் இந்த நிலமை. நிறைய போ் இந்த தொழில விட்டு போயிட்டாங்க. பெயிண்ட் அடிக்கவும், கட்டட வேலைக்கும், வாட்ச்மேன் வேலைக்கும் போய்ட்டாங்க. சேல்ஸ்மேன், பூக்கடைக்கும் சிலர் போறாங்க. இந்த நிலை மாறணும், ஆட்சி மாறணும். தொழில் பழைய நிலைக்கு திரும்பணும். சிறு முதலாளிங்க பயப்படாம தைரியமா தொழில் செய்ற நிலமை வரணும். அப்போதுதான் எங்களுக்கு வேலை தொடர்ந்து கிடைக்கும்.
- சக்திவேல்