சேலம், மே 22-சேலத்தில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கடத்தப்பட்ட நிலையில், சில மணி நேரங்களில் மீட்கப்பட்டார்.சேலம் மாவட்டத்தின் மையப்பகுதியான சத்திரம் அருகே உள்ள முள்ளாகாடு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, நித்யா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள்உள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு வெளியே சாலையோரம் விளையாடி கொண்டிருந்த அவர்களது மூன்று வயது மகன் யோகேஸ்வரனை அந்த வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் கடத்திச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர்கள் உடனடியாக செவ்வாய்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இது தொடர்பாக மாநகர துணை ஆணையாளர் தங்கதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் குழந்தை கடத்தல் குறித்து அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைஆராய்ந்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் காவல்துறை தேடுவதை அறிந்து சேலம் சூரமங்கலத்தை அடுத்த சேலத்தாம்பட்டி பகுதியில்யோகேஸ்வரனை முட்புதரில் விட்டுவிட்டு கடத்தி சென்ற இரண்டு பெண்களும் தப்பிச் சென்றுள்ளனர். இதனை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், குழந்தையை மீட்டு சேலம் செவ்வாய்ப்பேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் குழந்தையை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து குழந்தை கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பெண்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.