tamilnadu

தருமபுரி மற்றும் ஈரோடு முக்கிய செய்திகள்

தருமபுரி அருகே அடுத்தடுத்து வீடுகளில் தொடர் கொள்ளை


தருமபுரி, ஏப். 24-தருமபுரி நகரத்தில் அடுத்தடுத்து வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.தருமபுரி நகராட்சிக்குட்பட்ட அன்னசாகரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவர் சிறை துறை கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கலைச்செல்வி. ஏப்.23 ஆம் தேதியன்று இரவு அவரது வீட்டினுள்புகுந்த கொள்ளை கும்பல் கலைச்செல்வி கழுத்தில் அணிந்து இருந்த6 சவரன் தங்க நகையை பறித்துள்ளனர். இதையடுத்து அவர் கூச்சலிடவே கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.முன்னதாக, இதே கொள்ளையர்கள் கலைச்செல்வி வீட்டில் கொள்ளையடிப்பதற்கு முன்பு அவரது வீட்டிற்கு எதிரே குடியிருந்த செல்வம் என்பவரது வீட்டின் கதவையும் உடைக்கமுயற்சி செய்தது தெரியவந்தது.இதேபோல், தருமபுரி நகரம் பாரதிபுரம் குமரபுரி காலனியில் வசிப்பவர் அசோகன் (52). இன்சூரன்ஸ் அலுவலராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி கர்லின்ராஜ். இவர் மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கணவன்-மனைவி இருவரும் கீழ் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். வீட்டின்மாடியில் நள்ளிரவு புகுந்த கொள்ளையர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ஹோம் தியேட்டர் பிளேயர், 2 கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்று விட்டனர். இதன்மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும்.இவர்கள் வீட்டில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு ஏற்கனவே 6 சரவன் நகை கொள்ளை போனதுடன், பக்கத்து வீடுகளில் வசித்த 2 பேரின் வீடுகளிலும் கொள்ளை நடந்தது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டோர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் கொள்ளை நடந்தது அப்பகுதியினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, இந்த இரு கொள்ளை சம்பவங்கள் குறித்து தருமபுரி நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தனியார் பேருந்துகள் மோதல் - 15 பேர் காயம்


ஈரோடு, ஏப். 24-ஈரோடு அருகே புதனன்று அதிகாலை இரு தனியார்பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 15 பயணிகள் படுகாயமடைந்தனர்.சென்னையில் இருந்து கோவை நோக்கி தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் 15 பேர் பயணம் செய்துள்ளனர். பேருந்தை வேலூரை சேர்ந்த கன்னியப்பன் (48) என்பவர் ஓட்டியுள்ளார். இந்நிலையில் புதனன்று அதிகாலை 4 மணியளவில் ஈரோட்டைஅடுத்த பவானி லட்சுமிபுரத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்து மீண்டும் புறப்பட்டுள்ளது. அப்போது பின்னால் பெங்களூரில் இருந்து கோவை நோக்கி மற்றொரு தனியார் சொகுசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 25 பேர் இருந்தனர். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த சென்னை சொகுசு பேருந்து மீது பெங்களூரில் இருந்து வந்த சொகுசு பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் முன்னால் சென்ற சொகுசு பேருந்து நிலைதடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் இறங்கியது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதே சமயம் அந்த பேருந்து மீது மோதிய பெங்களூர் சொகுசு பேருந்தில் வந்த கோவையை சேர்ந்த விஷ்ணு (27), சோனா (23), கலையரசு (28), லட்சுமணன் (60) உள்ளிட்ட 15 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் ஈரோடு மற்றும் பவானி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சித்தோடு காவல்துறையினர் விரைந்து சென்றுஇடிபாட்டுக்குள் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து சித்தோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.