tamilnadu

img

‘வரலாற்றை மறப்பவர்களை வரலாறு தண்டிக்கும்’ .... கேரள சட்டமன்றத்தில் ஸ்வராஜ் பேச்சு

திருவனந்தபுரம்:
1935இல் யூதர்களுக்காக தடுப்பு காவல் மையங்களை உருவாக்கிய ஹிட்லர் லட்சக்கணக்கானோரை கொன்றுகுவித்தான். அடுத்த பத்து ஆண்டுகளில் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டான். வரலாற்றை மறப்பவர்களை வரலாறு தண்டிக்கும்  என்று கேரள சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஸ்வராஜ் கூறினார்.குடியுரிமை திருத்த சட்டம் குறித்த சிறப்புக் கூட்டத்தில் அவர் மேலும் ஆற்றிய கனல் பேச்சு வருமாறு :

இந்திய மண்ணில் பல்லாண்டு காலமாக வாழ்ந்த இந்தியாவின் முதல் குடிமகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட பக்ருதீன் அலி அகமதுவின் குடும்பத்திற்கு எப்படி குடியுரிமை இல்லாமல் போனது? காஷ்மீரில் எல்லையை பாதுகாத்ததற்காக குடியரசுத்தலைவரின் விருது பெற்ற முகம்மது சனாவுல்லாகான் எப்படி இந்திய குடியுரிமை இல்லாதவராக மாறினார்? இந்திய ராணுவத்தில் சிறந்த சேவை புரிந்த முகம்மது அஸ்மல் எப்படி இந்திய குடியுரிமை இல்லாதவராக மாறினார். இதற்கெல்லாம் நீங்கள் பதிலளித்ததாக வேண்டும். வேண்டுமென்றே இந்த நாட்டின் கணிசமான பகுதியினரை அடித்து விரட்டவும், தடுப்பு முகாம்களுக்குள் தள்ளவும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும் இது.  மதிப்புக்குரிய அவை உறுப்பினரான ராஜகோபாலனால் (பாஜக), இந்த 90ஆவது வயதிலாவது மனிதாபிமானத்தின் வெளிப்பாடான ஒரு வார்த்தை இங்கே கூறமுடியவில்லை என்றால், உங்களது அரசியல்எந்த அளவுக்கு மலினமான, வன்மம்கொண்டது என்பதை அச்சத்துடன் நாங்கள் புரிந்து கொள்கிறோம். இங்கே வசிப்போரிடம் அடை யாளம் கேட்கிறார்கள். பல்லாண்டுகளாக இந்த மண்ணில் வசிப்போரிடம் குடியுரிமை கேட்கப்படுகிறது.  அனைத்து மதங்களையும் சேர்ந்த- தீரச்செயல்கள் புரிந்த ஏராளமான ரத்த சாட்சிகள் இங்கு உள்ளனர்.
     முஸ்லீம் சமுதாயத்தை ஒரேயடியாக ஒடுக்கவும் அடித்து விரட்டவும் உதவும் இந்த சட்டத்தை கொண்டுவரும் நீங்கள் மலபாரின் விடுதலை வரலாற்றை அறிவீர்களா? எத்தனை எத்தனை அனுபவங்கள் அங்கு உள்ளன. 1852இல் ஆங்கிலேயர் நாடுகடத்திய சையத் பசல் பூக்கோயா தங்ஙள் எனும் மாவீரன் பெயரை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? வாழக்காடு அருகில் கொந்நாரா என்றொரு கிராமம் உண்டு. அந்த கொந்நார மகாம் இன்று வரலாற்றுச் சின்னமாக காட்சி அளிக்கிறது. முஸ்லீம் வழிபாட்டுத் தலமாக இருந்தது அது. ஆங்கிலேயர் குண்டுவீசி தகர்த்தனர். அன்று விடுதலைப் போரின் ஒரு மையமாக அது விளங்கியது. இன்றும் அந்த இடத்தை கடந்து செல்லும்போது கொந்நார மகாமின் சுவர்களில் வெடிகுண்டுகளை பார்க்கலாம். அங்கிருந்து ஆங்கிலேயர்கள் பிடித்துச் சென்ற சையது முகம்மது கோயா தங்ஙளை கோயம்புத்தூரில் வைத்து தூக்கிலிட்டுக்  கொன்றனர்.

 உங்களுக்கு வாரியம் குந்நத்து குஞ்ஞகம்மது ஹாஜி என்கிற பெயர் தெரியுமா? ஆங்கிலேய ராணுவ அடக்குமுறைக்கு சவால்விட்டு சொந்தமாக ஒரு நாட்டை உருவாக்கியவர். அவரது குடியரசுக்கு அவர் சூட்டிய பெயர் ‘மலையாள ராஜ்யம்’ என்பதாகும். ராணுவ பலத்தால் அவர் வீழ்த்தப்பட்டார். மிருகத்தனமான தாக்குதலின்போது மீசையின் ஒவ்வொரு முடியாக பிடுங்கி எடுத்தனர். இறுதியாக ஒரு வாய்ப்பை அவர்முன் வைத்தனர். நீங்கள் மன்னிப்புக் கடிதம் எழுதித் தந்து விடுதலைப்போரை முடிவுக்கு கொண்டுவந்தால் நீங்கள் மெக்காவில் மகிழ்ச்சியாக வாழ ஏற்பாடு செய்து தருகிறோம் என்று பிரிட்டிஷ்  உயர் அதிகாரி கூறினார். அப்போது குஞ்ஞகமது ஹாஜி கூறினாராம், மெக்கா எனக்கு விருப்பமானதே. ஆனால், நீங்கள் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள். நான் பிறந்து விழுந்தது மெக்காவில் அல்ல; போராட்டங்களின் வீரகாவியங்கள் நிறைந்த எறநாட்டில். இந்த மண்ணில் நான் செத்து மடிவேன். இந்த மண்ணில் கரைந்துபோவேன், என்கிற வார்த்தைகள்தான் அவரிடமிருந்து பதிலாக வந்தது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவர் கூறினார், பிறந்த மண்ணுக்கு ரத்த சாட்சியாக மாறும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று. முகத்தை மறைத்து பின்னாலிருந்து சுட்டு கொன்று தண்டனையை நிறைவேற்றும் வழக்கத்தை அனுமதிக்காமல் கண்ணை கட்டக்கூடாது, முகத்துக்கு முன்னால் நின்று சுடவேண்டும் என தண்டனையை கேட்டு வாங்கிய தீரர்களின் நாடு இது.

1935இல் யூதர்களுக்காக தடுப்பு காவல் மையங்களை உருவாக்கிய ஹிட்லர் லட்சக்கணக்கானோரை கொன்றான். அடுத்த பத்து ஆண்டுகளில் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டான். மனிதாபிமானம் இல்லாமல் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் ஓஷ்விக்ஸ் கான்சன்ட்ரேசன் முகாமில் எழுதியுள்ள வாசகம், ‘வரலாற்றை மறப்பவர்களை வரலாறு தண்டிக்கும்’.இவ்வாறு அவர் பேசினார்.

;