பினராயி விஜயன் உருக்கமான கடிதம்
அன்புடையீர்,
தொடர்ந்து இரண்டாம் ஆண்டும் நமது மாநிலம் பெரியதொரு மழை - வெள்ளப் பாதிப்பைச் சந்தித்துள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள் முழுவதுமாகச் சிதைந்தன. மேலும் பலமடங்கு வீடுகள் பாதிஅளவிற்கும் மேல் சிதைந்துள்ளன. பல இடங்களிலும் நீர்மட்டம் இப்போதும் உயர்ந்து நிற்கிறது. அதனால் ஏற்பட்டுள்ள இழப்புக்களை முழு அளவில் மதிப்பிடுவதற்கு நம்மால் இப்போதும் முடியவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்து சேருகிற இயற்கைத் துயரத்தைக்கூட எதிர்கொள்வது நம்மைப் போன்ற ஒரு மாநிலத்திற்கு மிகக் கஷ்டமானதாகும். இதுபோன்ற துயரம் வரும்போது இந்தக் கஷ்டம் அதிகமாகிறது. கடந்த ஆண்டின் துயரத்திலிருந்து கரையேறி வந்துகொண்டிருக்கும் இந்தக் கட்டத்தில்தான் ஏற்கனவே மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் கட்டமைக்கப்பட்ட ஒரு பகுதியைத் தற்போதைய வெள்ளம் முழுமையாகச் சேதப்படுத்தி மீண்டும் துயரம் நேரிட்டுள்ளது. அதனால்தான், மறுசீரமைப்பு நடவடிக்கை இயல்பான முறையில் இல்லாமல் பெரும் சவாலாக உள்ளது. இந்தச் சவாலை எதிர்கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. இந்த வெள்ளத் துயரத்தைத் தொடர்ந்து மக்களைப் பாதுகாப்பதுதான் முதல்கட்டப் பணியாக உள்ளது. அடுத்த கட்டப்பணி மறுகுடியமர்த்தலும், அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட மறுசீரமைப்புப் பணியுமாகும். முதலாவது கட்டப் பணியை பயனுள்ள முறையில் செய்து முடித்து அடுத்த கட்டப்பணிக்கு நாம் செல்கிறோம்.
வெள்ளத் துயரத்தில் சிக்கியவர்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களை நிவாரண முகாம்களில் தங்கவைப்பதற்கும் அவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு, ஆடைகள் மற்றும் தேவையான பொருட்கள் கிடைப்பதற்கும் ஒருமித்த மனதுடன் கூடிய பணிகளை நாம் செய்தோம். காவல்துறை, தீயணைப்புப் படை முதலான மாநில அரசுத் துறைகளுடன் மத்திய மீட்புப்படைப் பிரிவுகளும், மக்களும் முழு மனதுடன் செயலாற்றினார்கள். மேலும் இப்போது மக்களின் வாழ்க்கையை நிலைக்குக் கொண்டுவருவது என்ற சிரமமான கடமை நம்முன் உள்ளது. அதற்காக அனைத்து மக்களும் கைகோர்க்க வேண்டும். கேரள மக்களுக்கு உரிய எப்போதும் பெருமைப்படத்தக்க அந்த ஒற்றுமையும் ஒத்துழைப்பும் உண்டாக வேண்டிய கட்டம் இது. கஷ்டப்படுபவர்களுடன் நிற்கிற மனம்தான் மனிதனை நல்ல கலாச்சாரம் உள்ளவனாக ஆக்குகிறது. ஒக்கிப் புயல் துயரம் வந்த கட்டத்திலும் கடந்த பெருவெள்ள பாதிப்புக் கட்டத்திலும் நாம் இதை அனுபவித்தோம். அதுபோன்ற மனஒற்றுமை மீண்டும் வெளிப்படவேண்டிய கட்டம் இது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குத் தேவைப்பட்ட செலவு மட்டுமல்லாமல் மறுகுடியமர்த்தல்-மறுசீரமைப்புப் பணிகளுக்கும் பெரும் தொகை தேவைப்படும். இதை நாம் ஒன்றுபட்டு நின்று திரட்டவேண்டியதிருக்கிறது. எவ்வளவு சிறிய தொகையும் சிறிதல்ல. எவ்வளவு பெரிய தொகையும் பெரிதுமல்ல.
நமது மாநிலத்தைப் பாதுகாப்பதற்கு ஒன்று சேர்வதன் அவசியத்தை உணர்ந்த அனைவரும் எந்த வேறுபாடுமின்றி தாராள மனதுடன் முதலமைச்சரின் துயர்துடைப்பு நிதிக்கு நிதி வழங்குங்கள். முதலமைச்சரின் துயர்துடைப்பு நிதி வேறு வகைக்கு மாற்றாமல் உரிய பணிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதாகும். இதை மனதில்கொண்டு அனைவரும் இயன்ற வரையில் உதவ வேண்டுமென்று உங்கள் ஒவ்வொருவரையும் வேண்டுகிறேன்.