தற்போதைய சூழ்நிலையில் கிரிக்கெட் விளையாட்டின் தாய் என அழைக்கப்படும் டெஸ்ட் போட்டி டி-20 வருகையால் சுவாரஸ்ய மின்றி பெயரளவிற்கு மட்டுமே நடைபெற்று வருகிறது. இதனால் டெஸ்ட் போட்டியை காப்பாற்றச் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) பகலிரவு டெஸ்ட் போட்டியை அறிமுகப்படுத்தியது. இதற்குத் துவக்கத்தில் ரசிகர்களிடம் ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும் முன்னணி அணிகள் தொடர்ந்து விளை யாடப் பகலிரவு டெஸ்ட் போட்டிகளும் ரசிகர்களிடம் நல்ல செல்வாக்கைப் பெற்றது. அடுத்து 5 நாட்களைக் கொண்ட டெஸ்ட் போட்டிகளை 4 நாட்கள் கொண்டதாக மாற்றக் கடந்த வருடமே ஐசிசி திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து நான்கு நாட்கள் டெஸ்டை அனைத்து அணிகளும் கட்டாயமாக விளையாடும் வகையில் ஐசிசி திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே நான்கு நாட்கள் கொண்ட 2 ஆட்டங்கள் டெஸ்ட் (தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே, இங்கி லாந்து - அயர்லாந்து) நடைபெற்றுள்ள நிலையில், அனைத்து நாடுகளும் 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் நிலை விரைவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏன் இந்த முடிவு?
2018-ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 60 சதவிகித டெஸ்ட் ஆட்டங்கள் நான்கு நாட்களுக்குள் நிறைவடைந்து விடுகிறது. இதனால் இந்தப் புதிய திட்டத்தைச் செயல்படுத்த ஐசிசி தயார் நிலையில் உள்ளது. நான்கு நாட்கள் டெஸ்ட் கட்டாயமாக்கப்படும் பொழுது ஒருநாளைக்கு 98 ஓவர்களாக (5 நாட்கள் டெஸ்டில் ஒருநாளைக்கு 90 ஓவர்கள்) அதிகரிக்கப்படும். இதன்மூலம் 58 ஓவர்கள் வீணாகுமே தவிர டெஸ்ட் போட்டிகளின் முடிவுகளில் எவ்வித பிரச்சனையும் உருவாகாது.