நாளை கவுகாத்தியில் நடக்க இருக்கும் இந்தியா-இலங்கை இடையிலான முதல் டி-20 போட்டியில் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலம், கவுகாத்தியில் நாளை மாலை 7 மணிக்கு இந்தியா-இலங்கை இடையிலான முதல் டி20 போட்டி நடக்கிறது. இந்நிலையில், நாளை போட்டியைக் காண வரும் ரசிகர்களுக்கு, கடும் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, போஸ்டர்கள், பேனர்கள், மார்க்கர் போன்றவற்றை எடுத்து வர ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இவற்றை மைதானத்தில் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அசாம் மாநிலத்தில் கடுமையாகப் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இந்த ஆட்டம் நடக்கிறது. இந்நிலையில், போட்டியின்போது சர்வதேச அளவில் பார்க்கப்படும் என்பதால், சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏதேனும் போஸ்டர்களில் எழுதி, எதிர்ப்பை வெளிப்படுத்தினால் சர்ச்சையாகும் என்பதால், முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.