சென்னையில் 12-வது ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டமானது, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 27 ரன் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது.
அப்போது களம் இறங்கிய கேப்டன் டோனி முதல் 30 பந்தில் 33 ரன்களே எடுத்தார். அடுத்த 16 பந்தில் அதிரடியாக 46 ரன்கள் எடுத்தார். கடைசி 18 பந்துகளில் மட்டும் தோனி, பிராவோ அதிரடியால், சிஎஸ்கே அணி 60 ரன்களைச் சேர்த்தது. சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. டோனி, 46 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 75 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில், 176 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே சேர்த்து 8 ரன்களில் தோல்வி அடைந்தது.
இதன் மூலம் சிஎஸ்கே அணி தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வென்று, 6 புள்ளிகளுன் முதலிடத்தில் இருக்கிறது. அதே சமயம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.