புதுதில்லி, ஜன.16- இந்தியாவின் ஏற்றுமதி - இறக்குமதி, 5-வது மாதமாக டிசம்பரிலும் தொடர் சரிவைச் சந்தித்துள்ளது. ஏற்றுமதி 1.11 சதவிகிதமும், இறக்குமதி 8.24 சதவிகிதமும் குறைந்துள்ளது. 2018 டிசம்பரில், இந்தியாவின் ஏற்றுமதி 27.86 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஆனால், இது 2019 டிசம்பரில் 27.36 பில்லியன் டாலர்களாக மட்டுமே இருந்துள்ளது. ரூபாய் மதிப்பின்படி, 2018 டிசம்பரில் ரூ. 1 லட்சத்து 97 ஆயிரத்து 44 கோடியே 76 லட்சம் ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி நடந்திருந்தது. ஆனால், 2019 டிசம்பரில் ரூ. 1 லட்சத்து 94 ஆயிரத்து 764 கோடியே 74 லட்சமாக குறைந்துள்ளது. அதாவது, ஏற்றுமதி மதிப்பில் 1.16 சதவிகிதம் எதிர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்து உள்ளது. இறக்குமதியும் 8.83 சதவிகிதம் குறைந்து 38.61 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சரிந்துள்ளது. ரூபாய் மதிப்பில் இந்தியா 2018 டிசம்பரில் ரூ. 2 லட்சத்து 99 ஆயிரத்து 553 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்திருந்தது. இதுவே 2019 டிசம்பரில் ரூ. 2 லட்சத்து 74 ஆயிரத்து 883 கோடியே 64 லட்சமாக 8.24 சதவிகிதம் அளவிற்கு குறைந்துள்ளது. 2018-19 நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஏற்றுமதி மொத்த மதிப்பு, 244.08 பில்லியன் அமெரிக்க டாலர்களாக( 17 லட்சத்து 2 ஆயிரத்து 261 கோடியே 31 லட்சம் ரூபாய்) இருந்தது. இதுவே, 2019-20 நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஏற்றுமதியின் மொத்த மதிப்பு 239.29 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (16 லட்சத்து 84 ஆயிரத்து 558 கோடியே 61 லட்சம் ரூபாய்) குறைந்துள்ளது. டாலர் அடிப்படையில் ஏற்றுமதி மதிப்பில் 1.96 சதவிகிதம் குறைந்துள்ளது. ரூபாய் அடிப்படையில் 1.04 சதவிகிதம் குறைவு ஏற்பட்டுள்ளது.