tamilnadu

img

தமிழ், தமிழ்நாடு என்பதை தில்லியில் உயர்த்திப் பிடிப்பேன்

எழுத்தாளர் சு.வெங்கடேசன், மதுரை தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். பொது சமூகத்துக்கு அறிமுகமானவர். தமிழ் மண்ணின் அரசியலைப் பேசுகிற ஆளுமை. விழாக்களின் நகரான மதுரையில், ‘புத்தகத் திருவிழா’, ‘மாமதுரை போற்றுதும்’ போன்ற புதிய விழாக்களுக்கு வழிகோலியவர். ‘சாகித்ய அகாடமி’ விருதுபெற்ற சு.வெங்கடேசனுடன் பேட்டி:

வெற்றி வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிற கூட்டணியின், முக்கியமான நகர வேட்பாளராகியிருக்கிறீர்கள். எப்படி வந்தது இந்த வாய்ப்பு?

நேரடியான அரசியல் களத்திலும் பண்பாட்டுக் களத்திலும், 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவருகிறேன். இதன் தொடர்ச்சியாகவே நாடாளுமன்றத்துக்கான மக்கள் பணியையும் ஆற்றுமாறு மார்க்சிஸ்ட் கட்சி பணித்துள்ளது.


அரசியலில் இருந்துகொண்டே எழுத்துத் துறையிலும் சாதித்த மரபுள்ளவர் நீங்கள். எழுத்தாளராக இருந்துகொண்டு தேர்தல் அரசியலில் சாதித்தவர் அதிகம் இல்லையே?

இலக்கியம் - தனிமனிதனின் தனித்த செயல். அரசியல்- பேரியக்கங்களும், பெரும் மனித சக்தியும் வெளிப்படுத்தும் ஆற்றல். இவை இரண்டையும் ஒருசேர கைக்கொள்வது தனித்த கலை. அதற்குத் தமிழ் மண்ணிலே சிறந்த உதாரணங்கள் உண்டு. ராஜாஜி, அண்ணா, கலைஞர் என்று பலரையும் சொல்ல முடியுமே!


சாதாரண அரசியல்வாதிக்கு வாக்களிப்பதற்கும், எழுத்தாளருக்கு வாக்களிப்பதற்கும் என்ன வித்தியாசம்?

பலருக்கு இங்கு அரசியல் என்பது வருமானம் ஈட்டும் தொழில், எங்களுக்கு அர்த்தமுள்ள வாழ்க்கைப் பயணம். அதனால்தான், தலா 10 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பி.மோகனும், சட்டமன்ற உறுப்பினராக இருந்த நன்மாறனும் அதே எளிமையோடு இருக்கவும், வாழவும் முடிந்தது. எனவே, எங்களுக்கு வாக்களியுங்கள் என்று மக்களிடம் நிற்கிறோம்.


உங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்தத் தொகுதி மக்கள் அடையப்போகும் நன்மைகள் என்ன? வெற்றிபெற்றால், எந்தப் பிரச்சனைக்கு முன்னுரிமை தருவீர்கள்?

மதுரை என்பது தமிழ்ப் பண்பாட்டின் தலைநகரம். தமிழ் நாகரீகத்தின் அடையாளம். இதை மீண்டும் உலகின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதற்கு முன்னுரிமை கொடுப்பேன். இந்த மண்ணின் கலாச்சாரம், பண்பாடு, வரலாற்றின் பிரதிநிதியாக தில்லியில் பேசவிரும்பும் உறுப்பினராக இருப்பேன். தமிழ், தமிழ்நாடு என்பதை உயர்த்திப்பிடிப்பேன். மொழி எப்படி அதிகாரத்திற்கான கருவி என்று நன்கு உணர்ந்தவன் நான். இந்தியாவின் எழுத்துக்களின் தாயகம் மதுரைதான் என்பதை உலகத்தின் கவனத்துக்குக் கொண்டுவருவதற்கு முன்னுரிமை கொடுப்பேன். தொழில் வளத்தைப் பெருக்குவது, மத்திய கல்வி நிறுவனங்களை மதுரையில் உருவாக்குவது, நிரந்தரமான குடிநீர்த் திட்டம், வைகையைப் பாதுகாப்பது போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்.


ஒரே கட்சியில் இருந்து 50 பேர் தில்லிக்குப் போயும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற சலிப்பு தமிழகத்தில் இருக்கிறதே?

தமிழ்நாட்டில் கடந்த முறை நாம் தேர்வுசெய்த 39 எம்பிக்களும், தங்களின் தொகுதிக்காகப் பேசவில்லை. நம்முடைய மாநிலத்துக்காகவும், நாட்டுக்காகவும்கூடப் பேசவில்லை. சுதந்திர இந்தியாவில் அதிகக் கொந்தளிப்பு கொண்ட இந்த 5 ஆண்டுகளில், அரசியல் சாசனத்தின் எல்லாத் தூண்களின் மீதும் தாக்குதல் நடந்தபோதும், கேளாக்காதினராய் இந்த 39 பேரும் இருந்தனர். ஜல்லிக்கட்டு போன்ற பெரும் போராட்டமும், பணமதிப்பு நீக்கம் போன்ற பெருந்தாக்குதல்களும், ஜிஎஸ்டி போன்ற பெரும் பாதிப்பும் ஏற்பட்ட இந்தக் காலத்திலும் அவர்கள் தமிழகத்துக்குப் பெரிய ஏமாற்றத்தைத் தந்தார்கள். இதற்கு இந்தத் தேர்தலில் தமிழக மக்கள் நல்ல பதிலை வழங்குவார்கள்.


தேர்தலில் சாதி, மதவாதம், பணநாயகம் போன்றவற்றையும் எதிர்த்துப் போராட வேண்டியதிருக்கும். அதுவும் மதுரைத் தொகுதியில் இவற்றின் தாக்கம் மிக அதிகம். வெற்றிக்கு என்ன உத்தியைக் கையாளப்போகிறீர்கள்?

இந்தத் தேர்தலில் மட்டுமல்ல, எல்லாத் தேர்தல்களிலும் இந்த மூன்றையும் எதிர்த்துத்தான் இந்தியாவில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி, அவர்களின் உரிமையைப் பறிப்பதை ஆட்சியாளர்கள் செய்கிறார்கள். மக்கள் எல்லாக் காலத்திலும் இதைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். மதுரை மக்கள் மீது நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கை இந்த மூன்றையும் வீழ்த்தி எங்களை வெற்றிகொள்ளச் செய்யும். நாங்கள் பயன்படுத்தப்போகும் தனித்துவமான யுக்தி என்னவென்பதை இன்னும் ஒரு சில நாட்கள் பொருத்திருந்து பாருங்கள்.


வழக்கமான பிரச்சாரத்திலிருந்து உங்களுடையது எப்படி மாறுபடும்? எழுத்தை ஆயுதமாக்குவீர்களா?

(சிரிக்கிறார்) தேர்தல் வேலை என்பது ஒருவகையில் ராக்கெட் ஏவுவதைப் போலத்தான். விமானத்தைப் போல ஓடுதளத்தில் ஓடியெல்லாம் மேலேற முடியாது. நின்ற இடத்தில் இருந்தே உச்சியைக் கிழித்துக்கொண்டு மேலேற வேண்டும். இங்கு புத்தகம் எழுதி படிக்கச் சொல்லியெல்லாம் ஓட்டுக்கேட்க முடியாது. 30 நாட்களில் 15 லட்சம் வாக்காளர்களைச் சந்திக்க வேண்டும். ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பேர். ஒரு மணி நேரத்தில் 2,000 பேர். ஒரு நொடியில் 33 பேரைச் சந்திக்க வேண்டும். பேட்டி கொடுப்பதற்கே இங்கே நேரமிருக்குமா என்று தெரியவில்லை. இதில் எங்கே புத்தகம் எழுதுவது? மதுரைக்கு நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை மட்டும் விரிவான அறிக்கையாக வெளியிடப்போகிறோம்.


மதுரையை ‘ஸ்மார்ட் சிட்டி’யாக்கினோம், எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டுவந்தோம் என்று மோடி முதல் எடப்பாடி வரையில் முழங்குகிறார்களே? இந்தப் பிரச்சாரத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள்?

இவர்கள் கொண்டுவந்துள்ள ‘ஸ்மார்ட் சிட்டி’ உள்ளிட்ட திட்டங்களைப் பற்றி விளக்கிச் சொன்னாலே, மக்கள் எங்களுக்கு வாக்களித்துவிடுவார்கள். மதுரையின் புகழ்பெற்ற ‘வலைவீசி தெப்பக்குளம்’ இருந்த இடத்தில்தான் மத்திய பெரியார் பேருந்து நிலையம் கடந்த காலத்தில் உருவாக்கப்பட்டது. மதுரையிலேயே பள்ளமான இடம் அதுதான். அதனால்தான், சிறு மழை பெய்தாலும் பெரியார் பேருந்து நிலையம் நீரால் நிரம்பி வழிகிறது. இப்போது அதே இடத்தில் நிலத்திற்கு அடியில் இரண்டு தளங்கள் இருப்பதுபோல 200 கோடி ரூபாய் செலவில் ஒரு பேருந்து நிலையத்தை உருவாக்குகிறார்கள். இவ்வளவு புத்திசாலித்தனமான ஒரு திட்டத்தை, வேறு எங்கேயும் பார்க்க முடியாது. குளத்துக்கு அடியில் இரண்டடுக்குத் தளம் கட்டுவதும், நீருக்கு மேல் தெர்மாகோல் பரப்புவதும், சாக்கடை தேங்கி நிற்க வசதியாக வைகையில் தடுப்பணை உருவாக்குவதும்தான் இவர்களின் ‘திட்டமாக’ இருக்கிறது. இரண்டாவது விஷயம், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முதன் முதலில் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியது தோழர் மோகன். அதற்காகத் தொடர்ந்து போராடியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. தேர்தலுக்காக மோடி அறிவிப்பை செய்துவிட்டுப் போயிருக்கிறார். அதற்கான நிதி ஒதுக்கக்கூட இல்லை. ‘எய்ம்ஸ்’ பணிகள் முழுமையாகவும், உடனடியாகவும் நிறைவேற நாங்கள் பாடுபடுவோம்.


அமைச்சர் உதயகுமார் அதிகாரத்தோடும், செல்வாக்கோடும் கோலோச்சுகிறார். கூடவே, அமைச்சர் செல்லூர் ராஜுவும் இருக்கிறார். இந்தச் சவால்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

இவர்கள் அதிகாரத்தில் இருப்பதால் கோலோச்சுகிறார்கள். நாங்கள் மக்களோடு இருப்பதால் நம்பிக்கையோடு தேர்தலை எதிர்கொள்கிறோம். இவ்வளவு செல்வாக்கோடு இருப்பவர்கள் ஏன் இன்றுவரையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த பயப்படுகிறார்கள்? எங்கள் அணிக்கே வெற்றி.


‘மாமதுரை போற்றுதும்’ விழா நின்றுபோய்விட்டதே, அரசே விழா நடத்த குரல் கொடுப்பீர்களா?

நிச்சயமாக இதற்கு முன்னுரிமை கொடுப்பேன். இது அரசும், மதுரை மக்களும் இணைந்து முன்னெடுக்க வேண்டிய ஒரு பெருவிழா. மதுரைக்கு ஒரு ‘ஹெரிட்டேஜ் பிளான்’ உருவாக்கப்பட வேண்டும். கீழடியும், மீனாட்சி அம்மன் கோவிலும் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னத்தில் இடம்பெற வேண்டியவை. அதற்கான முயற்சிகளையும் செய்வேன். நமது பாரம்பரியம் வெறும் சொத்து அல்ல, அது வாழ்வாதாரம். சுற்றுலாவை முன்னெடுப்பதன் மூலம் மதுரைக்கு வளமான தொழில், வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

வாழ்த்து கூறி விடைபெறுகையில், “நீங்கள் கேள்வியாக கேட்காத ஒன்று, இந்தப் பேட்டியில் அவசியம் இடம்பெற வேண்டிய ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்” என்று நிறுத்தினார் சு.வெ. “இப்போது மதுரை - சென்னைக்குத் துவக்கப்பட்டுள்ள ரயிலுக்கு ‘தேஜஸ்’ ரயில் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் பெயரை ‘தமிழ்ச்சங்க ரயில்’ என்று மாற்றக் குரல் கொடுப்பதுதான் என் முதல் வேலையாக இருக்கும்”. 

நன்றி: இந்து தமிழ் திசை, மார்ச் 17