tamilnadu

img

ரூ.20லட்சம் கோடி திட்டம் வெறும் வார்த்தை ஜாலம்

சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்

புதுதில்லி, மே 14- கொரோனா பாதிப்பிலிருந்து தேசத்தை மீட்கிறோம் என்ற பெயரில் ‘சுயசார்பு பாரதம்’ என்ற படாடோபமான வார்த்தை ஜாலங்களுடன் நரேந்திர மோடி அரசு அறிவித்துள்ள ரூ.20லட்சம் கோடி மீட்புத் திட்டத்தில், கொரோனாவுக்கு எதிராக முன்வரிசையில் நின்று போராடிக் கொண்டிருக்கும் மாநில அரசுகளுக்கு எதுவும் இல்லை; துயரத்தின் பிடியில் ஆழ்ந்துள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு இவர்கள் அறிவித்துள்ள பேக்கேஜ் திட்டங்களால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார். கொரோனா பாதிப்பிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தை மீட்பதற்கு ரூ.20லட்சம் கோடி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். அத்திட்டத்தின் விபரங்களை புதனன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதுதொடர்பாக விமர்சனக் கருத்துக்களை வெளியிட்டுள்ள சீத்தாராம் யெச்சூரி கூறியிருப்பதாவது:

படாடோபமாக அறிவிக்கப்பட்டுள்ள மோடி அரசின் மீட்பு நிதித் திட்டம் என்பது ஒரு ஏமாற்றுத் திட்டமே. உடனடியாக, அவசர அவசரமாக அரசின் உதவி கிடைக்குமா என்று எதிர்பார்த்து கோடிக்கணக்கான மக்கள் காத்திருக்கிறார்கள். பல லட்சக்கணக்கானோர் இன்னும் வயிற்றில் பசியோடு சாலைகளில் நடந்து கொண்டிருக்கிறார்கள். எங்கேனும் யாரேனும் உணவு அளிக்கமாட்டார்களா என்று எதிர்பார்த்த வண்ணம் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய மக்களைப் பற்றி பிரதமரின் திட்டம் எந்தக் கவலையும் கொள்ளவில்லை.

அதுமட்டுமல்ல, பிரதமரின் திட்டத்தில் மாநில அரசுகளுக்கு எதுவும் இல்லை. மாநில அரசுகள் தொடர்ச்சியாக தங்களது நிதித் தேவையை மத்திய அரசிடம் முன்வைத்து வருகின்றன. கொரோனா தொற்றுக்கு எதிராக முன் வரிசையில் நின்று போராடிக் கொண்டிருப்பவை மாநில அரசுகள்தான். ஆனால் அவை தார்மீக அடிப்படையில் கேட்கும் நிதியை பிரதமரின் திட்டம் கவனத்தில் கூட கொள்ளவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. இது என்ன பெரிய திட்டமோ தெரியவில்லை. மக்களின் சொந்தப்பணத்தை, ஏதோ புதிதாக தருவது போல மோடி அரசு தம்பட்டம் அடித்திருக்கிறது. மக்களின் சேமிப்பை எடுத்து, மக்களிடம் வசூலிக்கப்பட்ட வருமான வரி நிதியை எடுத்து திட்டங்கள் என்ற பெயரில் தருவது எப்படி பொருளாதாரத்தை மீட்கிற திட்டமாக இருக்க முடியும்? இது எப்படி பொருளாதாரத்தை உந்தித் தள்ளுகிற - மறுமலர்ச்சியை ஏற்படுத்துகிற திட்டமாக இருக்க முடியும்?

மக்கள்தான் அரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். ஒட்டுமொத்த மக்களும் இன்றைக்கு உதவிகேட்டு எதிர்பார்த்து நிற்கிறார்கள். முதலில் அவர்கள் நலமுடன் இருந்தால்தான் பொருளாதாரம் சுழலத் துவங்கும். இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு யார் தெரியுமா? தொழிலாளர்கள்தான். அவர்களை பசியோடும், ஆதரவற்றவர்களாகவும் விட்டிருக்கிறது மோடி அரசின் திட்டம். இவர் அறிவித்துள்ள 20லட்சம் கோடி ரூபாய் திட்டமானது, இந்தியப் பொருளாதாரத்தையும் பாதுகாக்காது; பசியால் துடிக்கும் மக்களின் உயிரையும் பாதுகாக்காது. சுயசார்பு பாரதம் என்று மோடி அரசு சொல்கிறது. சுயசார்பு என்பதன் அடிப்படை நாட்டின் மக்கள்தான். அவர்கள் முதலில் உயிர்வாழ வேண்டும். அவர்கள் உயிரோடு இருந்தால்தான் மற்ற வளங்களை உருவாக்க முடியும். 

உண்மையில் கேரள இடதுஜனநாயக முன்னணி அரசு மேற்கண்ட நடவடிக்கைகள் தான் மக்களின் சுயசார்பை வலுப்படுத்துபவையாக இருக்கின்றன. கேரள அரசால் மக்களைப் பாதுகாக்க முடியும் என்றால் மத்திய அரசால் ஏன் முடியாது?