tamilnadu

img

தமிழகத்தில் ஓவியக் கலையின் வளர்ச்சி

காண்பவரைக் கவர்த்திழுத்து உள்ளங்களை தன் வயப்படுத்தும் உயர்ந்த கலை ஓவிக்கலை. எல்லைகளை யெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்களின் மனங்களைக் கொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியக்கலை. ஓவியம் பேசும் செய்திகள் பல. உணர்த்தும் கருத்துக்களோ மிகப்பல. தமிழர் வளர்த்த நுண்கலைகளின் வரிசையில் ஓவியக்கலையே முன்னணியில் நிற்கிறது. ஓவியம் என்ற சொல்லின் பழமையான வடிவம் ஓவம் என்பதாகும். சங்ககால இலக்கியத்தில் இச்சொல்லே ஓவியத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்னர்  காப்பியக் காலத்தில் ‘சித்திரம்’ என்ற சொல்லும் ஓவியத்திற்கு மாற்றாக இருந்துள்ளது. ‘ஓவம்’ என்ற சொல் ‘ஒவ்வு’  என்ற வினைச்சொல்லில் இருந்து தோன்னிய தாகும். இதற்கு ஒன்றைப் பற்றியிருப்பது என்றும், ஒன்றைப் போல இருப்பது என்றும் பொருள். சித்திரம் என்ற சொல்லுக்குக் கண்ணால் கண்ட ஒன்றை விளக்குவது அல்லது சித்தரிப்பது என்ற பொருளாகும். ‘படாம்’ என்பது திரைச்சீலையில் தனியே வரையப்பட்ட ஓவியமாகும். இதுவே ‘படம்’ என்று மாறி வழங்குகிறது.

ஓவத் தன்ன வுருகெழு நெடுநகர்  
(பதிற்றுப்பத்து 88:28)
ஓவத்தன்ன இடனுடை வரைப்பின் 
(புறநானூறு 251:1)
ஓவத் தன்ன வினைபுனை நல்லில் 
(அகநானூறு 98:11)
ஓவியம் புலப்படுத்தும் கருத்தைக் குறிப்பிடும்போது ‘ஓவச்செய்தி’ என்று அகநானூறு (5:20) தெரிவிக்கின்றது. ஓவியக்கலைஞர்களைப் பற்றியும் அவர்களது அருந்திறன் குறித்தும் நற்றிணை, மதுரைக்காஞ்சி போன்ற சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. நற்றிணைப் பாடல் ஒன்று ஓவியரை ‘ஓவமாக்கள்’ என்கிறது.

எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி
நுண்ணிதி னுணர்ந்த நுழைந்த நோக்கிற்
கண்ணுள் வினைஞர் 
(மதுரைக்காஞ்சி 516-518)
 

(மதுரைக்காஞ்சி 516-518) எக்காட்சியினையும் தமது ஓவி  யத்திற்குள் கொண்டுவந்து ஒப்பிட்டுக்காட்டு வர். ஓவியர்கள் எதனையும் நுட்பமாக  உணர்ந்தவர்கள். ஆழமான நோக்குடைய வர்கள் என்பது இதன் பொருள். இதனால் அவர்களை ‘கண்ணுள் வினைஞர்’ என்று பெயரிட்டு அழைக்கிறது. ‘கண்ணுள் வினைஞர்’ என்ற சொல்லுக்குப் பத்துப்பாட்டு உரையாசிரியர் நச்சினார்க்கினியர்  ‘நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்தலின் கண்ணுள் வினைஞர்’ என்று உரை எழுதியுள்ளார்.

ஓவியம் வரைவதற்கு பயன்படுத்தப்பட்ட தூரிகையை நற்றிணைப்பாடல் ஒன்று ‘துகிலிகை’ என்று குறிப்பிடுகிறது. மென்மையான தூரிகையைப் பாதிரி மலரோடு ஒப்பிட்டுக் கூறுகிறது. ஓவ மாக்கள் ஒள்ளரக் கூட்டிய துகிலிகை யன்ன துய்த்தலைப் பாதிரி 

(நற்றிணை - 118)
ஓவியத்தில் வரையப்படும் உருவங்களை வண்ணங்களைக் கொண்டு தீட்டும் முன்பாக அவற்றைக் கோடுகளால் வரைவர். இதனை  ‘புனையா ஓவியம்’ என்று சங்க இலக்கி யங்கள் பெயரிட்டு அழைக்கிறது. புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்  (நெடுநெல்வாடை - 147)

இவ்வழக்கு உரையெழுதிய நச்சினார்கினி யார் ‘வண்ணங்களைக் கொண்டெழுதப்படாத ஓவியம்’ என்று பொருள் கூறுகின்றார். சிலப்பதிகாரத்தில் ஓவியத்தினைப் பற்றிய பல அரிய குறிப்புகள் காணப்படுகின்றன. ஓவியம் வரையப்பட்ட திரைச் சீலைகள் பற்றி சிலம்பு தெரிவிக்கின்றது. மாதவியின் நடனம் அரங்கேற்றப்பட்ட மேடையில் இத்தகைய திரைச்சீலைகள் பயன்படுத்தப்பட்டன. இவை ‘ஓவிய எழினி’ என்று அழைக்கப்பட்டன. மணிமேகலையிலும் ஓவியம் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. குறிப்பாக ஓவிய நூல் பற்றி மணிமேகலை குறிப்பிடுகிறது. நாட்டிய மகளிர் ஓவிய நூலினைக் கற்று தேர்ந்திருக்க வேண்டும். அதன்படி மாதவி அந்நூலினை கற்றுத்தேர்ச்சி பெற்றவளாக விளங்கினாள் என்று மணிமேகலை குறிப்பிடுகிறது.

நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும் கற்றுத்துறை போகிய பொற்றொடி நங்கை (மணிமேகலை 2:30-32)

சித்திரம் வரைவோர் மணிமேகலையில் ஓவியர், ஓவியமாக்கள், வித்தகர் என்று குறிப்பிடப்படுகின்றனர். ஓவியத்தை ‘வட்டிகைச் செய்தி’ என்று மணிமேகலை கூறு கிறது. வட்டில்களில் வண்ணங்கள் கொண்டு  சித்திரம் வரைவதால் ஓவியம் ‘வட்டி கைச்செய்தி’ என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். கி.பி. ஆறாம் நூற்றாண்டளவில் தோன்றிய கொங்கு வேளிர் எழுதிய பெருங்கதைக் காவியத்தில் ஓவியத்தைப் பற்றி பல செய்திகள் வருகின்றன. பெருங்கதையில் சித்திரக்காரர் ஓவ வினையாளர், ஓவியத் தொழிலாளர் என்று குறிப்பிடப்படுகின்றனர். சித்திரம் வரையப்பட்ட இடங்கள் சித்திர அம்பலம், சித்திரக்கூடம், சித்திர சாலை, எழுதுநிலை மாடம், ஓவகைவினை மாடம் என்றும் குறிப்பிடப்படுகின்றன. பெருங்கதை கோசலத்தில் இருந்த ஓவியர்களைச் சிறப்பித்துக் கூறுகிறது.

சித்திரங்கள் பல முறையில் பல இடங்களில்  பல பொருட்களின் மீது வரையப்பட்டிருந்தன என்று பெருங்கதை கூறுகிறது. அவை சித்திர  முதுசுவர், சித்திரம் பயின்ற விதானம், சித்திரக்  கதவு, சித்திர தவிசு, ஓவியத் தண்டிகை, சித்திர நுண்டுகில், சித்திர நெடுஞ்குறை, சித்திரக்கிழி, சித்திரப் பிணையல், சித்திரக்  கம்மம் என்று பெருங்கதையில் குறிப்பிடப்படு கின்றன. ஏடுகள் நிறைந்த ஓலைப் புத்தகம் ஒன்றின்  மீது சித்திரம் வரைந்தது பற்றி பெருங்கதை தெரிவிக்கிறது. ஓவியக்காரர்கள் நகை,  அழுகை முதலிய எட்டுவகை மெய்ப்பாடுகளை யும், இருத்தல், கிடத்தல், நிற்றல் முதலிய ஒன்பது வகையான விருத்திகளையும் ஓவியத்தில் கொண்டுவந்தனர் என்று கொங்கு வேளிர் குறிப்பிடுகிறார். பெருங்கதை போன்று சீவக சிந்தாமணியிலும் திருத்தக்கத் தேவர் அழகிய பெண்களை ஓவியப் பாவைக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றார். உரைகிழித் துணரும் ஒப்பின் ஓவியப் பாவை ஒத்தார் 

(சீவக சிந்தாமணி - 699)
ஓவியர் தம் பாவையினொடு
ஒப்பரிய நங்கை 
(சீவக சிந்தாமணி - 2016)
உயிர்பெற எழுதப் பட்ட
ஓவியப் பாவை யொப்பாள் 
(சீவக சிந்தாமணி - 2048)
 

சீவக சிந்தாமணியில் சீவகன் பல இடங்க ளில் ஓவியம் தீட்டுவதில் வல்லவனாகக் காட்டப்பட்டுள்ளான். யானை முன் நடுங்கி நின்ற குணமாலையின் உருவத்தைத் தன் மனத்தில் சீவகன் பதித்து வைத்தான். அதனை அப்படியே வண்ண ஓவியமாகத் தீட்டினாள். மீண்டும், மீண்டும் அவ்வோவியத்தைக் கண்டுகளித்து திருத்தியதாக திருத்தக்கத் தேவர் குறிப்பிடுகிறார்.

கூட்டினான் மணிபல தெளித்துக் கொண்டவன் தீட்டினாள் கிழிமிசைத் திலக வாள்நுதல் வேட்டமால் களிற்றிடை வெருவி நின்றதோர் நாட்டமும் நடுக்கமும் நங்கை வண்ணமே 

(சிந்தாமணி 1003)
சமணக் காப்பியங்கள் பலவற்றில் ஓவியங்கள் பற்றிய பல செய்திகள் உள்ளன. சமணர்கள் தம் சமயத்தைப் பரப்புவதற்கு ஓவியத்தைக் ஒரு கருவியாகக் கொண்டிருந்தனர். ஓவியர் புனைந்த போலும் ஒளி மலர்ப் பிணையல் மாலைமாலை ஒன்று ஓவியர்கள் வரையும் சித்திரம் போன்று அலங்காரப் புனைவுகளுடன் இருந்ததாக சூளாமணி ஆசிரியர் தோலா மொழித்தேவர் குறிப்பிடுகின்றார். காவியப் புலவர்கள் எல்லாம் ஓவியப் புலமை வாய்ந்தவர்களாக விளங்கினர். காவியப் புலவர்களின் வரிசையில் கம்பரின் படைப்பிலும் ஓவியம் பற்றிய செய்திகளைக் காணமுடிகிறது. ஓவியக் காட்சிக்கு அசையாத் தன்மையுண்டு. இதனைக் கம்பர் தனது காவியத்தில் எடுத்துக்காட்டுகின்றார். வில்லை எடுத்து மிதிலையில் இராமன் முறித்தபோது தேவர்கள் எல்லாம் அசைவற்ற ஓவியம் போல நின்றனர் என்கிறார் கம்பர்.

மாலை ஒன்று ஓவியர்கள் வரையும் சித்திரம் போன்று அலங்காரப் புனைவுகளுடன் இருந்ததாக சூளாமணி ஆசிரியர் தோலா மொழித்தேவர் குறிப்பிடுகின்றார். காவியப் புலவர்கள் எல்லாம் ஓவியப் புலமை வாய்ந்தவர்களாக விளங்கினர். காவியப் புலவர்களின் வரிசையில் கம்பரின் படைப்பிலும் ஓவியம் பற்றிய செய்திகளைக் காணமுடிகிறது. ஓவியக் காட்சிக்கு அசையாத் தன்மையுண்டு. இதனைக் கம்பர் தனது காவியத்தில் எடுத்துக்காட்டுகின்றார். வில்லை எடுத்து மிதிலையில் இராமன் முறித்தபோது தேவர்கள் எல்லாம் அசைவற்ற ஓவியம் போல நின்றனர் என்கிறார் கம்பர்.

(கம்பராமாயணம் 5195:3-4) தமிழக வரலாற்றில் சங்ககாலம் தொடங்கி கி.பி.13ஆம் நூற்றாண்டு முடிய ஓவியக்கலை சிறப்புடன் இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது. இதனை உறுதிப்படுத்தும் சமகால ஓவியச் சான்றுகள் தமிழ்நாட்டுக் கோயில்களில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டு ஓவியக்கலை வரலாற்றிற்கு பல அரிய செய்திகளை மேற்கண்ட இலக்கியச் செய்திகள் தருகின்றன. ஓவியம் பற்றி தனித்த நிலையில் விளக்கும் முழுமையான பண்டைய ஓவிய நூல்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும் இவை பற்றிய குறிப்புகள் பல கிடைத்துள்ளன. இவற்றைக் கொண்டே தமிழகத்தில் ஓவியக் கலையின் வளர்ச்சி பற்றி நாம் அறிய முடிகிறது. வெளிநாடுகளில் பழங்கால ஓவியங்கள் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நமது தமிழ்நாட்டில் அழிந்துவரும் கலைகளில் ஒன்றாகத்தான் ஓவியக்கலை திகழ்கிறது. சங்ககாலத்தில் மூவேந்தர்களாலும், பல்லவர்கள், நாயக்கர்களாலும் புத்துயிர் பெற்ற ஓவியக்கலை இன்றோ அழியும் தருவாயில் உள்ளது. அவர்களது காலத்தில் வரையப்பட்ட பல ஓவியங்கள் சிதிலம் அடைந்தும், மனிதர்களால் சிதைக்கப்பட்டும் காட்சியளிக்கப்படுகின்றன. பொதுமக்கள் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம்.

பழமையைப் பாதுகாக்க வேண்டும் நம் முன்னோரின் கலைத்திறனை உலகுக்கு பறைசாற்ற வேண்டும் என்ற எண்ணம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும் அப்போதுதான் ஓவியக்கலையானது அழியாமல் போற்றி பாதுகாக்கப்படும். அரசானது பள்ளிகளில் ஓவியப்பாடத்திற்கு முக்கியத்துவம் தருவதோடு, ஓவியக் கண்காட்சிகள் மாணவர்களைக் கொண்டு நடத்தி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். அப்போதுதான் இக்கலையானது வளர்ச்சி பெறுவதோடு மட்டுமல்லாது தமிழனின் கலைத்திறன் உலகெங்கும் வெளிப்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.