குன்னூர்,டிச.14 கலப்பட தேயிலை தூள் உற்பத்தியில் ஈடுபடுவார்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும் என்று தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் பாலாஜி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் விளையும் தேயிலையை நம்பி 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக படுக இன மக்களில் பெரும்பாலானவர்கள் தேயிலை தொழில் செய்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டு காலமாக பச்சை தேயிலைக்கு உரிய விலைக் கிடைக்காமல் விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந் நிலையில் நீலகிரியில் சமீப காலமாக கலப்பட தேயிலை உற்பத்தியில், சில தனியார் தேயிலை தொழிற்சாலைகள் ஈடுபட்டு வருவது அம்பலமாகி உள்ளது. குறிப்பாக மே மாதம் 24 ம் தேதி 5 டன் கலப்பட தேயிலை கோத்தகிரியில் பிடிபட்டது. இதேப் போன்று ஜூன் மாதம் 14 ம் தேதி சாயம் கலந்த கலப்பட தேயிலை தூள் 40 டன் தனியார் தேயிலை தொழிற்சாலையில் பிடிபட்டது இவையெல்லாம் விவசாயிகள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கலப்பட தேயிலை உற்பத்தி காரணமாக தேயிலை தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதுடன், தேயிலைக்கு நல்ல விலை கிடைக்காமல் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் கூறுகையில், இதுவரை 17 தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், கலப்பட தேயிலையை ஏல விற்பனைக்கு அனுமதித்த ஏல நிறுவனத்திற்குத் தற்காலிக தடைவிதித்துள்ளதாகவும், தொடர்ந்து கலப்பட தேயிலை தூள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.