''ஜோசியர்கள்" கூறுவது போல் இரண்டு நாளில் கொரோனா குறையாது!
மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேட்டி
மதுரை, ஏப்.17- "ஜோசியர்கள்" கூறுவது போல் இரண்டு நாளில் கொரோனா குறையாது. பரிசோதனைகளை அதிகப்படுத்துவதே சாத்தியம் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறினார். மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தென்னக ரயில்வேயில் 530 பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் 45 பெட்டிகள் கொரோனா நோய் சிகிச்சைக்காக ஏற்பாடு செய்து வைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் 25 பெட்டிகள் திருநெல்வேலியில் 18 பெட்டிகள் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மதுரை மட்டுமின்றி வேறு எந்த நகரத்திற்கு வேண்டுமானாலும் ரயில்பெட்டிகள் அனுப்பி வைக்கப்படும். ஒரு பெட்டியில் 18 நோயாளிகளை வைத்து சிகிச்சை அளிக்கும் அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
தமிழக முதல்வர் தற்போது தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று குறைந்துள்ளது என்று கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சு.வெங்கடேசன், கேரளா அரசு ரேண்டம் பரிசோதனைகளை நடத்தியுள்ளது. கேரள சுகாதாரத்துறை அமைச்சர் இன்றைக்கு நிலைமை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.
நாளை என்ன நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது ஆனால் என்ன நடந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம் எனக் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைகிறது என்றால் நல்ல விஷயம் தான். சோதனைகளை அதிகம் நடக்காமல் ஜோசியர் சொல்வதைப் போல் இரண்டு தினங்களில் குறைந்துவிடும் என்று முதல்வர் கூறியுள்ளார்.
மக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க ரேபிட் கிட்டுகள் வந்துள்ளதாக சொல்லியுள்ளார்கள். பரிசோதனைகளை காலதாமதமின்றி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் நோய்த்தொற்று பரவுவதை தடுக்கவேண்டுமென்றால் பரிசோதனைகளை அதிகப்படுத்தவேண்டும். அதன் மூலம் மட்டுமே நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க முடியும். தமிழக அரசு அதிகமான பரிசோதனைகளை நடத்தவில்லை என்றும் கூறினார்.