“இந்தியாவின் ஆன்மாகிராமங்களில் வாழ்கிறது“ என்றார் மகாத்மா காந்தியடிகள். அவரது 150 வது பிறந்த தினம் அக்டோபரில் கொண்டா டப்பட உள்ளது. அன்று கிராமங்களில் வாழ்வதாக சொன்ன ஆன்மா, இன்றைய நிலையில் எப்படி இருக்கிறது என்பதை அறிந்திட கிராமங்களை நோக்கி பயணித்தோம். நமது கிராமத்தில், நமக்கான தேவைகள் என்ன? ஒன்று கூடி பேசுவோம் வாங்க என்ற அழைப்போடு விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் 15 நாட்களில் 50 கிராமங்களில் மக்களோடு கலந்துரையாடல் நடந்தது. விவசாய நிலைமை, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, குடிநீர், சாலை, தெரு விளக்கு, மயானம், கழிப்பிடம், கல்வி, மருத்துவம், சுகாதாரம், சுற்றுச் சூழல், அங்கன்வாடி மையம், ரேசன் கடை, பள்ளிக் கூடம், பேருந்து வசதி, 100 நாள்வேலை இப்படியாக கலந்துரையாடல் சென்றது.
விவசாயம் : விவசாயம் செய்து நட்டமாவதை விட தரிசாப்போட்டு நிம்மதியா இருக்கலாம் என்பதே விவசாயம் பற்றிய கிராம மக்களின் பொதுக் கருத்து. ஆனாலும், எப்படியும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற வேட்கையோடு போட்டித் தேர்வு மாணவனைப் போல தடகள வீரனைப் போல சில சம்சாரிகள் மண்ணோடு மல்லுக் கட்டுவது தொடர்கிறது. பெரும்பாலும் தோல்வியே மிஞ்சுகிறது. நிரந்தர வேலை என்பது நிரந்தரமாக பெரு நகரங்களிலேயே கேள்வி குறியான நிலையில கிராமங்களில் பலர் கிடைச்ச வேலையை மட்டுமே பார்க்கும் நிலைமை.
தொழில் : பஞ்சாலை, பட்டாசு ஓரளவு வேலை வாய்ப்பு தருகிறது. பட்டாசு தொழிலாளிகள் நிறைந்த ஒரு கிராமத்தில் பேசுகிற போது, ஒரு பெண் தொழிலாளி சொன்னது. இப்ப எங்களுக்கு ரெகுலரா வேலை கிடைக்குது. தீபாவளி அடுத்த மாசம் வரப்போவுது. அதுக்குப் பெறகு என்ன ஆகுமோன்னு தான் பதட்டமா இருககுது. போன வருசம் தீபாவளி முடிஞ்சு நாலு மாசம் வேலை இல்ல. இப்பவேற மோடி மறுபடியும் ஜெயிச்சுட்டாரு ( நாகரீகம் கருதி அவர்கள் சொன்ன வார்த்தையை குறிப்பிடவில்லை) இன்னும் என்ன ஆகப்போகுதோ தெரியல-என்றதோடு கம்யூனிஸ்ட் கட்சி காரக தொடர்ந்து போராடித்தான் பயர் ஆபீச திறக்க வச்சாக, நாங்களும் போராட்டத்துக்கு போனோம். இனிமே மூடுனா, பெரிய போராட்டம் நடத்துவோம் என ஆவேசமாக பேசினார்.
வீடு : கானி நிலம் வேண்டும் எனப் பாடினார் மகாகவி பாரதி. எலி வளை ஆனாலும் தனி வளை வேண்டும் என்பது பழமொழி. சொந்த வீடு என்பது ஒவ்வொரு மனிதனின் கனவு. பலரின் கனவு இன்னும் நீண்ட கனவாகவே உள்ளது. ஆட்டுப் பண்ணை எனும் கிராமத்தில் பேசிய போது, ஆறாத சோறும் ஒழுகாத வீடும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதுவே நான் கனவு காணும் இந்தியா என மகாத்மா காந்தி கூறினார். என்று சொன்னவுடன் ஒரு பெரியவர் சொன்னது, காந்தி அப்பவே சொல்லி இருக்காரு, ஆனா நாங்க “ ஒழுகிற குச்சில்ல குளுருற கஞ்சியத்தான் இப்பவும் குடிக்கிறோம்“ என்றார். வீடு என்றால் வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை, குளியலறை, கழிவறை, பூறைஅறை என குறைந்தபட்சம் 5 ஆவது அறைகள் கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால், பல கிராமங்களில் பத்துக்கு பத்து என்ற அளவில் 100 சதுர அடியில் இரண்டு, மூன்று குடும்பங்கள் வாழ்கின்றனர். தலித் மக்களுக்கு அரசு கட்டி கொடுத்த தொகுப்பு வீடுகள் பல கிராமங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ளன.
2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது 2020 க்குள் அனைவருக்கும் வீடு கட்டித் தருவதாக மோடி ஊர், ஊராக பேசினார். இப்போது 2025க்குள் கட்டித் தருவதாக பேசுகிறார். ஆனால், ஏற்கனவே மத்திய அரசு திட்டமாக இருந்த இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தை பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டமாக பெயர் மாற்றம் ஆனதை தவிர வேறு எதுவும் நடக்காதது மட்டுமல்ல திட்ட நிதி ஒதுக்கீடும் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பசுமை வீடு திட்டத்தில் ரூ.2.10 லட்சம் வீட்டிற்கு ஒதுக்கப்படுகிறது. இதில் ரூ.30 ஆயிரம் சோலார் மின் விளக்கு அமைப்பதற்கு பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த நிதியை வைத்து பேஸ் மட்டம் மட்டுமே கட்ட முடியும். மேலே கட்ட மேலும் செலவு செய்ய முடிந்தவர்களே வீடு கட்ட முடியும்.
சோலார் விளக்குக்காக ரூ.30 ஆயிரம் பிடித்தம் செய்தாலும், இரு ஆண்டுகள் முடிந்தபின்பும், சோலார் விளக்கு மாட்டவில்லை. ஒதுக்கப்பட்ட நிதி பயனாளிகளுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. அடிப்படை பிரச்சனைகள் : பெண்களுக்கு கழிப்பிடம் குடிநீர் சாலை என்பதே பெரும்பாலான கிராமங்களில் முக்கிய பிரச்னையாக உள்ளது. சந்தித்த 50 கிராமங்களில் 42 ல் கழிப்பிடம், 34 ல் சாலை வசதி தேவையாக உள்ளது. ஸ்வச் பாரத் என இந்தியில் நாம கரணம் சூட்டப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்தில் வீடுகளில் கழிப்பறை கட்ட ரூ.12 ஆயிரம் ஒதுக்கப்படுகிறது. சிலர் வீடுகளுக்கு உள்ளேயும், சிலர் வெளியேயும் கட்டியுள்ளனர்.
வீட்டிற்கு வெளியே கட்டிய கழிப்பறைகள் அனைத்தும் கோழிகள் அடைக்கும் இடமாகவும், பழைய சாமான்கள் வைக்கும் அறையாகவும் பயன்படுகிறது. ரூ.12 ஆயிரத்தில் செப்டிக் டேங் மட்டுமே தோண்ட முடியும் என்பதால் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாத நிலைமை. இன்னும் பெரும்பாலான கிராம மக்களுக்கு பொது இடங்களே கழிப்பிடங்களாக உள்ளன. இதுபற்றி பல கிராமங்களில் பெண்கள் கூறியது, ஊருக்கு ஒதுக்கு புறத்தல வேலி கருவேல மரங்கள் உள்ளன. அங்க தான் ஒதுங்க முடியும். இப்ப, அதையும் வெட்டிட்டாங்க. எனவே, இருட்டுன பிறகு தான் போக வேண்டியதிருக்கு. கழிப்பிடம் கட்டி பல வருசம் ஆச்சு. திறக்கவே இல்ல, மோட்டாரு ரிப்பேரு, தண் ணீர் இல்ல. பராமரிப்பு இல்ல ஆகவே மூடிட்டாங்க இப்படி பெண்ககளில் பலவித குரல்கள்.
குடிநீர் : முன்பெல்லாம் சமுதாய கிணறுகள் கிராமங்களின் குடிநீர் ஆதாராம். அடிபம்பு, சின்டெக்ஸ் தொட்டி, மேல்நிலை தொட்டி இப்படி பல வந்தது. ஆனால், குடிநீர் தான் வரலை. எல்லா கிராமங்களிலும் பழுதடைந்து இடிந்த நிலையில் இருப்பதே இன்றைய அவலம். இராஜகோபாலாபுரம் கிராமத்தில் ஒரு சிறிய வட்ட கிணறு. வெள்ளைக்காரங்க காலத்துல, இந்த கிணறை தோண்டுனாங்க. இப்பவும் அதுல தண்ணீர் இருக்கு. ஆனா, குப்பையா கிடக்கு. இத சுத்தப்படுத்துன போதும் எங்க குடிநீர் பிரச்சனை தீரும் என ஒரு பெரியவர் சொன்னார். அம்பது வருசத்துக்கு முன்னாடி வெட்டுன கிணறு, தண்ணீர் இருக்கு, பஞ்சாயத்துல சுத்தப்படுத்தச் சொன்னா பண்ணல. நாங்களா தூர் வாருகிறோம். அரசாங்கம் எதுவுமே செய்யல என கிணற்றை காண்பித்தனர் கோபாலபுரம் மக்கள். குடிநீருக்காக தினசரி ரூ.30 முதல் 50 வரை செலவு செய்து விலைக்கு வாங்கு ம் நிலையிலேயே பல கிராமங்கள். குடிநீர் தருவது அரசின் பொறுப்பு என்பதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாமறி எல்லாமே விலை எனும் நிலை ஏற்பட்டுள்ளது.
மயானம் : வாழும் போது தான் சமநிலை இல்லை என்றாலும், இறந்த பிறகு மயானத்தில் அடக்கம் செய்வதிலும் எத்தனை வேறுபாடுகள், ஊருக்கு ஒரு மயானம் என்பது தேவையே. ஊரில் உள்ள ஒவ்வொரு சாதிக்கும் ஒரு மயானம் என்பதும் அதில் தலித் மக்கள் வசிக்கும் ஊரில் மயானம் இல்லை. மயானம் இருந்தால் உடலைக் கொண்டு செல்ல பாதை இல்லை. மேற்கூரை இல்லை. தண்ணீர் போன்ற வசதிகள் இல்லை என மயானத்திலும் புறக்கணிப்பு உள்ளது. இன்னும் இன்னும் கிராமங்களின் தேவைகள் நிறைய உள்ளது. வளர்ச்சி, முன்னேற்றம் போன்ற வார்த்தை ஜாலங்கள் இம்மக்களின் வாசல்களை கூட தொடவில்லை. மக்களிடம் நெருங்கிச் செல்கிற போது அவர்களின் மன உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் நம்பிக்கை மிக்கவர்களாகவே உள்ளனர்.
குடிநீருக்காக, கழிப்பிடத்திற்காக, சாலைக்காக, மயானத்திற்காக பலமுறை மனுக் கொடுத்தோம் நடக்கவில்லை. கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்பது ஏசுவின் மொழி. மக்கள் கேட்டார்கள் கிடைக்கவில்லை. தட்டுவதற்கு அரசின் கேளா காதுகளை எட்டுவதற்கு செப்டம்பர் 23ல் திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நோக்கிய மக்கள் கோரிக்கை பேருக்கு 50 கிராம மக்கள் தயாராகி வருகிறார்கள்.
கட்டுரையாளர் : சிபிஎம் விருதுநகர் மாவட்டச் செயலாளர்