ஜப்பானில் குறைந்தபட்ச ஊதியமாக ஒரு மணி நேரத்திற்கு 1,500 யென் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று அந்நாடு முழுவதும் கோரிக்கை வலுவாக எழுந்திருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஜப்பான் தொழிற்சங்கங்களின் தேசிய கூட்டமைப்பு இந்தக் கோரிக்கையை முன்வைத்தது. பிராந்திய வேறுபாடுகளைக் கடந்த ஒட்டுமொத்த தேசம் முழுவதும் குறைந்தபட்சத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு ஒரு மணி நேர வேலைக்கு 1,500 யென் ஊதியம் வழங்க வேண்டும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலமாகத் தெரிய வந்திருக்கிறது. அரசும், தொழிலாளர் துறையும் இந்தக் கோரிக்கையைப் பரிசீலிப்பதாகச் சொன்னாலும், அரசியல் அழுத்தம் இல்லாமல் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது சாத்தியமில்லை என்று தொழிற்சங்கத் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது. இத்தகைய குறைந்தபட்ச ஊதிய உயர்வைக் கொண்டு வர சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதால் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படுகிறது. வலதுசாரிக் கட்சியின் பிடியில் இருக்கும் நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டு வருவது எளிதான ஒன்றல்ல. எனவே நடைபெறவிருக்கும் மேலவைத் தேர்தலில் இந்தத் திருத்தம் முக்கியமான அம்சமாக மக்களின் முன்னால் பிரச்சாரத்தில் வைக்கப்பட வேண்டும் என்று கூட்டமைப்பு கூறுகிறது. அரசியல் கட்சிகளிடம் தங்கள் கோரிக்கையை எடுத்துச் செல்லும் முயற்சியிலும் தொழிற்சங்கத் தலைவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஆய்வின் முடிவு
சமூக ஆர்வலர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு யமாகுச்சி, கியோட்டோ மற்றும் ககோசிமா ஆகிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்டது. யமாகுச்சி நகரில் திருமணமாகாத, தனியாக வசிக்கும் ஒரு 25 வயது இளைஞன் தனது குறைந்தபட்ச தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமானால் ஒரு மணி நேரத்திற்கு 1,612 யென் வருமானம் ஈட்ட வேண்டியிருப்பது அந்த ஆய்வில் தெரிய வந்தது. அதேபோன்று, கியோட்டோ நகரில் உள்ளவர் 1,639 யென் மற்றும் ககோசிமா நகரில் வசிப்பவர் 1,584 யென் வருமானம் ஈட்ட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
சமூக பாதுகாப்புத்திட்டம்
குறைந்தபட்ச ஊதியம் பற்றிப் பேசிய ஜப்பான் தொழிற்சங்கத் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நோமுரா யுகிரோ, “குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தினால் இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும். உள்ளூரிலேயே வேலை கிடைத்துப் பணியாற்றினால் உள்ளுர் பொருளாதாரமும் பலனடையும். இதைச் செய்ய வேண்டுமானால் குறைந்த பட்ச ஊதியத்தை நடைமுறைப்படுத்துமாறு நிறுவனங்களை அரசு கேட்டுக் கொள்ள வேண்டும். சிறு நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் அதற்கு அரசுத்தரப்பிலிருந்து பாதுகாப்பு தர வேண்டும்” என்று குறிப்பிட்டார். சிறு வணிகர்களுக்கு பிரான்ஸ் அரசு தரும் சமூகப் பாதுகாப்பு திட்டம் போன்ற ஒன்றை ஜப்பானிலும் நடைமுறைப்படுத்தலாம் என்றார் அவர்.
பொதுப் போக்குவரத்து சரியாக இல்லாத நகரங்களில் தங்கள் பணியிடங்களை சென்றடைவதில் பெரும் சிரமங்கள் இருப்பதாகவும் இளைஞர்கள் உணர்கிறார்கள். அந்தப் பிரச்சனையிலிருந்து மீள சொந்தமாக இரு சக்கர வாகனங்கள் தேவைப்படுகிறது என்றும், அத்தகைய வண்டிகளைப் பராமரிப்பதற்கும் செலவு அதிகமாகிறது என்றும் இளைஞர்கள் தெரிவிக்கின்றனர். “ஜப்பானின் எந்த நகரத்தில் வசித்து வேலை பார்த்தாலும் ஒரு மாதத்திற்கு 2 லட்சத்து 20 ஆயிரம் யென் அல்லது 2 லட்சத்து 40 ஆயிரம் யென் வரையில் வருமானம் ஈட்டினால்தான் வாழ முடியும் “ என்கிறார் சிசோகா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்களில் ஒருவரான நகசாவா சுய்சி. மேலவைக்கான தேர்தலில் பெரும் வீச்சுடன் இந்தப் பிரச்சனை எழுப்பப்படும் என்று ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியளித்துள்ளது. அனைவர் உதடுகளும் உச்சரிக்கும் ஒன்றாக 1,500 மாறியிருக்கிறது.