ஈரோடு, ஜூன் 5-ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் விதிமுறை மீறிய 162 சாய, சலவை மற்றும் தோல் தொழிற் சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மலையாண்டி வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி, சாய, சலவை, தோல் உள்ளிட்ட தொழிற்சாலைகளின் கழிவு நீரை பூஜ்ய நிலைக்கு சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும். இதனைஆட்சியர் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இது தொடர்பான விதிகளை மீறி இயக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு கடந்த ஜன. 1 முதல் மே 31 வரை ஈரோடுமாவட்ட சுற்றுச்சூழல் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் சாயம் 49, சலவை 80, தோல் 11, அச்சு 12, சைசிங் 5, இதர தொழிற்சாலைகள் 5 என, 162 தொழிற்சாலைகள் விதிமுறைகளை மீறி இயக்கியது கண்டறியப்பட்டு, அவற்றின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.அதுபோல, பெருந்துறை சுற்றுச்சூழல் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த ஐந்து மாதங்களில் சாயம் ஆலைகள் 47, தோல் தொழிற்சாலைகள் 2 என 49 தொழிற்சாலைகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால், அவற்றின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. எனவே, தொழிற்சாலைகள், பூஜ்ய நிலை சுத்திகரிப்பு செய்து கழிவு நீரை வெளியேற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.