1942 - இரண்டாம் உலகப் போரின் போது, சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பான், அங்கிருந்த பல்லாயிரம் சீனர்களைப் படுகொலை செய்த, சூக் சிங் என்று குறிப்பி டப்படும் நிகழ்வு தொடங்கியது. ஆங்கிலேய ஆட்சியிலிருந்த சிங்கப்பூரையும், மலேயாவையும் 1942 பிப்ரவரி 15இல் ஜப்பானியப் படைகள் கைப்பற்றின. சிங்கப்பூரிலிருந்த சீனர்கள், ஜப்பானிய எதிர்ப்பாளர்கள் என்று கருதப்பட்டதால், சிங்கப்பூரைக் கைப்பற்று வதற்கு முன்பே, அங்கிருக்கும் சீனர்களை அழித்தொழிப்பதற்கான திட்டங்களை, ஜப்பான் ராணுவம் தீட்டிவிட்டது.
‘அந்நிய நாடுகளிலுள்ள சீனர்களைக் கையாளும் நடை முறைகள் குறித்த வழிகாட்டுதல்’ என்பது, 1941 டிசம்பர் 28இலேயே உருவாக்கப் பட்டுவிட்டது. ஜப்பான் ஆக்கிரமிப்பிற்கு கட்டுப்படாதவர்கள், ஒத்துழைக்காதவர்கள் ஆகிய அனைவரும் ‘நீக்கப்படவேண்டும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏராளமான சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு, 18-50 வயதிற்குட்பட்ட அனைத்து ஆண் சீனர் களும், சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அங்கு, ஜப்பானியர்களுக்கு எதிரான வர்கள் என்று முடிவுசெய்யப்பட்ட அனைவரும் பின்னர் படுகொலை செய்யப்பட்ட னர். ஜப்பானியர்களுக்கு எதிரானவர்கள் என முடிவுசெய்ய எவ்விதமான வரையறுக்கப்பட்ட வழிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. அந்தந்த மையத்திற்கான அலுவலரின் விருப்பு வெறுப்புகளின்படியும், ஆள்காட்டிகளால் காட்டப்பட்டவர்களும் ஜப்பானியர்களுக்கு எதிரானவர்கள் என்று முடிவுசெய்யப்பட்டனர்.
ஜப்பானுக்கு எதிரானவர்களாகக் கருதப்படாதவர்களின் முகத்தில் அல்லது கையில், ‘சோதிக்கப்பட்டவர்’ என்ற சதுர முத்திரை குத்தப்பட்டது. ஜப்பானுக்கு எதிரானவர்கள் என்று முடிவுசெய்யப்பட்டவர்களுக்கு, முக்கோண முத்திரை குத்தப்பட்டு, தனியாக டிரக்குகளில் கொலைக் களங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பல இடங்களில் பெண்களும், குழந்தைகளும்கூட இச்சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை யும் செய்யப்பட்டனர். சிங்கப்பூரைத் தொடர்ந்து, மலேயாவிலும் அரங்கேற்றப்பட்ட இந்த இனப்படுகொலையில், ஒரு லட்சம் பேருக்கும் அதிகமாகக் கொல்லப்பட்டதாக, சிங்கப்பூரிலுள்ள சீனர்கள் கூறுகிறார்கள். உத்தரவுகள் பெரும்பாலும் வாய்மொழியாக இருந்ததுடன், பல ஆவணங்கள் அழிக்கப்பட்டும் விட்டதால், ஜப்பான் சரணடைந்தபின், போருக்குப் பிந்தைய விசாரணைகளில், இச்செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் தண்டிக்க முடியவில்லை. இறுதியாக, 1966இல் 50 மில்லியன் டாலர்களை (தற்போதைய ரூபாயில் 2,850 கோடி!), இழப்பீடாகவும், கடனாகவும் வழங்க ஜப்பான் ஒப்புக்கொண்டது.
அறிவுக்கடல்