tamilnadu

img

இந்திய மக்கள் ஒன்றுபட்டால் மிகப்பெரிய புரட்சி சாத்தியம்

மக்கள் ஒற்றுமை மேடை கருத்தரங்கில் ப.சிதம்பரம் பேச்சு 

சென்னை, டிச.27- இந்திய மக்கள் ஒன்றுபட்டுப் போராடினால் மிகப்பெரிய புரட்சி சாத்தியம் என்று முன்னாள் நிதிய மைச்சரும் காங்கிரஸ் மூத்த தலை வருமான ப.சிதம்பரம் கூறினார். தமிழர் துரோக, முஸ்லிம் விரோத குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னை சைதாப்பேட்டையில் வியாழனன்று (டிச.26) மக்கள் ஒற்மை மேடை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது: குடியுரிமை திருத்தச் சட்டம் அம லுக்கு வந்த 15 நாட்களில் நாடு முழு வதும் மாபெரும் புரட்சி நடை பெற்றுள்ளது. இந்த புரட்சிக்கு சொந்தக்காரர்கள் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அல்ல. மாணவர்களும், இளைஞர்களும்தான் காரணம். உயிர்பலி ஏற்படும் என்ற  அச்சம் இருந்தாலும் அவர்களாகவே  முன்வந்து தினசரி போராடுகிறார்கள்.  சாதி வாரியாக, மத வாரியாக,கட்சி வாரியாக, சித்தாந்த ரீதியாகப் பிரிந் திருந்த அனைவரும் பாகுபாடுகளை மறந்து அரசியல் சாசனத்தை, நெறி களை, மதச்சார்பின்மையைக் காப் பாற்ற வேண்டும் என்று திரண்டு போரா டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கு வணக்கம். இந்த போராட்டத்தை மங்காமல் அவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இஸ் லாமியர்களுக்கும் அரசுக்கும் நடக்கும் போராட்டம் அல்ல. இதை  இஸ்லாமியர்களுக்கும் அரசுக்குமான போராட்டமாகச் சித்தரித்து விடக் கூடாது. ஆனால் அரசு அதைத்தான் விரும்புகிறது. 

ரூ.30ஆயிரம் கோடியில் சிறையா?

அசாம் மாநிலத்தில் 1,600 கோடி  ரூபாய் செலவு செய்து 19 லட்சம் மக் கள் இந்தியக் குடிமகன்கள் இல்லை என்று கண்டுபிடித்துள்ளார்கள். இந்தியா அவர்களை வெளியே தள்ளுகிறது. ஆனால் அவர்களை வங்கதேசமோ, மியன்மாரோ எங்கள்  குடிமக்கள் என ஏற்றுக் கொள்ள வில்லை. அந்த மக்களை என்ன  செய்யப் போகிறார்கள். பாதுகாப்பாக  சிறையில் அடைக்கப் போகிறார்களா? 46 கோடி ரூபாய் செலவில் 3 ஆயிரம் பேர் இருக்கக் கூடிய ஒரு சிறை கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. 19  லட்சம் பேருக்கும் சிறை கட்ட வேண்டு மென்றால் ஏறக்குறைய 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். இப்படி  இந்தியா முழுவதும் சிறை கட்டப்  போகிறார்களா? எத்தனை நாள் அவர்களை சிறையில் அடைப்பீர்கள்? 

காங்கிரஸ் ஆட்சியில் என்ன நடந்தது?

2010ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி யில் மக்கள் பதிவேடு நடத்த வில்லையா எனக் கேள்வி எழுப்பு கிறார்கள். அப்போது 15 இனங்களிலே விவரங்கள் சேகரிக்கப்பட்டன. தேசிய மக்கள் பதிவேடு என்ற திட்டமே அன்று இல்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டும்தான் நடத்தப்பட்டன. ஆனால் தற்போது 15 இனங்களுக்கு மாறாக 21 இனங்கள் கேட்கப்படுகின்றன. கூடுதலாக 6 இனங்களைச் சேர்த்த பாஜக அரசு,  அதில் உன்னுடைய முதல் முகவரி  என்ன என்று கேட்கிறது. ஒருவருடைய  தற்போதைய முகவரியைக் கேட்டால் நியாயம். இதற்கு முன்னால் எங்கு வசித்தீர்கள் என ஏன் கேட்க வேண்டும். எனவேதான் சந்தேகம் எழுகிறது. இந்த 6 இனங்களை ஏன்  சேர்த்தீர்கள் எனக் கேட்டால் அதற்கு உரிய பதில் இல்லை.

இந்துதேசமாக்க முயற்சி 

தேசிய மக்கள் பதிவேடு குறித்துப்  பேசவில்லை எனப் பிரதமர் கூறுகிறார்.  ஆனால் மக்களவையில் 8 முறை இது குறித்து பேசப்பட்டுள்ளது. ஆனால்  இதுகுறித்து விவாதமே நடைபெற வில்லை என மீண்டும் மீண்டும் பொய் பேசுகிறார்கள். அவர்களின் நோக்கம் 5 ஆண்டுகளுக்குள் இந்து தேசத்தை அமைக்க வேண்டும் என்பதுதான்.  அதனால்தான் 130 கோடி மக்களும் இந்துக்கள் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறுகிறார்.  இந்து தேசம் என்று வந்தால் மீண்டும் உயர்சாதி, நிலப்பிரபுத்துவம் ஆதிக்கம் மேலோங்கும். எனவே இந்து தேசத்திலே இந்துக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை மறந்து விடக் கூடாது. 15 நாட்களில் இவ்வளவு பெரிய புரட்சியைச் செய்ய முடியும் என்றால், இந்திய மக்கள் ஒன்றுபட்டால் அதைவிட மிகப் பெரிய புரட்சி சாத்தியமாகும் என்றார்.

கனிமொழி

திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசுகையில், தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் ஒரு அமைதியான குணம் உண்டு. அதைச் சீண்டிப் பார்த்தால் அது மிகப்பெரிய போர்க் குணமாக மாறும். நாட்டை பிளவுபடுத்தக் கூடிய மசோதாவை அதிமுக நிராகரித்திருந்தால் அது சட்டமாக நிறைவேறி இருக்காது. அதிமுக சிறுபான்மை மக்களுக்கு இலங்கைத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்துள்ளது. நாடே இந்த சட்டத்திற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் போது தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) குறித்து பேசவில்லை என்று பிரதமர் கூறுகிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜூன் 20ஆம் தேதி மக்களவையில் உரையாற்றும் போது இந்த அரசு தேசிய மக்கள் பதிவேடு திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறினார். குடியுரிமை திருத்த மசோதா குறித்து மக்களவையில் விவாதம் நடந்து முடிந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிக்கும் போது தேசிய மக்கள் பதிவேட்டிற்கு ஒரு பின்புலத்தை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. தேசிய மக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்துவோம். ஒரு ஊடுருவல்காரரைக் கூட நாங்கள் விட்டுவைக்க மாட்டோம் என்று கூறினார்.

பாஜக இல்லாத இந்தியா

டிசம்பர் 3ஆம் தேதி ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தின் போது அமித்ஷா தேசிய மக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தி ஊடுருவல்காரர்களை தூக்கி எறிவோம் என்றார். உள்துறை அமைச்சகத்தின் வருடாந்திர அறிக்கையில் அத்தியாயம் 15இல் தேசிய மக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பிறகும் கூட பிரதமர் இதுகுறித்து பேசவில்லை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.  மக்களவையில் பெரும்பான்மை உள்ள காரணத்தால் எந்த சட்டத்தை வேண்டுமானாலும் கொண்டு வரலாம். ஆனால் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதற்கு உதாரணம்தான் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள்.தேர்தல் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என அமைதியாக இருக்காமல், ஒவ்வொரு கருத்திற்கும் நாமும் பொதுமக்களும் எதிர்வினையாற்ற வேண்டும் என்றும் கனிமொழி கேட்டுக் கொண்டார்.  

தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஏறக்குறைய 20 மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. நாடு முழுவதும் போராட்டம் பற்றி எரிய வேண்டும், மத ரீதியாக மக்கள் பிளவுபட வேண்டும் என்பதுதான் சங்பரிவாரத்தின் நோக்கம். பிரித்தாளும் சூழ்ச்சியாக கிறிஸ்தவர்களுக்கு தற்போது குடியுரிமை வழங்கப்படுகிறது. பின்னாளில் அது பறிக்கப்படும். இந்தியாவை இந்து நாடாகவும், அரச மதமாக இந்து மதத்தை அறிவிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது கொள்கை. இந்த செயல்திட்டத்தைச் செயல்படுத்த, சிறுபான்மை ஆதரவு இல்லாமல் தங்கள் ஆளுகைக்கு இந்துக்களை ஒன்றுதிரட்ட ராமர் கோவிலைக் கட்ட உள்ளனர். 3ஆயிரம் கோடி ரூபாயில் 4 மாதத்தில் ராமர் கோவிலைக் கட்டி, பெருமளவில் இந்துக்களைத் திரட்டப்போகிறார்கள். இது நடந்தால் நாடு பிளவுபடும் என்று எச்சரித்தார். 2021க்குள் இந்தியாவில் ஒரு இஸ்லாமியரோ, கிறிஸ்தவரோ இருக்க மாட்டார்கள் என்று ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பேசுகி றார்கள். அதன் பொருள், குடியுரிமை வேண்டுமென்றால் தாய் (இந்து) மதத்திற்குத் திரும்ப வேண்டும் என்பதுதான். இதனை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளிடம் செயல்திட்டம் இல்லை. தேசிய அளவில் செயல் படக்கூடியவர்களாகக் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளுமே உள்ள னர். பாஜக ஆட்சியை வீழ்த்த, அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க இவ்விரு சக்திகளும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஜவாஹிருல்லா

மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பேசுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் பற்ற வைத்துள்ள தீயை ராணுவத்தால் கூட அடக்க முடியாது. மாணவர்களின் போராட்டத்தால் எங்களின் உரிமைகளை நசுக்க முடியாது. இந்தியா என்றைக்கும் காந்தியின் தேசமாகத்தான் இருக்கும், ஒருபோதும் கோட்சே-வின் தேசமாக மாறாது என்ற  நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது” என்றார். “மதத்தால் மொழியால் மக்கள் வேறுபட்டு இருந்தாலும் மதச்சார்பற்ற முறையில் ஒரே இந்தியாவாக எழுந்து நின்று போராடுகிறார்கள். இந்த உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத உள்துறை அமைச்சர் அமித்ஷா, கோயபல்சே வெட்கப்படும் அளவுக்குப் பொய்களை அவிழ்த்துவிடுகிறார். மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்தால் பாஜக-வை வீழ்த்தலாம் என்பதே நடைமுறை அனுபவமாக இருக்கிறது. காந்தி கண்ட இந்தியாவைப் பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட முன்வர வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
 

 

;