tamilnadu

img

மீன்கள் எதைச் சாப்பிடுகின்றன? - அன்பழகன்

அறிவியல் கதை

புதுச்சேரிக்கு அருகில் உள்ள வீராம்பட்டினம் கடற்கரைக்கு அடிக்கடி அவள் அப்பாவுடன் செல்வாள். கடல் அலையோடு எச்சரிக்கையாய் அப்பாவின் துணையோடு ஆசை தீரும்மட்டும் விளையாடி மகிழ்வாள். காலில் ஒட்டிய மணல் துகள்களைக் கூட தட்ட மனமில்லாமல் அப்படியே ஈரத்தோடு நடப்பாள். அவளின் தந்தை கரைக்கு வரும் படகுகளைப் பார்த்த வண்ணமிருப்பார். ஒவ்வொரு படகிலும் மீனவர்கள் வலையில் சிக்கிய மீனோடு கரைக்குத் திரும்புவார்கள். அவளுக்கோ வலையில் சிக்கிய மீன்களைவிட, யாரும் கவனிக்காத சிப்பிகள், கிளிஞ்சள்கள் போன்ற சின்னச் சின்ன உயிர்ப்பொருட்களின் மீதுதான் கண் போகும். மீனவர்கள் வலையில் சிக்கிய மீன்களை எடுத்து கூடையில் அடுக்குவதிலேயே குறியாய் இருப்பார்கள். இந்த கடல் சிப்பிகள் போன்ற இதர உயிர்ப்பொருட்களை எடுத்து கீழேப் போட்டு விடுவார்கள். ஈரத்தோடு இருக்கின்ற கிளிஞ்சல்கள், சின்ன சங்குகள், சிப்பிகள், சோழிகள், நட்சத்திர மீன்கள் போன்றவற்றை எச்சரிக்கையோடு பார்த்துக்கொண்டிருப்பாள். அவசரபடாதம்மா! சிலது கையைக்கிழிச்சிடும், சிலது விஷத்தன்மையுடையதாகக் கூட இருக்கலாம் என அவளின் அப்பா எச்சரித்துக்கொண்டே இருப்பார். அவள் தயாராய் எடுத்து வந்திருந்த டப்பாவின் மேல் மூடியால் ஒவ்வொன்றாய் கவனமாக எடுத்து பெரிய டப்பாவில் போடுவதிலேயே குறியாய் இருந்தாள்.

வலையில் சிக்கிய இந்த சின்ன உயிர்ப் பொருட்கள் கரைக்கு வரும்போது பெரும்பாலும் இறந்துபோய்தான் கிடக்கும். இவளோ அந்த சிப்பிகளைத் தொட்டுப்பார்த்தாள். அதன் அழகில் சொக்கிப்போனாள். அப்போதுதான் கவனித்தாள், அதன் வாய்களில் பாசிப்படிந்ததைப் போன்ற அழுக்குத் துகள்களை. ஒருவேளை இதைத்தான் இந்த சிப்பிகள் உணவாக உண்ணுமோ என அவளுக்குள் அடிக்கடிக் கேட்டுக்கொள்வாள். அவளின் தந்தை மீன்களை விலைபேசி வாங்குவதிலேயே குறியாய் இருந்தார். ஒருவழியாக மீன்களை வாங்கிவிட்டார். புது மீன்களை வாங்குவதில் அவருக்கு சந்தோஷம். மீன்குழம்பு சுவையாக இருக்கும் என்பார். சரி வீட்டிற்கு போகலாம் வா! என அவளின் தந்தை அழைக்க சைக்கிளில் கிளம்மினார்கள். அப்பா எனக்கொரு சந்தேகம், “இந்த மீன்கள், சிப்பிகள் எல்லாம் எதைச் சாப்பிடும்?” என்று ஆவலோடு கேட்டாள். இது என்ன கேள்வி! “கடல்ல கிடைக்கிறதைச் சாப்பிடும். ஒரு மீனு இன்னொரு மீனைச் சாப்பிடும். எதுக்கு இதெல்லாம் உனக்கு, போய் ஒழுங்கா தேர்வுக்கு படி!” என்று அவளை அதட்டினார். அவளுக்கோ இந்த பதிலில் திருப்தி இல்லை. யாரைக் கேட்பது என சிந்தித்தப்படியே இருந்தாள்.

வீட்டிற்கு வந்து தேர்வுக்கு படித்தாலும், இந்த கேள்வியே மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருந்தது. மறுநாள் அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்தும்போது இந்த கேள்வியைக் கேட்டுவிட்டாள். அவர் பாடத்தை முடித்து விட்டு வந்தார். நல்ல கேள்வி கேட்டாய்! கடலில் நிறைய உயிரினங்கள் வாழ்கின்றன. அளவில் பெரிய உயிரினங்கள் சிரிய உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. இப்படியாக இந்த உணவு சங்கிலி தொடர் கதையாக இருக்கும். என்று ஆசிரியர் கூற, அவளும் சரி சார் என்றபடி ஆசிரியருக்கு நன்றி சொல்லிவிட்டு வகுப்பு பாடத்தை படிக்க ஆரம்பித்தாள். ஏதோ கொஞ்சம் நெருக்கமான பதிலைச் சொல்லிவிட்டோம். இன்னும் அறிவியல் ரீதியாக சரியான பதிலை தேடவேண்டுமென ஆசிரியர் தனக்குள் சொல்லிக்கொண்டார். வீட்டிற்கு வந்ததும் சாய்வு நாற்காலியில் ஓய்வுக்காக அமர்ந்தார். எதிரே இருந்த மீன் தொட்டியில் கவனம் சென்றது. மீன்கள் அழகாய் நீந்திக்கொண்டிருந்தன. தொட்டியின் அடியில் பாசி, புற்கள் சின்ன சின்ன தாவரங்கள் அசைந்தபடியே இருந்தன. நீளமும் வெள்ளையுமாய் உட்புறம் ஜொலித்தன. ஆனாலும் மீன்கள் எதைச் சாப்பிடும்? என அந்த மாணவி எழுப்பிய கேள்வியே அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போனது.

அப்பொழுதுதான் ஆசிரியரின் மகள் சுவேதா ஒரு டப்பாவோடு வந்தாள். அதிலிருந்து எதையோ எடுத்து மீன் தொட்டியில் தூவினாள். மெல்ல மெல்ல அந்த உணவு உருண்டைகள் நீரில் மிதந்து உள்ளே இறங்கிக் கொண்டிருந்தன. உடனே மீன்கள் வேகமாக வந்து அந்த உணவு உருண்டையை விழுங்கத் தொடங்கின. உணவை விழுங்கிய படியே மீன்கள் மகிழ்ச்சியாய் நீந்திக்கொண்டிருந்தன. மீன்களுக்கு எதை உணவாய் கொடுக்கிறாய்?. அதில் என்ன கலந்திருக்கிறது? என ஆவலோடு தன் மகளிடம் கேட்டார்.மண்புழுக்கள், மாமிசக் கழிவுகள் போன்றவற்றை நன்கு உலர்த்தி அதோடு கோதுமை தவிடு சேர்த்து அரைத்து பாக்கெட்டில் வைத்து கொடுக்கிறார்கள். இதையே உணவாக மீன்களுக்கு நான் தருகிறேன். சரி சரி அப்படியென்றால் கடலில் உள்ள மீன்கள் எதை உண்ணுகின்றன? என மேலும் கேட்டார். “கடலின் மேற்பரப்பில் கண்ணுக்கு புலப்படாத சின்னஞ்சிறு செடிகள், நீர்வாழ் பாசிகள், பூண்டுகள், நீரில் பிறக்கும் ஒரணுவுயிர்கள் போன்றவை நன்கு செழித்து வளரும். இவையே மீன் குஞ்சிகளுக்கு ஊட்டமிகு உணவாகும். ஆனால் இவற்றை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. இந்த சின்னஞ்சிரிய தாவரங்கள் சூரிய ஒளியைக் கிரகித்து வளர்கின்றன. இவற்றையே மீன்கள் உண்ணுகின்றன. மேலும் சிறிய மீன்களை பெரிய மீன்கள் உண்டு வாழ்கின்றன. இப்படி இந்த உணவு சங்கிலி போய்க்கொண்டே இருக்கும்” என ஒரு நீண்ட விளக்கத்தை அவள் கூறினாள்.

ஆசிரியருக்கோ இது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நிலப்பரப்பில் கண்ணுக்கு தெரிகின்ற காடுகள் உள்ளது போல, கடலில் கண்ணுக்குத் தெரியாத இந்த தாவரங்கள் காடுகள் போல உருவாகி உள்ளதோ என எண்ணத் தோன்றியது. அவரின் மகள் ஏதோ விளையாட்டாய் மீன் தொட்டி வைத்து பொழுது போக்குகிறாள் என ஆசிரியர் நினைத்தது தவறாகிப்போனது. மேலும் ஏதாவது சந்தேகமா? என்பது போல் தன் தந்தையைப் பார்த்தாள் சுவேதா. ஆசிரியருக்கோ விடை கிடைத்ததைப் போல் இருந்தாலும், மேலும் ஒரு கேள்வியை தன் மகளிடம் கேட்க வேண்டும் போல இருந்தது. மீன் தொட்டியில் காற்றுக் குமிழ்கள் எங்கிருந்து வருகின்றன; அது எதற்காக? என பட்டென கேட்டார் ஆசிரியர். ஒ! அதுவா என்றபடி சுவேதா பேசலானாள். மீன்கள் வாழ்வதற்கு உணவு மட்டும் போதாது, காற்றும் வேண்டுமல்லவா? அதாவது ஆக்சிஜன் வேண்டுமல்லவா? அதற்காக ஒரு சிரிய மோட்டார் மூலம் காற்று உள்ளே செலுத்தபடுகிறது. அதோடு மீன்தொட்டியின் அடியில் படியும் உணவு துகள்களும் மீன்களின் கழிவும் தொட்டியை அடைத்துக்கொள்ளாதபடி அதை வெளியேற்றவும் உதவுகிறது. அதோடு மட்டுமல்லாமல் தொட்டியில் ஒரு நீர் சுழற்சியும் நடக்கிறது என்றாள். அவளின் பதிலை அங்கீகரிப்பது போல ஆசிரியர் தலையை ஆட்டினார்.

அப்படி என்றால் கடலில் வாழும் மீன்களுக்கு ஆக்சிஜன் எங்கிருந்து வருகிறது? என மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பினார். அது ஒரு பெரிய கதை. சூரிய ஒளி கடலின் மேல்மட்டத்திலிருந்து சுமார் 250 அடி வரை பரவும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதனால் காற்றில் உள்ள ஆக்சிஜன் கடலின் மேற்பரப்பில் கரைய ஆரம்பிக்கிறது. இதனால் கடலில் உயிரினங்கள் வாழ முடிகிறது என்றாள். அப்படியென்றால் கடலின் அடி ஆழம்வரை சில மீன்கள், உயிரினங்கள் வாழ்வதாக சொல்கிறார்களே! அது எப்படி சாத்தியம் என ஒரு எதிர் கேள்வியை ஆசிரியர் கேட்டார். சுவேதா சற்றே யோசித்து பேசலானாள். அதற்கு நீங்கள் கடலின் நீரோட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது பூமியின் துருவங்களிலிருந்து கடலில் நீரோட்டங்கள் பாய்கின்றன என்பதை முதலில் கண்டு பிடித்தார்கள். அதோடு மட்டுமல்லாமல், மேற்பரப்பிலிருந்து கடலின் அடி ஆழம் நோக்கியும், அதேபோல கடலின் அடி ஆழத்திலிருந்து மேல் நோக்கியும் நீரோட்டம் பாய்வதாக கண்டுபிடித்தார்கள். இதனால் மேற்பரப்பில் தண்ணீரில் கரைந்த ஆக்சிஜன் கடலின் அடி ஆழம்வரை செல்ல முடிகிறது. கூடவே உணவு பொருட்களும் பிற கழிவுகளும் மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் செல்கின்றன. இந்த கடலின் சுழற்சியே உயிர்கள் தோன்றவும் வளரவும் காரணமாகின்றன என விரிவாக எடுத்துக் கூறினாள். ஆசிரியருகோ வியப்பாக இருந்தது. கடல் ஒரு உருளையைப் போல உள்ளுக்குள் உருளுகிறதா? கடலில் அலை அடிப்பதைப் வெளியிலிருந்து பார்க்கிறோம். உள்ளுக்குள் அலை அடிப்பதை எப்படி புரிந்து கொள்வது! எப்படி இருந்தாலும் உயிர்களின் மிகப்பெரிய கருவரையாக இந்த கடல் காட்சியளிக்கிறதே! இத்தனை நாள் கடலை வெறுமனே பார்த்துவிட்டோமே என உள்ளுக்குள் ஆதங்கப்பட்டார்.

ஆசிரியர் தன் மகளுக்கு நன்றி சொல்லி வாழ்த்தினார். இப்படி எதையும் அறிவியல் ரீதியாக புரிந்து வாழ வேண்டுமென வாழ்த்தினார். சுவேதா உள்ளுக்குள் அகமகிழ்ந்து உள்ளே சென்றாள். ஆசிரியருக்கே தனது மாணவி எழுப்பிய கேள்விக்கு மிக விரிவான விடை கிடைத்துவிட்டது. அதே நேரத்தில் கடலைப்பற்றிய புதிய பார்வை அவருக்குள் உருவாகிவிட்டது. இதை தனது மாணவர்களுக்கு அழகாக எடுத்துச்சொல்ல வேண்டுமென தனக்குள் பதிந்து கொண்டார். அதோடு கடல் வெறும் உப்பு நீரல்ல அது உலகின் கருவரையாக சுழன்றுகொண்டிருக்கிறது. இதை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும். சுற்றுச்சூழலின் உயிராகப் போற்ற வேண்டும். இதை உணர்வு பூர்வமாக மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல இப்பொழுதே தயாராகிவிட்டார் ஆசிரியர்.