tamilnadu

img

ஊடகங்கள் மறைத்த மோடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

“உலகம் சுற்றும் வாலிபன்” மோடி அவர்களின் அமெரிக்க பயணம் குறிப்பாக ஹூஸ்டன் நகரில் நடந்த கூட்டம் வழக்கம் போல அதீத விளம்பரத்துடன் வடிவமைக்கப்பட்டது. 50,000க்கும் அதிகமான இந்தியர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் கலந்து கொண்டார். அமெரிக்காவில் இந்திய பிரதமர் கலந்து  கொள்ளும் ஒரு பொது கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதியும் பங்கேற்பது என்பது  இதுவரை எவருக்கும் கிடைக்காத மதிப்பும் மரியாதையும் எனவும் அது மோடிக்கு கிடைத்ததாகவும் ‘பக்தாஸ்’ கூட்டம் சமூக ஊடகங்களில் ஊதித் தள்ளுகின்றனர். ஆனால் இதைவிட அதிக மரியாதையும் மதிப்பும் நேருவுக்கு அமெரிக்க ஜனாதிபதிகள் ஐசன் ஹோவர், கென்னடி ஆகியோர் தந்துள்ளனர். இதனை மோடியின் பக்தர்கள் மறைப்பது அவர்களின் பொய்ப் பிரச்சாரத்திற்கு மிகத் தேவை.

டிரம்பின் தேர்தல் முகவரா மோடி?

அமெரிக்க நிர்வாகத்தின் ஒவ்வொரு அசைவும் அதன் சொந்த நலனை சார்ந்தே  இருக்கும் என்பதுதான் உலக அனுபவம். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்திய பிரதமர் மோடியுடன் மேடையில் தோன்றுகிறார் எனில் அதற்கு ஒரு காரணம் உண்டு. 2020ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகள் தேவை. மோடியின் புகழ்பாட அது முக்கியக் காரணம். “அப்கி பார் டிரம்ப் சர்க்கார்” அதாவது அடுத்த ஆட்சி டிரம்பின் ஆட்சிதான் என மோடியும் புக ழுரைத்தார். அயல்நாட்டு தேர்தல்களில் இந்தியா  கருத்து தெரிவிப்பது இல்லை. ஆனால் மோடி இதனை மீறி உள்ளார். 

இந்தியாவில் மட்டுமல்ல; அமெரிக்கா விலும் இது கடுமையான விமர்சனத்திற்கு வழி வகுத்துள்ளது. ஒரு வேளை டிரம்ப் தோற்றால் (அதற்குதான் அதிக சாத்தியம் உள்ளது என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன) இந்தியா குறித்த அமெரிக்காவின் நிலை என்ன ஆகும்?
 

ஹூஸ்டனில் பிரம்மாண்ட மோடி எதிர்ப்பு அலை!

மோடியின் ஹூஸ்டன் கூட்டம் குறித்து இந்திய ஊடகங்கள் புகழ்ந்து எழுதியுள்ளன. ஆனால் கூட்ட அரங்கிற்கு வெளியே மோடியை கண்டித்து ஒரு பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் நடந்தது என்பதை இந்திய ஊடகங்கள் (ஓரிரு விதிவிலக்கு தவிர) மறைத்துவிட்டன. இந்திய ஊடகங்களின் மோடி ஆதரவு அல்லது அவர் களுக்கு ‘பக்தாஸிடம் பயம்’ மேலும் மேலும் அதிகரித்து வருகிறது என்பதற்கு இது ஒரு கூடுதல் உதாரணம். இந்த பிரம்மாண்ட மோடி எதிர்ப்பு ஆர்ப்பாட்ட த்தை The Alliance for Justice and Accountability (AJA) கூட்டமைப்பு ஏற்பாடு செய்தது. இந்த கூட்ட மைப்பில் ‘மனித உரிமைகளுக்கான இந்துக்கள்’ ‘இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில்’ போன்ற பல அமைப்புகள் உள்ளன. இந்த ஆர்ப்பாட்ட த்தில் Jewish Voice for Peace (சமாதானத்திற் கான யூத குரல்)/ Black Lives Matter (கறுப்பின மக்களின் உயிரும் முக்கியமானதே) போன்ற அமைப்புகளும் பங்கேற்று மோடிக்கு எதிராக குரல் எழுப்பினர்.

‘மனித உரிமைகளுக்கான இந்துக்கள்’ எனும் அமைப்பின் நிர்வாகி சுனிதா விஷ்வநாதன் கூறும் பொழுது “பல்வேறு அமைப்புகள் இந்த எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்றது முக்கியத்துவம் வாய்ந்தது” என குறிப்பிடுகிறார். ஆம்! இந்த  ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்க வாழ் இந்துக்கள்/ முஸ்லிம்கள்/ சீக்கியர்கள்/ கிறித்துவர்கள் மட்டு மல்லாது கறுப்பின மக்கள், ஜனநாயகம் பக்கம் நிற்கும் வெள்ளை இன மக்கள், இலத்தீன் அமெரிக்க நாட்டு மக்கள் என பல தரப்பினரும் பங்கேற்றனர். உலகின் மிகப்பெரிய இரண்டு வலதுசாரி சர்வாதிகாரிகளுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது எனவும் சுனிதா விஷ்வநாதன் தெளிவுபடுத்தினார்.

மோடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் முக்கிய நோக்கங்கள் 

கும்பல் படுகொலைகள்/ அசாமில் குடிமக்க ளுக்கான தேசிய பதிவேடு/ மதத்தின் பெயரால் நடக்கும் படுகொலைகள்/ 370வது பிரிவு முடக்கம்/ சாதிய அடக்குமுறைகள்/ போலி என் கவுண்டர் படுகொலைகள் ஆகியவற்றை இந்த அமைப்புகள் எதிர்க்கின்றன எனவும் சுனிதா விஷ்வநாதன் கூறுகிறார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உயர்த்தி பிடித்த வாசகங்கள் இதனை தெளிவு படுத்துகின்றன. அவற்றில் சில: “மோடியே திரும்பி போ”

“மோடியை நாங்கள் வரவேற்கவில்லை”
“ஹுஸ்டன் நகரம் மோடியை நிராகரிக்கிறது”
“இந்துயிசம் வேறு; இந்துத்துவா வேறு! நாங்கள் இந்துத்துவாவை எதிர்க்கிறோம்”
“உண்மையான இந்துக்கள் கும்பல் படு கொலையில் ஈடுபடமாட்டார்கள்”
“இந்துத்துவா பாசிசத்தை நிறுத்து”
“கிறித்துவர்கள்/தலித்துகள்/முஸ்லிம்களை கும்பல் படுகொலை செய்வதை நிறுத்து”
“காஷ்மீரிகளுக்கு ஜனநாயக உரிமைகளை மீண்டும் வழங்கு”
“இரண்டு லட்சம் காஷ்மீர் குழந்தைகள் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர்”
“காஷ்மீரை இராணுவ பிடியிலிருந்து அகற்று”
“சிறுபான்மை மக்களை துன்புறுத்துவதை நிறுத்து”
“காஷ்மீரில் இனப் படுகொலையை நிறுத்து”
“இந்து முஸ்லிம் சகோதரத்துவத்துக்கு கை கொடுப்போம்; இந்துத்துவாவிற்கு கல்தா கொடுப்போம்”
“தேவை தன்பாலின உரிமை; தேவை இல்லை இந்துத்துவா பாசிசம்”
“மனித நேயத்தை காப்போம்”
“சஞ்சீவ் பட்டை விடுதலை செய்; மாற்றுக் கருத்துக்கு இடம் கொடு”
“ஹூஸ்டன் நகரில் எங்களுக்கு புதிய பிரச்சனை தோன்றியுள்ளது; அது மோடி”
“டிரம்பும் மோடியும் பாசிசத்தை ஆலிங்கனம் செய்கின்றனர்”
“தப்ரேசுக்கு நீதி தேவை; இந்தியாவை பாது காப்பு தரும் தேசமாக மீண்டும் மாற்று”
“மோடியும் டிரம்பும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்”
 

அமெரிக்க டிவிட்டரில் மோடி எதிர்ப்பு
 

அமெரிக்க டிவிட்டர்களும் மோடி எதிர்ப்பை பதிவு செய்தன. அவற்றில் சில: சிம்ரன் ஜீத் சிங்: “மனித குலத்தை அழிக்க வந்த கசாப்புக் காரர் மோடி” முனிரா பங்கா: “ஹூஸ்டனில் இன்று அனைத்து மதத்தினரும் ஒன்று சேர்ந்து பாசிசத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர்; மோடியை திரும்பி போக வலியுறுத்தினர்”

ஜோ கவுர்: “ஹூஸ்டனில் வெள்ளை தீவிரவாதிகள் இந்து தீவிரவாதிகளுடன் இணைந்தனர். இது சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டதா அல்லது கர்ம பலனா? உங்கள் நம்பிக்கைப் படி எது வேண்டுமானாலும் முடிவு செய்து கொள்ளுங்கள்” பீட்டர் பிரடெரிக்: “ஆர்.எஸ்.எஸ்.= கே.கே.கே.(வெள்ளை இனவாத அமைப்பு). ஆர்.எஸ்.எஸ். மோடியே திரும்பி போ” டிரம்பை மோடி மிகவும் புகழ்ந்து தள்ளினார்.  பதிலுக்கு டிரம்பும் மோடியை புகழ்ந்தார். ஆனால் அடுத்த நாள் டிரம்ப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்தித்தார். அந்த சந்திப்பின் பொழுது இம்ரான்கானையும் பாகிஸ்தானையும் டிரம்ப் புகழ்ந்து தள்ளினார். இம்ரான்கான் மிகச்சிறந்த தலைவர் என டிரம்ப் புகழாரம் சூட்டினார். காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என மீண்டும் பதிவு செய்தார் டிரம்ப். டிரம்பின் இந்தச் செயல்கள் மோடியையும் அவரது பக்தர்களையும் மிகவும் நோகச் செய்திருக்கும் எனில் மிகை அல்ல.

ஆதாரங்கள்: தி வயர்/ நியூஸ் கிளிக்/
நியூயார்க் டைம்ஸ்
.

 

;