tamilnadu

img

இந்திய மாணவர் சங்கத்தின் பொன்விழா துவக்கம் கல்விக்கான போராட்டத்தில் எழுச்சிமிகு 50 ஆண்டுகள்- க.நிருபன் சக்கரவர்த்தி

இரண்டாம் உலகப்போரின் துவக்க காலகட்டம். இந்திய விடுதலைப் போராட்டம் பற்றியெரிந்து கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தேசம் முழுவதும் மக்கள் அலைஅலையாக திரண்டு விடுதலைக்கான பாதையில் வீறுநடை போட்டு முன்னேறிக் கொண்டிருந்தனர். இப்போராட்டங்களில் தவிர்க்கமுடியாத அங்கமாக மாணவர்கள் தங்களை ஏற்கனவே இணைத்து கொண்டிருந்தனர். நாடு முழுவதும் போராடும் இயக்கங்களில் மாணவர்களின் பங்கு அளப்பரியதாக இருக்கும் போது மாணவர்களுக்கான ஒரு அமைப்பு வேண்டும் என்பதிலிருந்து தேசம் முழுமைக்குமான அமைப்பாக 1936 ஆகஸ்ட் 12ல் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்(ஏ.ஐ.எஸ்.எப்) தோற்றுவிக்கப்பட்டது. ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் மற்றும் முகமதுஅலி ஜின்னா உள்ளிட்ட தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றிருந்தனர். அனைவருக்குமான ஜனநாயகப்பூர்வ கல்வி கிடைத்திட, தேச விடுதலைக்கான போராட்டத்தில் அனைத்துப் பகுதி மாணவர்களும் பங்கேற்பது என்ற அழைப்பை ஏற்று எண்ணற்ற மாணவர்கள் அனைத்து பகுதிகளிலும் தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றனர். நாடு விடுதலையடைந்த பின்னர் காங்கிரஸ் ஆட்சி மக்களின் வாழ்வில் எந்தவொரு அடிப்படையான மாற்றத்தையும் ஏற்படுத்த தவறியது. தேசம் முழுவதும் ஏற்பட்ட மாற்றம் என்பது இந்திய முதலாளிகளுக்கும், நிலப்பிரபுக்களுக்கும் சாதகமாக அமைந்தது. நேரு கடைபிடித்த கலப்பு பொருளாதாரம் சில பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உருவாக  உதவியதே தவிர, அனைவருக்குமான கல்வி, வேலை, விவசாயிகளுக்கான நில உரிமை போன்றவற்றில் ஏற்பட்ட தேக்கம் சமூக ஏற்றத் தாழ்வை அதிகப்படுத்தியது. இதற்கெதிராக மாணவர்கள் களத்தில் இறங்கி போராடிக் கொண்டிருக்கும் போது ஏ.ஐ.எஸ்.எப் தலைமை, காங்கிரஸ் கட்சி இந்தியாவிற்கான மாற்றத்தை மட்டு மல்ல; சோசலிசத்தையே கொண்டு வந்துவிடுமென அதீத  நம்பிக்கையில் இருந்தது. இதனால் போராடும் மாண வர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் மாநில அளவில் அமைப்பு களை ஏற்படுத்திக்கொண்டனர். தமிழக மாணவர் சங்கம், கேரள மாணவர் சங்கம் - இப்படி மேற்குவங்கம், ஆந்திரா, திரிபுரா என பல மாநில அமைப்புகளாக செயல்பட துவங்கினர்.
அறுபதுகளின் இறுதியில்...
அறுபதுகளின் இறுதியில் தேசம் முழுமைக்கும் வறுமை தலைவிரித்தாடுகையில் இந்திரா காந்தியின் அரசு வறுமையை மேலும் தீவிரப்படுத்தவே செய்தது.  இக்காலகட்டத்தில் கல்விக்கான போராட்டம் தீவிர மடைந்திருந்தபோது இந்தியா முழுவதிலும் அரசின் கொள்கைகளுக்கு எதிராக போராடும் மாநில அளவிலான மாணவர் அமைப்புகளை ஒன்றிணைத்து 1970 ஆகஸ்டில் மேற்கு வங்கத்தின் டம்டம் நகரில் கூடி இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சார்ந்த மாணவர் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து தேசம்முழுமைக்கும் ஒரே அமைப்பாக விடுதலைப் போராட்டக் காலத்தின் அதே  பாரம்பரியத்தோடு தோற்றுவிப்பது என முடிவெடுக்கப் பட்டது. அதன்படி 1970 டிசம்பர் 27 முதல் 30 வரை  கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நான்கு நாட்கள் இம்மாநாடு நடைபெற்றது. சுமார் 600 பிரதிநிதிகள், 500 பார்வையாளர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் “இந்திய மாணவர் சங்கம்” (எஸ்எப்ஐ)தோற்றுவிக்கப்பட்டது. “சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம்” என்ற உயரிய குறிக்கோளோடு, “படிப்போம், போராடுவோம்” என்ற முழக்கத்தை முன்வைத்து பலகட்ட போராட்டங்களை இயக்கங்களை நடத்தியுள்ளது. பள்ளிக்கல்வி முதல் மருத்துவம், பொறியியல், சட்டம், தொழிற்நுட்பம், தொழிற்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி என அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. இடஒதுக்கீடு, பெண்கல்வி, ரேகிங் எதிர்ப்பு, பஸ்பாஸ், கல்வி உதவித்தொகை, விடுதி மாணவர்கள் நலன், அரசுக் கல்லூரிகள் பாதுகாப்பு, சமச்சீர் கல்வி என இன்னும் எத்தனையோ மைல்கல்லை கடந்து இந்திய மாணவர் சங்கம் ஐம்பதாமாண்டில் அடியெடுத்து வைக்கிறது.  கடந்த 21ம் தேதி தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவிடமிருந்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச்செயலாளர் வீ. மாரியப்பனுக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது அதில் “கடந்த திங்கள்கிழமை முதல் குடியுரிமை சட்ட திருத்ததிற்கு எதிராக தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரிகளில் உங்கள் அமைப்புதான் போராட்டம் நடத்தி வருகிறது. அதனால் மற்ற இயக்கங்களும், மாணவர்களும் தன்னெழுச்சியாக தற்போது போராட்டங்களில் இறங்கியுள்ளனர். அடுத்தகட்ட உங்கள் திட்டமிடல் என்ன?” என்று கேட்டனர். அவர்கள் கேட்பது இதுவொன்றும் புதிதான விசயமல்ல. சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிராக, புதியக்கல்வி கொள்கைக்கு எதி ராக, பேருந்து கட்டண உயர்வு, கல்விக் கட்டணக் கொள்ளை, பாலியல் வன்கொலைகள், கல்வி வளாக படுகொலைகள் போன்றவற்றையெல்லாம் எதிர்த்து ஒவ்வொரு போராட்டத்தின் போதும் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட அளவிலான தலைவர்களுக்கு மட்டுமல்லாமல் கிளையளவிலான நிர்வாகிகளுக்கும் இது போன்ற அழைப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.  மாணவர் அமைப்புகள் என்றாலே ஏதேனும் ஒரு கட்சியின் பிரிவாக, தலைவர்களின் ஆணைக்கு காத்தி ருக்கும் மாணவர் அணியாக இல்லாமல், சுயேட்சையான ஜனநாயகப்பூர்வ அமைப்பாக எஸ்.எப்.ஐ துவக்ககாலம் முதல் இன்று வரை இருந்து வருகிறது.
கல்வி வளாகங்கள் எங்கள் கைகளில்தான் 
எனவேதான் ஒட்டுமொத்த இந்தியாவும் வலதுசாரி அரசியலின் பாசிசப் பிடிக்குள் சிக்குண்டு கிடக்கையில் கல்வி வளாகங்கள் மாணவர்களின் போராட்டத்தால் இன்று இடதுசாரி முற்போக்கு மாணவர்களின் கைவசம் இருக்கிறது. பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவையை பல்வேறு அரசியல் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தாண்டு எஸ்.எப்.ஐ கைப்பற்றியுள்ளது. பதிமூன்று ஆண்டுகளுக்கு பின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவையின் தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது. ஹைதரபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் வகுப்பு வாததிற்கு எதிரான முழக்கத்தோடு பேரவை தலைவராக மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளது.  மேற்குவங்கதில் மம்தாவின் காட்டுத் தர்பாரை முறியடித்து ஒன்பதாண்டுகளுக்கு பின் கொல்கத்தா பிரசிடன்சி பல்கலைக்கழகத்தின் அனைத்து பொறுப்பு களையும் எஸ்.எப்.ஐ வென்றுள்ளது. கேரளாவின் அனைத்து மாணவர் பேரவை தேர்தலிலும் வெற்றிபெற்று வரலாற்று சிறப்புமிக்க பங்களிப்பை எஸ்.எப்.ஐ செலுத்தி வருகிறது. ராஜஸ்தானில் 55 கல்லூரிகள், மூன்று பல்கலைக்கழகங்களில் போட்டியிட்டு 21 தலைவர், 41 துணை தலைவர், 19 செயலாளர், 37 இணை செய லாளர் பொறுப்புகளை மாநிலம் முழுவதும் வென்றுள்ளது. அதேபோல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பிரிவினை வாத மதவாத சக்திகளை பின்னுக்கு தள்ளி துணை தலை வர் பதவியை வென்றுள்ளது. குஜராத் பல்கலைக்கழ கத்திலும் அரசின் கல்வி கொள்கைக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்திவருகிறது. மத்திய - மாநில அரசுகளின் மாணவர் விரோத நடவடிக்கைகளால் மாணவர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் அதிகரித்துள்ளது. தற்போதுகூட குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராடிய தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் 10,000 பேர் மீது வழக்கு  புனைந்துள்ளது. மேலும் காவி கார்ப்பரேட் கல்விக் கொள்கையான புதியக்கல்வி கொள்கையின் மூலம் இந்தியாவின் பெரும்பாலான மக்களுக்கான கல்வி  மறுக்கப்படவுள்ளது. கல்விக்கான நிதியை ஜிடிபியில் 2 சதத்திற்கும் குறைவாக குறைப்பது; குலக்கல்வி முறையை  புகுத்தி மூன்றாம் வகுப்பு முதல் பொதுத்தேர்வு, தாய்மொழி வழிக்கல்வியை சிதைத்து மும்மொழிக்கொள்கை, அனைத்து உயர்கல்விக்கும் நுழைவு தேர்வு, தனியாரிடம் கல்வியை ஒப்படைப்பது என கல்வி மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இனம், மொழி, மதத்தை முன்வைத்து மக்களைப் பிரித்து குடியுரிமையைப் பறிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கல்வி, வேலைக்கான மாணவர்களின் பொதுப்போராட்டங்களை திசை திருப்பும் ஆளும் அரசுகளின் இந்நடவடிக்கைகளுக்கு எதிராக மாணவர்களின் ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தில் இன்னுயிர் ஈந்த இந்திய மாணவர் சங்கத்தின் புடம் போட்ட தியாகிகள் சோமு, செம்பு முதல் மதவாதம் தகரட்டும் என முழங்கிய அபிமன்யு வரை 278 மாணவத் தியாகிகளின் கனவை நெஞ்சில் ஏந்தி முழங்குவோம்; இந்தியாவின் மதச்சார்பற்ற முற்போக்கு கல்வியை பாதுகாப்போம் என்று. 26 துண்டுகளாக உடல் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அஸ்ஸாமின் மாணவர் தலைவர் நிரஞ்சன் தாலுக்தார் எழுப்பிய முழக்கத்தை விண்ணதிர மீண்டும் முழங்குவோம் ‘‘இந்தியாவை கூறுபோட விடமாட்டோம்” என்று!

கட்டுரையாளர்: மாநிலத்துணை தலைவர், இந்திய மாணவர் சங்கம்

;