1948 - இந்திய அணுசக்தி ஆணையம் தொடங்கப்பட்டது. இந்திய மண்ணில் குறிப்பிடத்தக்க அளவுக்கு கதிர்வீச்சுத் தாதுக்கள் இருப்பதாக இந்திய புவியியல் அளவை அமைப்பு 1901இலேயே கண்டுபிடித்தாலும், வேறு எந்த நடவடிக்கைகளும் அப்போது மேற்கொள்ளப்படவில்லை. ஹோமி பாபா, ஆர்.எஸ்.கிருஷ்ணன், மேக்னாட் ஷா, தவ்லத் சிங் கோத்தாரி உள்ளிட்ட இந்திய அறிவியலாளர்கள், 1930களில் ஐரோப்பிய அறிவியலாளர்களுடன் இணைந்து, அணு இயற்பியல் ஆய்வுகளில் ஈடுபட்டனர். 1938இல் அணுக்கருப் பிளவு சாத்தியமானதையடுத்து, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசியராக இருந்த மேக்னாட் ஷா, தங்கள் ஆய்வகத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார்.
ஹோமி பாபாவின் முயற்சியில், அவரது உறவினரான ஜே.ஆர்.டி.டாட்டாவின் உதவியுடன், காஸ்மிக் கதிர்கள், அணு இயற்பியல் ஆகியவற்றின் ஆய்வுகளுக்கு முக்கியத்துவமளிக்கும், ‘அடிப்படை ஆய்வுகளுக்கான டாட்டா கல்வி நிலையம்’ 1945இல் உருவாக்கப்பட்டது. ஹிரோஷிமா அணுகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, அவ்வளவு அதிக ஆற்றலை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தினால், மிகப்பெரிய தொழிற்துறை புரட்சியை உருவாக்கலாம் என்று ஆர்.எஸ்.கிருஷ்ணன் கூறினார். பாபாவின் தலைமையின்கீழ், அறிவியல், தொழிற்துறை ஆய்வு வாரியம் 1946இல் உருவாக்கப்பட்டது. தங்கள் பகுதியில் கிடைக்கும் மோனஸைட், இல்மனைட் முதலான தாதுக்களை, அணு சக்திக்குப் பயன்படுத்த திருவாங்கூர் பல்கலைக்கழகம் உருவாக்கிய குழு, அந்த ஆய்வை அகில இந்திய அளவில் செய்யப் பரிந்துரைத்தது.
விடுதலைக்கு முந்தைய தற்காலிக அரசில் தொழில்துறை, நிதி, கல்வி அமைச்சராக இருந்த ராஜாஜி, அணுசக்தி ஆய்வுக்கான ஆலோசனைக்குழுவை 1947 ஜூனில் உருவாக்கினார். இக்குழுவிலிருந்த நாஸிர் அகமத், பிரிவினையின்போது பாகிஸ்தானுக்குச் சென்று, பின்னாளில் அந்நாட்டு அணுசக்தி ஆணையத்தின் தலைவரானார். 1948 மார்ச்சில் நேரு கொண்டுவந்த இந்திய அணுசக்திச் சட்டத்தின்மூலம், ஆகஸ்டில் இந்திய அணுசக்தி ஆணையம் அமைக்கப்பட்டது. இந்திய அரசின் ‘அணுசக்தித் துறை’ 1954இல் உருவாக்கப் பட்டது. ட்ராம்பே அணுசக்தி நிலையம் 1954இல் அமைக்கப்பட்டு, 1967இல் பாபாவின் மறைவிற்குப்பின் பாபா அணு ஆய்வு மையம் என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது. ஆசியாவின் முதல் அணு உலை, இங்கிலாந்தின் உதவியுடன், 1957இல் இந்தியாவில் தொடங்கப்பட்டது. தொடக்ககால அணுசக்தி நிலையங்களுக்கு உதவிய கனடா, 1974இல் நடத்தப்பட்ட அணுகுண்டு வெடிப்பிற்குப்பின், உதவிகளை நிறுத்திவிட்டது.