1291 - பழைய ஸ்விஸ் கூட்டமைப்பு உருவானது. தற்போதைய ஸ்விட்சர்லாந்து நாடு உருவானதற்கு இதுவே முன்னோடியாக அமைந்தது. உண்மையில், உறுதியான கூட்டமைப்பெல்லாம் இன்றி, உதவிக்கொள்ளும் அமைப்பாக மட்டுமே இருந்த இது ‘உறுதிமொழி உறவு’ என்றே அழைக்கப்பட்டது. 12 ஆயிரம் அடிவரை உயரம்கொண்ட ஆல்ப்ஸ் மலைத்தொடரின் நடுப்பகுதிப் பள்ளத்தாக்குகளிலமைந்திருந்த ஊரி, ஸ்விஸ், உண்ட்டர்வால்டன் ஆகிய மூன்று சிற்றரசுகள் இணைந்து இந்த கூட்டமைப்புப் பட்டயத்தை உருவாக்கின. 11-13ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட, விவசாயத்தைக் கடந்த பிற பொருட்களின் உற்பத்தி, வணிகத்தையும், அதற்காக ஆல்ப்ஸ் மலையைக் கடக்கும் தேவையையும் உருவாக்கியது. ஜெர்மானியப் பேரரசரான முதலாம் ரூடால்ஃப், 1291 ஜூலை 15இல் மறைந்ததையடுத்து, ஹாப்ஸ்பர்க் மரபில் அடுத்து வருபவர்கள், முக்கிய வணிக வழியாக விளங்கிய இந்த சிற்றரசுகளைக் கைப்பற்ற முயற்சிக்கலாம் என்ற அச்சத்திலேயே இந்த கூட்டமைப்பு உருவானது.
தடையற்ற வணிகம், அதற்கான பாதைகள் ஆகியவற்றின்மீதிருந்த அக்கறையின் காரணமாக, புனித ரோமப் பேரரசுக்குட்பட்ட மொத்தம் 13 சிற்றரசுகள் பின்னாளில் இந்தக் கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்தன. உபரி உற்பத்தி தொடங்கிய (கிறித்துவுக்கு முந்தைய) காலத்திலேயே வணிகமும் தொடங்கி, தடையற்ற வணிகத்திற்காகவும், வணிகப் பாதைகளின்மீதான கட்டுப்பாட்டிற்குமாகவுமே ஏராளமான கூட்டமைப்புகள், போர்கள் ஆகியவை ஏற்பட்டிருப்பதை வரலாறு முழுவதும் காணமுடியும். பிரெஞ்ச்சுப் புரட்சியின்போது ஸ்விட்சர்லாந்தைக் கைப்பற்றிய பிரான்ஸ் தான் அதற்கு ஒருங்கிணைந்த அரசியல் சட்டத்தை உருவாக்கியது. 1803இல் ஸ்விட்சர்லாந்தின் அரசுத் தலைவர்களனைவரையும் அழைத்துப் பேசிய நெப்போலியன், அப்போதிருந்த 19 சிற்றரசுகளின் கூட்டரசாக மாற்றியமைத்து, தன்னாட்சியும் வழங்கினார். அப்போதுதான், முந்தைய கூட்டமைப்பிற்கு, ‘பழைய’ என்ற முன்னொட்டு சேர்க்கப்பட்டது. அன்றிலிருந்து, மாநிலங்களின்(சிற்றரசுகளின்) தன்னாட்சி உரிமைக்கு மிகுந்த முக்கியத்துவமளிக்கும் கூட்டரசாகவே ஸ்விட்சர்லாந்து விளங்குகிறது. பழைய கூட்டமைப்பைத் தொடங்கியவைகளில் ஒன்றான ஸ்ச்விஸ் என்ற சிற்றரசின் பெயரிலிருந்துதான் ஸ்விட்சர்லாந்து என்ற பெயர் உருவானது. இந்த பழைய கூட்டமைப்பு உருவான ஆகஸ்ட் 1, ஸ்விட்சர்லாந்தின் தேசிய நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.