அரியலூரில் 4 வயது சிறுமியை பரோட்டா சாப்பிட அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி வீட்டின் அருகே கடலை ஆய்ந்து கொண்டிருந்தார். அப்போது தனது குழந்தைகளுடன் விளையாடிய 4 வயது சிறுமியை, பரோட்டா வாங்கியுள்ளதாகவும் அதனை சாப்பிட வீட்டிற்க்கு அழைத்துச் செல்வதாகவும் சிறுமியின் தாய் சமனசுமேரியிடம் கூறி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த தனது குழந்தைகளை வெளியே அனுப்பி 4 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த சிறுமி தனது தாயிடம் மீண்டும் சென்றபோது கால் வலியுடன் இருப்பதை அறிந்த தாய் சந்தேகம் அடைந்து விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் தாய் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதுகுறித்த விசாரணை அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் 26 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனத் தீர்ப்பளித்தார்.