tamilnadu

img

இந்நாள் நவ. 28 இதற்கு முன்னால்

1782 - அமெரிக்கக் குடியேற்றங்கள் அனைத்துக்குமான முதல் நன்றி நவிலல் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான வாஷிங்டனுக்கு முன்பே கணக்கில் வராத ஜனாதிபதிகளாக (இத்தொடரில் 2018 நவம்பர் 5 பார்க்க!) இருந்தவர்களில் ஒருவரும், இரண்டு காண்டினெண்டல் காங்கிரஸ்களுக்கும் பிறகு அமைக்கப்பட்ட ‘கூட்டமைப்பின் நாடாளுமன்றத்தின்’ முதல் தலைவருமான ஜான் ஹேன்சன் இதற்கான அறிவிப்பை, நவம்பர் 3இல் பதவிக்காலம் முடிவடைவதற்குமுன் வெளியிட்டார். நன்றி நவிலல் நாள் என்பது அடிப்படையில் (பொங்கல் போன்ற) ஓர் அறுவடைத் திருநாளாகும்! புதிய உலகத்திற்கு(அமெரிக்காவிற்கு!) வந்த ஆங்கிலேயர்களில் 53 பேர் தங்கள் முதல் நன்றி நவிலலை 1621 அக்டோபரில், 90 அமெரிக்கத் தொல்குடியினருடன் கொண்டாடினர். அமெரிக்காவிலிருந்த குடியேற்றங்கள் தனித்தனியாகக் கொண்டாடிக்கொண்டிருந்த இந்த நன்றி நவிலல் விழாவை, ஒருங்கிணைத்து ஒரே நாளில் கொண்டாடச் செய்வதற்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, முதல் குடியரசுத்தலைவராக வாஷிங்டன் 1789இல் பதவியேற்றபின், தங்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்த கடவுளுக்கு, அவ்வாண்டின் நவம்பர் 26(கடைசி வியாழன்) நன்றி நவிலல் நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று நாடாளுமன்றம் முடிவெடுத்தது. தொடர்ச்சியாக இல்லா விட்டாலும், அரசால் அறிவிக்கப்படுகிற ஆண்டுகளில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த இந்த நன்றி நவிலல் நாள், இறை என்பது உலகின் நடைமுறைகளில் தலையிடுவதில்லை என்ற இயற்கைச் சமயக் கொள்கையுடையவரான தாமஸ் ஜெஃபர்சன் 1801இல் குடியரசுத்தலைவரானபின் அறிவிக்கப்படவில்லை. அவருக்குப்பின் குடியரசுத் தலைவரான ஜேம்ஸ் மேடிசன், 1814இல் இம்முறையை புதுப்பித்தார். மாநிலங்கள் வேறுபட்ட நாட்களில் இதைக் கடைப்பிடித்துவந்த நிலையில், அறிவிக்கப்படாத தேசிய விடுமுறை நாளாக இருந்துவந்த, அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்தின் கடைசிப் படைகள் வெளியேறிய நவம்பர் 25இல் 1847இன் நன்றி நவிலல் நாளை நியூயார்க் கடைப்பிடித்தது வரவேற்பைப் பெற்றது. 1863இல் ஆண்டுதோறும் நவம்பர் கடைசி வியாழன் நன்றி நவிலல் நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்த ஆப்ரஹாம் லிங்கன், அதனைத் தேசிய விடுமுறையாகவும் அறிவிக்க, அதனையொட்டியே வரும் வெளியேற்ற நாள் கொண்டாட்டம் மறைந்தது.

- அறிவுக்கடல்