ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள அதிக வருமானம் பெறும் யூடியூபர் பட்டியலில், அமெரிக்காவை சேர்ந்த 8 வயது சிறுவன் முதலிடம் பிடித்துள்ளார்.
யூ டியூப் சேனல்களை தொடங்கி உலக அளவில் பல பேர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர். பார்வையாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து, அந்த சேனல்களை நிர்வகிப்பவர்களுக்கு யூடியூப் நிறுவனம் பணம் வழங்கும். இந்நிலையில், 2019-ஆம் ஆண்டுக்கான உலக அளவில் அதிக ஊதியம் பெறும் ‘யூடியூபர்ஸ்' பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ரியான்காஜி என்ற 8 வயது சிறுவன் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் ஆண்டுக்கு 26 மில்லியன் (ரூ.184 கோடி) அவனது ஊதியமாக இருக்கிறது.
ரியான் பொம்மைகளுடன் விளையாட்டும் வீடியோ ஒன்றை படம்பிடித்து, அதனை அவருடைய தந்தை யூடியூபில் பதிவிட்டிருக்கிறார். பின்னர், அந்த வீடியோவை பதிவிட்ட நான்கே நாட்களில், சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அந்த பதிவை பார்த்திருந்தனர். இதையடுத்து, கடந்த 2015-ஆம் ஆண்டு சொந்தமாக ‘ரியான்ஸ் வேர்ல்ட்' என்ற யூடியூப் சேனலை தொடங்கி, ரியானின் வீடியோக்களை அவர் பதிவிட்டு வருகிறார். பதிவிடப்படும் வீடியோக்களை, லட்சக்கணக்கானோர் பார்த்து வருவதால் அவருக்கு யூடியூப் நிறுவனம் மாதந்தோறும் கோடிக்கணக்கில் பணம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.