புதுச்சேரி, மார்ச் 17- புதுச்சேரியில் 38 ஆண்டுக்கு பிறகு 2006-இல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் 2011ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தனர். அதன் பிறகு கடந்த 11 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தர விட்டது. இதையடுத்து மாநில தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டு தேர்தலுக்கான அனைத்து பணிகளும் நடந்தது. கடந்த ஆண்டு 2 முறை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி தேர்தலை நடத்தக் கோரி அரசியல் கட்சியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் இடைக்கால தடை விதிக்கப்பட்டு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. புதுவை அரசு ஓய்வு பெற்ற நீதிபதி சசிதரன் தலைமையில் இட ஒதுக்கீடு வழங்க ஆணையம் அமைத்து ஆய்வு செய்து வரு கிறது. இந்நிலையில் வழக்கு தொடர்ந்த அரசியல் கட்சியினர் வழக்கை வாபஸ் பெற்றனர். இத னால் தேர்தல் நடத்துவதற்கான இடைக்கால தடை நீங்கியது. இதை யடுத்து மீண்டும் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் நடவடிக்கைகளை துரிதப் படுத்தியது. அனைத்து அரசியல் கட்சி கூட்டத்தை மாநில தேர்தல் ஆணையம் நடத்தியது. பின்னர் நகராட்சி, கொம்யூன் வாரியாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியும் நடந்து வருகிறது.
இதனிடையே திமுக அமைப்பா ளர் சிவா, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த சில வாரத்துக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம் காலதாமதமின்றி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்தது. இந்த வழக்கு இந்த மாதம் இறுதி யில் விசாரணைக்கு வருகிறது. இதனிடையே 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற மே மாதம் பொதுத்தேர்வு அறி விக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில்தான் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். பள்ளி ஆசிரியர்கள் தான் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்றுவர். இதை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தின் 2ஆவது மாடியில் உள்ள கருத்தரங்கு அறையில் மாநில தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் தலைமையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் வியாழனன்று (மார்ச் 17) நடைபெற்றது.