states

அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாக ஒதுக்கீடு அறிவிப்பை திரும்பப்பெற சிபிஎம் வலியுறுத்தல்

புதுச்சேரி, டிச.3- மருத்துவ மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீடு என்ற அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசு வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:- புதுச்சேரி மாநிலத்தில், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் பல தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வந்தாலும், நடுத்தர மற்றும் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு எட்டாகனியாகவே இருந்து வந்தது. இதனையடுத்து, ஏழை,எளிய  மாணவர்கள் மருத்துவம் பயில வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி 2010ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.  இந்த நிலையில், ஒன்றிய பாஜக அரசு நீட் என்னும் ஆட்கொல்லி தேர்வு முறையை அறிமுகப்படுத்தி ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை முற்றிலுமாக சிதைத்தது.  மறுபுறத்தில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் பல்வேறு பெயர்களில் மாணவர்களிடம் கட்டணக் கொள்ளையை நடத்தி தங்களது லாபத்தை அதிகரித்து வருகிறது.  இந்த சூழ்நிலையில் புதுச்சேரி மாணவர்களின் மருத்துவக் கனவுக்கு ஒரே நம்பிக்கையாக இருந்து வருவது இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மட்டுமே.

 இன்றளவும் அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் அதிக அளவு வெற்றி பெற முடியாமல் தவிக்கின்றனர். வசதி படைத்தவர்கள் இரண்டு, மூன்று பயிற்சி வகுப்பில் சேர்ந்து வெற்றி பெற்று விடுகின்றனர். ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவ்வாறான பயிற்சி பெற வசதியும் இல்லை வாய்ப்பும் இல்லை. எனவே தான், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியை  அரசு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கதிர்காமம் இந்திர காந்தி அரசு மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கை பொறுத்தவரையில் சென்டாக் (கலந்தாய்வு) மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 180 இடங்களில் 27 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடகவும் 22 இடங்கள் என்.ஆர் .ஐ இடங்களாகவும், மீதமுள்ள 131 இடங்கள் அரசு ஒதுக்கீடாகவும் நிறப்படுவது வழக்கம்.  இதில் பெரும்பாலும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களும்,அரசு ஒதுக்கீட்டு இடங்களும் நிரம்பி விடும். என்ஆர்ஐ ஒதுக்கீட்டு இடங்களில் ஒரு சில இடங்கள் நிரப்பப்பட வாய்ப்பில்லாத போது அது அரசு ஒதுக்கீட்டு இடங்களாக மாற்ற பட்டு நிரப்படுவது வழக்கம்.  ஆனால், இந்தக் கலவி ஆண்டில் அது தனியார் மருத்துவக் கல்லூரிகளை போன்று நிர்வாக ஒதுக்கீடு என்ற முறையில் நிரப்ப அறிவிப்பை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரியது.

 அரசு மருத்துவ கல்லூரி நடத்துவது லாபத்தை ஈட்டுவதற்கு அல்ல என்பதை புதுச்சேரி முதலமைச்சர் உணரவேண்டும்.  நிர்வாக ஒதுக்கீடு என்ற முறையை அமல்படுத்தினால் எதிர்காலத்தில் புதுச்சேரி மாணவர்களின் மருத்துவக் கல்வி கேள்விக்குறியாகும், வசதி படைத்த பிற மாநில மாணவர்களை கொண்டு இயங்கும் சூழ்நிலை உருவாகும். ஏற்கனவே தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொள்ளையடித்து கொண்டிருக்கும் போது அரசு கல்லூரியையும் அதே திசையில் கொண்டு செல்லும் முடிவு தவறானது.  சென்டக்  என்ற அமைப்பு அனைத்து தரப்பட மாணவர் சேர்க்கையும் செய்து வருகிறது. ஆனால் அதற்கான முறையான கட்டமைப்பு இல்லை, வெளிப்படைத்தன்மை இல்லை என்ற கருத்து பொது மக்கள் மத்தியில் பெரும் மன உளைச்சலை உண்டாக்கி வருகிறது. மருத்துவ சேர்க்கைக்கான பதிவு செய்யும் நேரம் முடிந்த பின்பு பெயற்பட்டியலை வெளியிட்டு மீண்டும் பதிவு செய்ய திறந்து வைப்பதும், முடிவுகளை வெளியிடாமல் காலம் தாழ்த்துவதும் சென்டாக் நிர்வாகத்தின் மீது பல சந்தேகங்களை எழுப்புகிறது. வெளிப்படை தன்மையோடு சென்டக்  செயல்பட வேண்டும்.  அதேபோல் நிறப்பமுடியாத இடங்களை அரசு ஒதுக்கீட்டில் புதுச்சேரி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் மற்றும் சென்டக் நிர்வாகத்தின் தலைமையை மாற்றி நிர்வாகத்தை சரி செய்திட வேண்டும் என்று புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு ராஜாங்கம் தெரிவித்திருக்கிறார்.

;