சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை பீகார் அரசு இன்று வெளியிட்டுள்ளது.
பீகாரில் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அரசு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 7-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை முதற்கட்ட சாதிவாரி கணக்கெடுப்பும், ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் மே மாதம் 15-ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தியது.
இதனை தொடர்ந்து, பீகார் அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, பீகார் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 13 கோடியே 7 லட்சத்து 25 ஆயிரத்து 310 பேர் உள்ளனர். இதில், 3 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 936 பேர் (27.1286 % ) பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். 4 கோடியே 70 லட்சத்து 80 ஆயிரத்து 514 பேர் (36.0148%) பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். 2 கோடியே 56 லட்சத்து 89 ஆயிரத்து 820 பேர் (19.6518 %) பேர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். 21 லட்சத்து 99 ஆயிரத்து 361 பேர் (1.6824 %) பேர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். 2 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்து 679 பேர் (15.5224%) பேர் பொது பிரிவை சேர்ந்தவர்கள்.