states

img

பஞ்சாப் முன்னாள் அமைச்சர் பாஜக-விலிருந்து நீக்கம்.... வேளாண் சட்டங்களை எதிர்த்ததால் நடவடிக்கை....

சண்டிகர்:
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சர் அனில் ஜோஷி பாஜக-வில் இருந்து 6 வருடங்களுக்கு நீக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப்பில் பாஜக - அகாலி தளம் கூட்டணி ஆட்சியின்போது, உள்ளாட்சி துறை அமைச்சராகப் பணி புரிந்தவர் அனில் ஜோஷி. இவர்,3 வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் மேம்பாட்டிற்கானதுதான் என்று நம்மால் (பாஜக-வால்) விவசாயிகளை நம்ப வைக்க முடியாமல் போய்விட்டது. இந்தச் சூழலில், சச்சரவை அதிகரிக்காமல், மூன்று சட்டங்களையும் ரத்து செய்து விஷயத்தை முடிவுக்குக் கொண்டு வருவதுதான் சரியானதாக இருக்கும்” என்று கூறினார். “எந்தவொரு அரசாங்கமும் இந்தப் பிரச்சனையை நீண்ட காலத்திற்கு நகர்த்திக் கொண்டு செல்வதுவிவேகமானதல்ல. பஞ்சாப் ஏற்கெனவே 80 மற்றும் 90-களில் பெரிய அளவிலான வன்முறைகளைக் கண்ட மாநிலம். அப்போது எனது தந்தையையே நான் இழந்தேன். சில சக்திகள் போராட்டத்தை தவறான திசையில் கொண்டு சென்றால் யார் பொறுப்பு? அதன் ஒரு காட்சியை குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் ஏற்கெனவே நாம் பார்த்து விட்டோம். எனவே, இந்த பிரச்சனை எந்த வகையிலாவது தீர்க்கப்பட வேண்டும்” என்றும் அவர் பதிவு செய்திருந்தார்.

தனது கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரே இவ்வாறு கருத்து தெரிவித்தது, பாஜகவுக்கு அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. அனில் ஜோஷிக்கு நோட்டீஸ் அனுப்பி, பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. ஜோஷியும் அதற்குப் பதிலளித்திருந்தார். எனினும் ஜோஷியை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக பாஜக மாநிலச் செயலாளர் சுபாஷ் சர்மா அறிவித்துள்ளார். தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக பேட்டி அளித்துள்ளஅனில் ஜோஷி, “கடந்த 35 ஆண்டுகளாக நான் பாஜக-வில் இருக்கிறேன். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்ததற்காக இந்த தண்டனையை பெற்றுள்ளேன். தொடர்ந்து விவசாயிகளை ஆதரிப்பேன்” எனக் கூறி உள்ளார்.

;