2024-25 ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, 2024 ஜூன் 21 அன்று விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயப் பொருளாதார நிபுணர்களுடன் நிதி அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக எங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறது. மிகவும் கூர்மையடைந்துள்ள விவசாய நெருக்கடியைத் தீர்ப்பதற்காக சில முன்மொழிவு களை சம்யுக்த கிசான் மோர்ச்சா அரசாங்கத்திற்கு அளித்திருக்கிறது. விவசாயிகள் சங்கங்களின் மத்தியில் மிகப்பெரிய சங்கமாக விளங்கும், அகில இந்திய விவசாயிகள் சங்கம், குறுவை மற்றும் சம்பா அறுவடைக் காலங்களில் குறைந்தபட்ச ஆதார விலையைத் தீர்மானிப்பதற்காக, வேளாண் பொருள்கள் உற்பத்திச் செலவினம் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் (Commission for Agricultural Costs and Prices for determining Minimum Support Prices for Rabi and Kharif season) முன்பு சில முன்மொழிவுகளை அளித்திட எப்போதும் அழைக்கப்படும். எனினும், இப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கமும், நிதி அமைச்சரும் சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைமையையோ அல்லது அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகளையோ இந்தக் கூட்டத்திற்கு அழைத்திடவில்லை. கேலிக் கூத்தான அணுகுமுறை இப்போது ஆட்சி அமைத்திருக்கும் அரசாங்கம் தொடர்ந்து வேண்டுமென்றே விவசாயிகளின் உண்மையான பிரதிநிதிகளை அழைத்திடாமல், ஒரு கேலிக்கூத்தான நடவடிக்கையில் ஈடுபடும் அணுகுமுறையையே தொடர்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. இந்த அணுகுமுறையை அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது. அரசாங்கம் சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைமையுடன் பேச வேண்டும் என்று கோருகிறது. சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 159 தொகுதிகளில் பலத்த அடிவாங்கியுள்ள நிலையில், அதிலிருந்து படிப்பினைகளைக் கற்று, தன் ஆணவப்போக்கைக் கைவிட்டு, திறந்த மனதுடன் அனைத்துத்தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு இதுவே சரியான தருணமாகும். இத்தகைய நடவடிக்கையில் அரசாங்கம் இறங்காமல் போனால், மிக விரைவில் அது விவசாயி களின் மாபெரும் அணிவகுப்பை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டியிருக்கும்.