டெல் அவிவ், ஜூன் 29- சீர்திருத்தம் என்ற பெயரில் நீதித்துறையை சீரழிக்கும் இஸ்ரேலிய அரசின் கொள்கைகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இஸ்ரேலிய உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையிலான அம்சங்கள் கொண்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. அவற்றை நடைமுறைப்படுத்தும் பணிகளையும் தொடங்கி விட்டார்கள். வலதுசாரிகளைத் திருப்திப்படுத்த பல்வேறு திருத்தங்களை புதிய மசோதாவில் சேர்த்துள்ளனர். பல்வேறு குற்றங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நீர்த்துப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோசமான சட்டத்திற்கு எதிராகக் கடந்த 25 வாரங்களாக இஸ்ரேலிய மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். “ஒன்றுபட்ட சகோதரர்கள்” என்ற சமூக அமைப்பு போராட்டத்தை ஒருங்கிணைத்து வருகிறது. மக்களின் கருத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் கொள்கையை நடைமுறைப்படுத்த அரசு முற்பட்டுள்ளதால் சில இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. அந்நாட்டின் உள்துறை அமைச்சரான யாரிவ் லெவின் வீட்டை முற்றுகையிடப் போவதாகப் போராட்டக்காரர்கள் அறிவித்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகக் காவல்துறையால் அறிவிக்கப்பட்டது. அனைத்துத் தடைகளையும் மீறி மக்கள் முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளார்கள். இந்த நாசகரச் சட்டத்தை அவர்தான் வடிவமைத்தார் என்பதால்தான் இந்த முற்றுகைப் போராட்டத்தை நடத்தியதாக போராட்டக்குழு தெரிவித்திருக்கிறது.